அவனருளாலே அவன் தாள் வணங்கி

Friday, March 22, 2019







 அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், திருக்கல்யாண உற்சவம் இன்று காணும் பாக்கியம் பெற்றேன். இங்கே வந்து முப்பது ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த நொடியில் அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறு பெற்றேன் இன்று.

ஓம் சிவ சிவ ஓம்

* தினேஷ்மாயா *

காதலி

Wednesday, March 13, 2019


உலகில் இருக்கும் பலரால் காதலிக்கப்பட்ட காதலி இவள்

இந்த நிலாப்பெண் !!

* தினேஷ்மாயா *

10948




இன்றுடன் நான் இங்கே அவதரித்து 10948 நாட்கள் ஆகிறது. இன்னும் சில நாட்களில் 30 வயதை எட்டி பிடிக்கப்போகிறேன். முப்பது ஆண்டுகள் !! நிச்சயம் நான் இதை திரும்பி பார்த்தே ஆகவேண்டும்.

இந்த முப்பது ஆண்டுகளில் வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்ததை வைத்துதான் இனி வாழப்போகும் வருடங்களை கடக்க உறுதுணையாக இருக்கும் என்பதை நன்கு அறிவேன். இதுநாள்வரையில் நான் பெற்ற அனுபவங்களை இங்கே பதியலாம். ஆனால், அதை இங்கே வலையில் பதிவதைவிட இன்னும் சில ஆண்டுகளில், ஒரு பெரிய சாதனையை செய்துவிட்டு அதன்பின் ஒரு புத்தகமாகவே பிரசுரிக்கலாம் என்றிருக்கிறேன்.

அனுபவமே ஒருவனுக்கு சிறந்த ஆசான் என்பது எத்துனை உண்மை என்பதை இத்தனை ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவங்களை நினைத்துப்பார்க்கையில் உணர்கிறேன்.

அனுபவங்கள் மட்டுமல்ல, அவமானங்களும், தோல்விகளும், சில துரோகங்களும், பல வலிகளும், பற்பல ஏமாற்றங்களும், பல ஆண்டு தனிமையும், எண்ணிலடங்கா இரவு நேர அழுகைகளும், பசியும்,  பணமில்லா நாட்களும், தூக்கம் தொலைத்த இரவுகளும், சொல்லாத ஏக்கங்களும், ஆறுதல் சொல்ல யாருமில்லாத அந்த கொடுமையான வாழ்க்கையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நிறைய ... நிறைய நிறைய...

பல தவறுகளை செய்திருக்கிறேன். சில தப்புகளையும் செய்திருக்கிறேன். பல தெரியாமல் செய்துவிட்டு பின்னர் தவறு என்று உணர்ந்தது. சில, செய்யும்போதே தப்பு என்று தெரிந்தே செய்தது. இந்த தவறுகளும் தப்புகளும் சொல்லி கொடுத்த பாடங்கள் ஏராளம்.


யார் விதைத்ததோ தெரியவில்லை, ஆழ்மனதில் சிறுவயதில் இருந்தே IAS ஆகவேண்டும் என்பது கனவு / இலட்சியமாக ஆகிவிட்டது. அதனால், படிக்கும் காலத்தில் இருந்தே அதைநோக்கியே பயணப்பட ஆரம்பித்துவிட்டேன். பள்ளிப்பருவத்தில், விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்றும் கனவு இருந்தது. அதற்காக என் முதுநிலை பட்டபடிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். ஆனால், மேற்படிப்பு படித்தால் மட்டுமே நாசா, இஸ்ரோ போன்ற இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், மேற்படிப்பை தொடராமல், IAS  தேர்விற்கு படிக்க ஆரம்பித்துவிட்டேன். கிடைத்த ஒரு அரசு வேலையையும், ஒரு தனியார் நிறுவன வேலையையும் வேண்டாம் என்று உதறிவிட்டு என் இலட்சியத்தை நோக்கி நடக்க துவங்கினேன். அன்று நான் எடுத்த அந்த முடிவுதான் இன்று என் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றியிருக்கிறது என்றும் சொல்வேன். நாம் எடுக்கும் முடிவுகள்தாம் நம் வாழ்க்கை எப்படி செல்ல வேண்டும் என்கிற திசையை தீர்மானிக்கிறது என்று புரிந்துக்கொண்டேன்.

வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருமானத்தை கொடுக்கும் ஒரு நல்ல அரசு வேலையில் என்னை தற்காலிகமாக இருத்திக்கொண்டு என் இலட்சியத்தை நோக்கிய என் பயணத்தை முன்னெடுத்து சென்றுக்கொண்டிருக்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதுபோல், கல்வி மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே சொத்து. அதுவே என்னை இந்நிலைக்கு உயர்தியுள்ளது. 

வாழ்க்கை எனக்கு என்ன கற்றுகொடுத்தது என்றால், வாழ்க்கை பயணம் இனிமையானது. மிகவும் இனிமையானது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஆம் !! எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க பல விஷயங்களையும் வாழ்க்கை கொடுக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் கஷ்டப்பட பல விஷயங்களையும் சேர்த்தே கொடுக்கிறது வாழ்க்கை. 

ஆக !! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒரு குறுகிய காலத்தில் உணரும்படி என்னை என் வாழ்க்கை வழிநடத்தியிருக்கிறது என்பதில் பெருமை எனக்கு.


இசையும், இயற்கையும், இறைவனும், அன்பும், என் சிந்தனையும் கற்பனையும் என் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கங்கள். 


இன்னும் இங்கே சொல்ல நிறைய நிறைய் இருக்கு. ஆனால், அனைத்தையும் கோர்வையாக சொல்லவிடாமல் சோர்வு என்னை தாக்குகிற காரண்த்தால், தற்காலிகமாக விடைபெறுகிறேன். விரைவில் இந்த பதிவை தொடர்கிறேன்.

* தினேஷ்மாயா *