பாவ மன்னிப்பு

Saturday, August 22, 2020

 

 

நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகள், தப்புகள், குற்றங்கள், பாவங்கள் செய்கிறோம். தெரியாமல் செய்த பாவங்களுக்கும் தண்டனை உண்டு, தெரிந்து செய்யும் பாவங்களுக்கும் தண்டனை உண்டு. ஆனால், தண்டனை என்கிற ஒரு வார்த்தை என்று தோன்றியதோ அன்றே மன்னிப்பு என்கிற வார்த்தையும் கூடவே சேர்ந்து தோன்றியது.

செய்த பாவத்திற்கு மன்னிப்பு என்பது நிச்சயம் உண்டு. அனைத்து பாவங்களும் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல. அதன் தன்மை இடம் பொருள் ஏவல் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மன்னிப்பை வழங்கலாம்.

இந்த பாவ மன்னிப்பை இறைவன்தான் வழங்க வேண்டும் என்றில்லை. மனிதர்களும் மன்னிக்கலாம். ஆனால், மனிதர்களால் மன்னிக்க முடியாத பாவங்களுக்கு பாவ மன்னிப்பை இறைவனிடம் மட்டுமே கேட்க முடியும்.

ஒருவர் வாழ்வில் எதாவது ஒரு தருணத்தில், நான் என்ன பாவம் செய்தேனோ ஏன் இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறேன் என்கிற நிலை என்றாவது வந்தால், உடனேயே அவர்கள் மனம் இறைவனை நாடும். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ எவருக்காவது பாவம் செய்திருந்தால் என்னை மன்னித்து இந்த துன்பத்திலிருந்து மீட்டு என்னை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இது ஒரு இயல்பான விடயம்தான். ஆனால் நான் சொல்ல வருவது என்ன தெரியுமா ?

நீங்கள் பாவ மன்னிப்பு கேட்கும் முன்னர், நீங்கள் உங்களுக்கு பிறர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை உங்கள் மனதில் தூக்கி சுமந்துக்கொண்டு வன்மத்தோடும் கோபத்தோடும் இருப்பதை விட்டுவிட்டு, அவர்கள் தாமாக உங்களிடம் வந்து பாவ மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், நீங்களாகவே அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுங்கள்.

மன்னிப்பது தெய்வ குணம் என்பார்கள். உங்களுக்கு பிறர் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தால் மட்டுமே, நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது இறைவன் உங்கள் பிரார்த்தனையை பரிசீலிப்பான்.

மன்னிக்க தெரிந்த ஒருவனுக்கே அவனுக்கான மன்னிப்பும் வழங்கப்படும்.

மன்னிக்க மறுப்பவனுக்கு அவனுக்கான மன்னிப்பும் மறுக்கப்படும்.

அன்பை மட்டுமே பரப்புவோம். அன்பே சிவம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

* தினேஷ்மாயா *

0 Comments: