உன் உயிர்

Monday, August 24, 2020

 

அரசாங்கம் தளர்வுகள் அறிவித்துவிட்டது..

ஈ-பாஸ் திட்டம் கைவிடப்பட்டது..

பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்..

கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம்..

இதுபோன்ற விடயங்களைக் கண்டு நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

உண்மையில் கொரோனாத் தொற்று முழுவதும் குறையவில்லை, கட்டுக்குள்ளும் வரவில்லை..

உன் வாழ்க்கை உன் கையில் என்று சொன்ன காலம் போய்,

உன் உயிர் உன் கையில் என்றாகிவிட்டது..

* தினேஷ்மாயா *

இலவசம்

Saturday, August 22, 2020


 பிறர்மீது


அளவற்ற அன்பு


எல்லையற்ற கருணை -  செலுத்துபவரா நீங்கள் ?


இதோ வாருங்கள் -


துயரமும் துன்பமும்


உங்களுக்கு இலவசம் !!


* தினேஷ்மாயா *

ஓர் சந்தர்ப்பம்

 

மனம் கசிந்து

ஒட்டுமொத்த கண்ணீரும்

தீரும்படி அழ வேண்டும்..

அப்படியோர் சந்தர்ப்பம்

எங்ஙனம் வாய்க்கும் ?!

* தினேஷ்மாயா *

விநாயக சதுர்த்தி

 


* தினேஷ்மாயா *

இவர்கள் இப்படித்தான் ?!


இந்த ஊரடங்கில் இதுவரை பேச நேரம் கிடைக்காத பல நண்பர்களிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு முறை எனது நெருங்கிய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. கலப்புத் திருமணம் செய்துகொண்டவன். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் இருவரும் தங்களின் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அவனுக்கு இப்போது 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அவர்கள் இருவரின் குடும்பமும் இதுவரை இவர்களையும், குழந்தைகளையும் வந்து பார்க்கவில்லை என்று அவன் சொன்னான்.

நான் கேட்டேன், இந்த 10 ஆண்டுகளில் நீ அவர்களிடம் பேசுவதற்கு ஏதும் முயற்சி செய்தாயா என்று. அவன், இல்லை இந்த 10 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட அவர்களிடம் பேச முயற்சி செய்யவில்லை எங்கள் இருவரின் குடும்பத்தாரும் எங்களிடம் பேசவோ தொடர்புகொள்ளவோ இல்லை. அவங்க எப்பவுமே இப்படித்தான். மனுஷனை விட சாதி தான் முக்கியம்னு இருக்கிறவங்க என்றான்.

அவனிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒன்று தோன்றியது

இங்கே நாம் யாருமே பிறருக்கு திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதே இல்லை. ஒருவேளை அவர் திருந்தி விட்டார் என நமக்கு தெரிய வந்தாலும் அதை நாம் ஏற்பதில்லை.

இவர்கள் இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக ஒரு மனப்பான்மை நம்மிடம் உள்ளது.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பு நாம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அவர் திருந்தவில்லை என்றால் அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் தற்காலிக முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பையும் கொடுக்காமல், அவர் திருந்திவிட்டாரா என்று தெரிந்து கொள்ளாமலும் அவர் அப்படித்தான் என்று முத்திரை குத்துவது படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமின்றி அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு. அது மனிதர்களுக்கு அழகல்ல.

வாழ்க்கையில் எத்தனையோ முறை ஒரு வசனத்தை கேட்டிருப்போம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று. அப்படியானால் மனிதன் மாறுவான், மனித மனம் மாறும். நல்லவன் கெட்டவன் ஆகலாம், கெட்டவன் நல்லவன் ஆகலாம். இதுதான் விதி / நியதி.

ஆனால் ஒருவர் எப்போதுமே கெட்டவனாக தான் இருப்பார் என்று நாம் முத்திரை குத்துவது மிகப்பெரிய தவறு.

ஒரு பெரிய பரந்த ஆழமான விசாலமான அறிவும் மனமும் இருந்தால் மட்டுமே இந்த விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியும்

என்றைக்குமே இவர்கள் இப்படித்தான், அவர்கள் மாறவே மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

வாழ்க்கை வினோதமானது, விசித்திரமானது.

