சென்னையின் அதிகாலை முகம்...

Wednesday, April 28, 2010



ஒருநாள் நான் காலை 5 மணிக்கு என் ஊரில் இருந்து சென்னை வந்து சேர்ந்தேன். அந்த அதிகாலை நேரத்து நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..

சென்னையின் அதிகாலை முகம் எப்படி இருக்கும் என்று நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. ஏனென்றால் அப்போது நாம் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்போம்.. எனக்கு சென்னையின் அதிகாலை முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் பலமுறை கிடைத்துள்ளது.. அப்போது நான் சந்தித்த அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்..


  • சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் பெரும்பாலும் 4 அல்லது 5 பயணிகளை மட்டுமே சுமந்து சென்றுக் கொண்டிருக்கிறது..

  • சாலையில் மின்விளக்குகள் சூரிய வெளிச்சத்தோடு சண்டைப்போட்டு தங்கள் ஒளியை இழந்துக் கொண்டிருக்கிறது..

  • அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன..

  • பேருந்து நிறுத்தங்களில் மக்கள் தங்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்..

  • சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டிருக்கும் போக்குவரத்து விளக்குகள் மஞ்சள் நிற விளக்கை மின்மினி பூச்சிபோல் ஒளிரவிட்டுக் கொண்டிருக்கிறது..

  • சூரியன் FM ஒலித்தபடி டீ கடையில் இருக்கும் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு டீ கடைக்காரர்..

  • செய்திதாள்களை ஏரியா வாரியாக பிரித்து வைத்து அடுக்கிக் கொண்டிருக்கின்றனர் செய்தித்தாள் வணிகர்கள்..

  • அதிசயமாய் வானில் குருவிகளும் இன்னும் சில பறவைகளும் வட்டமடித்து சிறகை விரித்துக் கொண்டு பறந்துக் கொண்டிருக்கிறது..

  • மாசுப்படாத மெல்லிய காற்று என் நுரையீரலை தீண்டிச் செல்கிறது.. நான் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு அதை ரசித்துக்
    கொண்டே பயணிக்கிறேன்..

  • ஒருசில ஹோட்டல்கள் மும்முரமாய் இட்லியை வேகவைத்தும் சட்னியை தயார் செய்தவண்ணம் உள்ளன..

  • கோயில்களில் சுப்ரபாதமும், இன்னும் சில கோயில்களில் கந்த சஷ்டி கவசமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

  • சவாரிகளைத் தேடி பல ஆட்டோக்கள் சாலையை வட்டமடித்துக் கொண்டிருக்கின்றது..

  • ஏதோ அவசரம் போல.. ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக காற்றை கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது..

  • நிலவு நம்மிடம் போய் வருகிறேன் என்று சொல்லி தற்காலிகமாக விடை பெறுகிறது..

  • இதோ உன்னைக் காண வந்துவிட்டேன் என்று சொல்லியபடி, சூரியன் கடலில் இருந்து துயில் எழுகிறான்..

  • சாலையின் ஓரத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றனர் சில வயதான பெரியவர்கள்..

  • கூலி வேலைக்கு செல்பவர்கள் சைக்கிளில் தங்கள் வேலைக்கு புறப்பட்டு செல்கின்றனர்..

  • தன் மனைவி சொல்லி அனுப்பிய அனைத்து காய்கறிகளையும் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கிறார் ஒரு பொறுப்பான இல்லத்தரசன்..

  • கடைக்கு வந்திருக்கும் சரக்கை கடையில் இறக்கிவைப்பதில் குறியாய் வேலைசெய்துக் கொண்டிருக்கின்றனர் நம் உழைக்கும் வர்க்கத்தினர்..

  • இப்போதுதான் விழித்திருக்கும் போல.. ஒரு சின்னஞ்சிறிய நாய்குட்டி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறது..

  • புதிதாய் வாங்கிய தன் வண்டியை துடைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்..

  • குப்பைகளை சுமந்துக்கொண்டும், அதில் பாதியை வீதியில் தூவிக்கொண்டும் விரைந்து சென்றுக் கொண்டிருக்கிறது சென்னை மாநகரின் குப்பை வண்டி..

  • தண்ணீரை சாலையில் தெளித்து, சாலைக்கு தண்ணீர் அபிஷேகம் நடத்தியவாறே வேகமாய் சென்றுக் கொண்டிருக்கிறது தண்ணீர் லாரி..

  • ஒரு கையில் மதிய உணவுடனும், இன்னொரு கையில் Handbag உடனும் தன் கம்பெனி வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி..

  • சென்னை நகரம் முழுவதும் இயந்திர வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது..

ஆம்.. அதிகாலை வந்துவிட்டது.. அனைவரும் தங்களின் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுழல தயாராகிக்கொண்டிருக்கின்றனர்..

இன்னும் இதுப் போன்ற எனது அதிகாலை அனுபவத்தை அடுத்த பதிவில் வெகுவிரைவில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

அன்புடன் -







தினேஷ்மாயா 

2 Comments:

இளங்குமரன் said...

வணக்கம் தினேஷ்மாயா. தங்கள் பதிவுகள் படித்தவரை அருமை. காலைப் பதிவு. மிகவும் நன்றாக உள்ளது. ஒரு காலக்கட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவாகப் பயன்படும்.

நிறைய எழுதுங்கள் மகிழ்ச்சி.

இளங்குமரன்
நிறுவனர்
எழுத்தேணி அறக்கட்டளை

தினேஷ்மாயா said...

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.. உங்கள் கருத்துக்கள் என்னை இன்னமும் எழுத தூண்டுகிறது. உங்கள் ஆசியுடன் தொடர்வேன் என் எழுத்துப் பயணத்தை....

என்றும் அன்புடன் -
தினேஷ்மாயா...