நான் யார் ?

Wednesday, September 14, 2022



 ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார். அவரின் வரிகளுக்கேற்ப, நான் வளர வளர என் அறிவும் வளர்வதை நான் உணர்கிறேன். படிப்பறிவும், பட்டறிவும் என்னை வளர்ப்பதை உணர்கிறேன்.

    என் சிந்தனைகள் நன்னெறிப்படுவதையும், செயலும் அவ்வாறாக பயணப்படுவதையும் உணர்கிறேன். கோபம் குறைந்திருக்கிறது. பொதுவாகவே எனக்கு கோபம் வராது. எப்போதாவது வரும் கோபமும் குறைந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் உற்று கவனித்து அனுபவித்து நானும் நகர்கிறேன். பொதுவாகவே பொறுமைசாலியான நான், இப்போது மிகவும் பொறுமையை கடைப்பிடிக்கிறேன். அவசர அவசரமாக செயல்படாமல், நின்று நிதானமாய் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்வதாய் உணர்கிறேன்.

என் சிந்தனைகள் புதுமையான பாதையில் என்னை அழைத்து செல்வதையும், அங்கே நான் பல கேள்விகளை எழுப்பி, நானே என்னையும், நான் கண்டது கேட்டது என அனைத்தையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி அதற்கான விடையையும் காண்கிறேன்.

என் சிந்தனையின் வாழ்க்கைப் பயணத்தை இங்கே கொஞ்சம் அசைப்போட விரும்புகிறேன். 

நானும் சிறுவயது முதலே இறை நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருந்தேன். 2020-ம் ஆண்டுவரையிலும்கூட ஒரு பக்திமானாக இருந்தவன். முருகன் பிடிக்கும். அண்ணாமலையாரை என் அப்பனாகவே பாவித்து வந்தவன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றவன். என் வலைப்பக்கத்தில் இருக்கும் முந்தைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் என் பக்தியின் ஆழம். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சார்லஸ் டார்வின் சொல்வது போல Evolution எனக்குள் துவங்கியது. Buddha, Confucius, Aristotle, Socrates, Plato, Periyar, Ambedkar, Karl Marx, Voltaire, Rousseau, Machiavelli, Friedrich Nietzsche, Richard Dawkins, Charles Darwin, Sigmund Freud, Arignar Anna இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களின் தத்துவங்களை படிக்கவும் கேட்கவும் வாய்ப்பு அமைந்தது (Lockdown சமயத்தில்)

இவர்களின் படைப்புகள் அனைத்தையும் நான் படிக்கவில்லையென்றாலும், அவர்களின் சித்தாந்தங்களை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிறைய படிக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறத்துவங்கினேன். என் நம்பிக்கைகளை நானே கேள்வி கேட்கத் துவங்கினேன். முதலில் அடிப்பட்டது என் இறை நம்பிக்கை. இதுநாள் வரை - சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இறைவனைத் தேடி பல பாதைகளில் பயணப்பட்டிருக்கிறேன். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், சித்தர் வழிபாடு மார்க்கம், இப்படி பல பாதகள். அனைத்திலும் தேடிக்கிடைக்காத இறைவன், நான் என்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்துவிட்டான். ஆம். இறைவன் என்னுள் இருக்கிறான் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. என் இறை பயணத்தில் கிடைத்த அனுபவமும், மேற்கூறிய சிந்தனையாளர்களின் சீறிய சிந்தனைகளும் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

கடவுள் என்ற ஒருவர் இல்லை என்கிற உண்மைதான் அது. ஒருவர் தன் நம்பிக்கைக்கு உருவம் கொடுத்தோ/கொடுக்காமலோ ஒரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். அதுவே கடவுள்.

என் நண்பர்கள் / குடும்பத்தார் மத்தியில் நான் தீவிர ஆன்மீகவாதியாக அறியப்பட்டவன். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளாக நாத்திகனாக மாறியதாக அவர்கள் உணர்கிறார்கள். ஒருமுறை என் நண்பன் கேட்டான்.

மச்சி.. உனக்கு இப்போ கடவுள் நம்பிக்கை இருக்கா ? என்று.

நான் சொன்னேன். கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான் என்று. நான் சொன்னது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்காச்சும் புரிகிறதா !!

இயற்கை எனக்குக் கொடுத்த பாலினம் - ஆண் என்கிற அடையாளம். எனக்கு சூட்டப்பட்ட பெயர் பிறர் என்னை அடையாளம் கண்டுக்கொள்ள. அதைத்தவிர, என் மீது திணிக்கப்பட்ட சாதி, மதம், இனம் இவ்வாறான அடையாளங்களால் நான் அறியப்பட விரும்பவில்லை. அது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா ?

இங்கே பிறக்கும் அனைத்து மனித குழந்தைகளும் நாத்திகராகவே பிறக்கின்றன. சாதி மதம் இனம் இப்படி எதுவும் அறியாத குழந்தைகள். அவற்றிற்கு சாதியை திணித்து, மதத்தை புகுத்தி அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் நாமே ஒரு கோடு போட்டு அதில் நடக்க சொல்கிறோம். நாமும் சுயமாக சிந்திப்பதில்லை, நம் குழந்தைகளையும் சுயமாக சிந்திக்க விடுவதில்லை.

ஆயிரம் கிலோ எடைக்கொண்ட ஒரு கல்லை எந்த  மனிதனாலும் தூக்க முடியாது. இது நம் அறிவுக்கு நன்கு தெரியும். ஆயினும், அனுமன் ஒரு மலையையே தன் கையால் தூக்கிக்கொண்டு பறந்தான் எனவும், கண்ணன் தன் சுண்டுவிரலால் ஒரு மலையையே தூக்கி நிறுத்தினான் என்பதையும் இங்கே மக்கள் நம்பவே செய்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்று எவரும் கேள்வி கேட்பதில்லை. தெய்வகுற்றம் ஆகிவிடும் என்று அச்சமோ !

அனைத்து மதங்களிலும் மூடநம்பிக்கை பரவிக்கிடக்கிறது. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறதென்றால், இந்நேரம் உலகமே ஒரு சொர்க்க பூமியாக மாறியிருக்க வேண்டுமே ! ஏன் அப்படி இல்லை ?

இங்கே மதம், சாதி, இனம், மொழி என பல பிரிவினைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவை ஒரு வகைப்படுத்துதலுக்காக மட்டுமே பயன்பட்டாலும், இன்று அவற்றை மையமாக வைத்து உலகம் முழுவதும் பல அரசியல் நடக்கிறது. அதில் பெரும்பாலான மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். அவர்கள் சிக்கியிருப்பது ஒரு மாயவலை என்பதை அறியாவண்ணம் இருக்கின்றனர்.

அவற்றில் இருந்து வெளியே வாருங்கள். நாம் அனைவரும் மனிதர்கள். , நமக்கு கிடத்த அடையாளங்கள் அல்லது திணிக்கப்பட்ட அடையாளங்களை விட்டு வெளியேறுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை மட்டுமே விதைப்போம். அன்பையே அறுவடை செய்வோம். அன்பை பரிமாறிக்கொள்வோம். 

அன்பு பேரன்பாக மாறும்போது நீங்கள் தேடும் அந்த இறைவன் உங்களிடம் வந்திருப்பான். நான் இறைவனை தேடியதில் எனக்கு கிடைத்தது இரண்டு.

1. இறைவன் இல்லை என்கிற உண்மை !!

2. இறைவனை அடைவதைவிடுத்து நானே இறைத்தன்மையை அடைந்தது !!

அன்பே சிவம் என்கிறார் திருமூலர் சித்தர்.

அன்பே உங்கள் பிரதான கொள்கையாக இருக்கும்போது, நீங்களே அந்த சிவனாக மாறிவிடுவீர்கள்.

நான் சொன்னது கொஞ்சமாச்சும் புரிந்ததா !?

புரிந்தால் மகிழ்ச்சி.

புரியவில்லையென்றாலும் மகிழ்ச்சி.

இதில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் மகிழ்ச்சி.

ஆனால், நான் சொன்னதை புரிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் வாருங்கள். விவாதிப்போம். கலந்து பேசுவோம். என்னால் முடிந்தவரை என் அறிவையும் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன். நான் இருக்கும் பேரின்ப நிலையை நீங்களும் அடைய உதவுகிறேன்.

- பேரன்புடன்

* தினேஷ்மாயா * 

ஆசிரியர் தினம்

Monday, September 05, 2022

 நான் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொரும் எதையாவது எனக்கு கற்றுகொடுத்துள்ளனர்.


நான் கற்றதில் சரிபாதி இயற்கையும், விலங்குகளும், பூச்சிகளும், மரங்களும், பூக்களும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளன. 


என்னை நன்னெறிப்படுத்திய (மேற்கூறிய) அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள் 🖤❤️💙


* தினேஷ்மாயா *