ஒவ்வொரு மனிதனையும் எந்த நொடியிலும் மாற்றக்கூடிய சக்தி வாழ்க்கைக்கு உள்ளது என்பதை மறவாதீர்கள்.

அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம்.

* தினேஷ்மாயா *

பாவ மன்னிப்பு

 

 

நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகள், தப்புகள், குற்றங்கள், பாவங்கள் செய்கிறோம். தெரியாமல் செய்த பாவங்களுக்கும் தண்டனை உண்டு, தெரிந்து செய்யும் பாவங்களுக்கும் தண்டனை உண்டு. ஆனால், தண்டனை என்கிற ஒரு வார்த்தை என்று தோன்றியதோ அன்றே மன்னிப்பு என்கிற வார்த்தையும் கூடவே சேர்ந்து தோன்றியது.

செய்த பாவத்திற்கு மன்னிப்பு என்பது நிச்சயம் உண்டு. அனைத்து பாவங்களும் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல. அதன் தன்மை இடம் பொருள் ஏவல் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மன்னிப்பை வழங்கலாம்.

இந்த பாவ மன்னிப்பை இறைவன்தான் வழங்க வேண்டும் என்றில்லை. மனிதர்களும் மன்னிக்கலாம். ஆனால், மனிதர்களால் மன்னிக்க முடியாத பாவங்களுக்கு பாவ மன்னிப்பை இறைவனிடம் மட்டுமே கேட்க முடியும்.

ஒருவர் வாழ்வில் எதாவது ஒரு தருணத்தில், நான் என்ன பாவம் செய்தேனோ ஏன் இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறேன் என்கிற நிலை என்றாவது வந்தால், உடனேயே அவர்கள் மனம் இறைவனை நாடும். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ எவருக்காவது பாவம் செய்திருந்தால் என்னை மன்னித்து இந்த துன்பத்திலிருந்து மீட்டு என்னை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இது ஒரு இயல்பான விடயம்தான். ஆனால் நான் சொல்ல வருவது என்ன தெரியுமா ?

நீங்கள் பாவ மன்னிப்பு கேட்கும் முன்னர், நீங்கள் உங்களுக்கு பிறர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை உங்கள் மனதில் தூக்கி சுமந்துக்கொண்டு வன்மத்தோடும் கோபத்தோடும் இருப்பதை விட்டுவிட்டு, அவர்கள் தாமாக உங்களிடம் வந்து பாவ மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், நீங்களாகவே அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுங்கள்.

மன்னிப்பது தெய்வ குணம் என்பார்கள். உங்களுக்கு பிறர் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தால் மட்டுமே, நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது இறைவன் உங்கள் பிரார்த்தனையை பரிசீலிப்பான்.

மன்னிக்க தெரிந்த ஒருவனுக்கே அவனுக்கான மன்னிப்பும் வழங்கப்படும்.

மன்னிக்க மறுப்பவனுக்கு அவனுக்கான மன்னிப்பும் மறுக்கப்படும்.

அன்பை மட்டுமே பரப்புவோம். அன்பே சிவம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

* தினேஷ்மாயா *

திருமணம் - வெற்றியா தோல்வியா ?

Friday, August 21, 2020


திருமணத்தின் தோல்வி என்பது -

ஏன் இந்த நபரை திருமணம் செய்தோம் என்று

எண்ணும்போது அல்ல...

இவரைவிட , நாம் மனதில் நினைத்த

வேறொரு நபரை திருமணம் செய்திருந்தால்

மணவாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கும் - என்னும்

எண்ணம் தோன்றும்போது

அந்த திருமணம் தோல்வியில் முடிவதாய்

கருதப்படுகிறது..

ஆனாலும், நம் சமூக கட்டமைப்பு

அன்பின் உதவியால் அந்த திருமணத்தை

விவாகரத்து வரை செல்லவிடாமல்

மீண்டும் இணைத்து வெற்றி காண்கிறது..

இதை மேலைநாடுகளில் காணமுடியாது..

* தினேஷ்மாயா *

ஊமை விழிகள்

Thursday, August 20, 2020

 

உன் விழிகள் 

மை விழிகள் மட்டுமல்ல..

காதலும் மௌனமும் மட்டுமே 

பேசும் - அழகான

ஊமை விழிகள் !!

* தினேஷ்மாயா *

கடனும் வட்டியும்

Wednesday, August 19, 2020

 

கொடுத்த கடனை

திரும்பக் கேட்கிறாள்…

அவள் இதயம் !

வட்டியுடன் திரும்ப

கொடுத்து விட்டேன்..

பிரிவெனும் வலி !

* தினேஷ்மாயா *

இதுவே சொர்க்கம்

 

பனிக்காலம் !!

அறையின் காற்றில் எங்கும்

சில்லென்ற பனித்துளி…

போர்வைக்குள் இதமான துயில்…

எழவே கூடாதென்ற கங்கனம்…

நெஞ்சே எழு என ஒலிக்கும் அலாரம்…

தலையில் தட்டி அவனையும்

தூங்க வைக்கும் சோம்பல்…

போர்வைக்குள்ளே – திரும்பிப் படுக்கையில்

உலகையே விழுங்க பார்க்கும் ஒரு

பெரிரிரிரிய்ய்ய்ய கொட்டாவி…

கனவில் நீ !!

அடடா !!

இதுவே சொர்க்கம் !!!

* தினேஷ்மாயா *

பிரதிபலிப்பு

 

காற்றின் ஈரப்பதமே

வானவில்லாய் பிரதிபலிக்க..

உன்மீதான என் காதலே

கவிதைகளாய் !!

* தினேஷ்மாயா *


மெய்சிலிர்ப்பு

 

நீ பிறந்து நடக்க ஆரம்பித்தபோது

உன் பாதம் முதலில் பூமியில் பட்டபோது

பூமிக்கு மெய்சிலிர்த்தது..

அப்போது உருவானதுதான்

இந்த மரங்கள் எல்லாம்!!

 * தினேஷ்மாயா *

காதல் போர்

 


நம் இருவருக்குமிடையில் மட்டும்

நடக்கும் போர்…

முடிவில்லா போர்…

மஞ்சள்கயிற்றோடு வருகிறேன்..

அதுவே வெள்ளைக்கொடி இங்கே…

இங்கே உயிரிழப்புகள் இருக்கா...

உயிரின் உற்பத்தி மட்டுமே உண்டு !!

* தினேஷ்மாயா *

தேன் முத்தம் !


வெள்ளைத்தாளில் ஏதேதோ கிறுக்கி

அழிப்பானால் அழித்தது குழந்தை..

வெள்ளைத்தாள் உன் தேனிதழ்

அழிப்பான் என் இதழ்

குழந்தை நான் !!

* தினேஷ்மாயா *

உன்னுள் மூழ்கி ..

 

கடலில் மூழ்கி மட்டுமே

முத்து எடுக்கலாம என்றில்லை..

உன்னுள் மூழ்கி முத்தோடு

உன் முத்தத்தையும் எடுத்துக்கொண்டு

கரை சேர்ந்துவிட்டேன்..

அதை நீ அறிவாயா ?

* தினேஷ்மாயா *

சமூகநீதி காத்த கருணாநிதி


பல நாட்கள் கழித்து என் தோழி ஒருவரிடம் பேசினேன். கருணாநிதி அவர்களின் நினைவு நாளான அன்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அன்றுதான் என்னுடைய வாட்ஸ் அப்பில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி ஒரு தகவல் பதிவிட்டிருந்தேன். அந்த தகவலை இங்கே இந்த வலைப்பக்கத்திலும் கடவுள் ஏற்பு என்கிற தலைப்புல் பதிவிட்டிருக்கிறேன்.

 வழக்கமான நலம் விசாரிப்பு மற்றும் பிற கதைகள் எல்லாம் பேசிவிட்டு பிறகு பொதுவாக ஒரு விஷயத்திற்கு பேச வந்தோம். அப்போது அவர் சொன்னார் எனக்கு என்ன இருந்தாலும் தனக்கு கலைஞரை அவ்வளவாக பிடிக்காது என்றார். நான் காரணம் என்ன என்று கேட்டேன்.

அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் இருப்பவர். அவரின் பள்ளி பருவத்தில் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது இலவசமாக சீருடை, புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இலவச பொருட்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் என்று அன்றுதான் அந்த தோழி என்னிடம் சொன்னார். அதனால், அவர்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை, அதனால் பள்ளிப் பருவத்தில் பல இன்னல்களை சந்தித்ததாக சொன்னார்.

மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்தார். அவர்களுடைய தாத்தா (அப்பாவின் அப்பா) ஊரில் மிகப்பெரிய நிலக்கிழார்.நிறைய ஏக்கரில் நிலங்கள் உள்ளது. அவர்களின் அப்பா அவரின் தாத்தாவுடன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து வந்ததால் அந்த தாத்தா இவர்களுக்கு எந்த ஒரு சொத்தையும் தரவில்லை. அதனால் இவர்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக கொஞ்சம் கஷ்டப்பட்டது.

இவர்கள் குடும்பத்தில் மூன்று பெண்கள். அவருடைய அக்கா பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது சீருடைகள் வாங்க, புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது. ஆனால் அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக சீருடை புத்தகங்கள் அளித்தது. அவர் சொல்வதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது இல்லை.

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அனைத்து சமூக மக்களுக்கும் இலவசமாக புத்தகம் வழங்கினார். எங்கள் ஊரிலேயே ஜெயலலிதா அவர்கள் அனைவருக்கும் இலவசமாக புத்தகம் வழங்கியதால்தான் நிறைய பெண்கள் படிக்க முடிந்தது. எங்கள் குடும்பத்தில் அனைத்து பெண்களும் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி கல்வி படிக்கும் வாய்ப்பு கூட ஜெயலலிதா அவர்களால் தான் ஏற்பட்டது. அதனால் எனக்கு ஜெயலலிதா அவர்களைப் பிடிக்கும். கருணாநிதி அவர்களை இந்த காரணத்தினாலேயே பிடிக்காது என்றார்.

அதற்கு நான் சொன்னேன் உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவில்லை. தெரியாத விஷயங்களை வைத்தும், உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றேன். என்ன விஷயம் என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லத் துவங்கினேன்.

நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் தாத்தா நிறைய நிலம் வைத்திருப்பவர் பல சொத்துக்களுக்கு அதிபதி ஆனால் உங்கள் அப்பா அவருடன் சண்டை போட்டுவிட்டு வந்ததால் உங்களுக்கு எந்த சொத்தும் இல்லை. அதனால் நீங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்.

ஆனால் கருணாநிதி அவர்கள் ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் மாணவர்களுக்கு இலவசமாக அனைத்தையும் வழங்கினார் என்றால், உங்களுக்கு உங்கள் தாத்தாவிடமிருந்த குடும்பப் பிரச்சினையால் உங்களுக்கு அந்த நிலம், சொத்து வந்து சேரவில்லையே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு நிலம் என்பதே கிடையாது. அவர்களுக்கு சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது, அவர்கள் நிலத்தில் கூலிக்காக வேலை செய்த கூலி ஆட்கள் தான். தினக்கூலியாக வேலை செய்தவர்களை வேலையை விட்டு போ என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது கூலி கிடையாது எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

நிலம் வைத்துக் கொண்டு குடும்ப பிரச்சனையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதா? அல்லது நிலமே இல்லை, எந்த ஒரு சொத்தும் இல்லை அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு உதவுவதா என்றால் ஒரு அரசாங்கம் நிச்சயமாக இந்த மக்களுக்கு தான் அதிகமாக உதவ முன்வரும். அதைத்தான் முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்தார். ஆனால் பின்னாளில் அனைத்து சமூக மக்களுக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் இலவசமாக சீருடை புத்தகம் எல்லாம் வழங்க முடிவெடுத்தார்கள்.

அவருடைய எண்ணம் உயர் சமூக மாணவர்களை ஒதுக்கிவிட்டு மற்ற சமூக மாணவர்களை மட்டுமே வளர்ப்பது அல்ல.

உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இணையாக அவர்களாலேயே கீழ்ஜாதி என்று ஒதுக்கப்படும் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்று சேர்ந்து அவர்களும் இவர்களுக்கு இணையாக வளர வேண்டும் என்ற ஒரே தொலைநோக்கு மற்றூம் சமூக நோக்கு பார்வையால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அது என்றேன்.

என்றைக்குமே கருணாநிதி என்பவர் சமூக நீதி காத்த கருணாநிதி.

என் தோழியும் நான் சொன்ன கருத்தை பிறகு ஆமோதித்தார்.

என் கருத்திற்கு உங்கள் கருத்து என்ன ?

* தினேஷ்மாயா *