இவர்கள் இப்படித்தான் ?!

Saturday, August 22, 2020


இந்த ஊரடங்கில் இதுவரை பேச நேரம் கிடைக்காத பல நண்பர்களிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு முறை எனது நெருங்கிய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. கலப்புத் திருமணம் செய்துகொண்டவன். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் இருவரும் தங்களின் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அவனுக்கு இப்போது 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அவர்கள் இருவரின் குடும்பமும் இதுவரை இவர்களையும், குழந்தைகளையும் வந்து பார்க்கவில்லை என்று அவன் சொன்னான்.

நான் கேட்டேன், இந்த 10 ஆண்டுகளில் நீ அவர்களிடம் பேசுவதற்கு ஏதும் முயற்சி செய்தாயா என்று. அவன், இல்லை இந்த 10 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட அவர்களிடம் பேச முயற்சி செய்யவில்லை எங்கள் இருவரின் குடும்பத்தாரும் எங்களிடம் பேசவோ தொடர்புகொள்ளவோ இல்லை. அவங்க எப்பவுமே இப்படித்தான். மனுஷனை விட சாதி தான் முக்கியம்னு இருக்கிறவங்க என்றான்.

அவனிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒன்று தோன்றியது

இங்கே நாம் யாருமே பிறருக்கு திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதே இல்லை. ஒருவேளை அவர் திருந்தி விட்டார் என நமக்கு தெரிய வந்தாலும் அதை நாம் ஏற்பதில்லை.

இவர்கள் இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக ஒரு மனப்பான்மை நம்மிடம் உள்ளது.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பு நாம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அவர் திருந்தவில்லை என்றால் அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் தற்காலிக முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பையும் கொடுக்காமல், அவர் திருந்திவிட்டாரா என்று தெரிந்து கொள்ளாமலும் அவர் அப்படித்தான் என்று முத்திரை குத்துவது படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமின்றி அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு. அது மனிதர்களுக்கு அழகல்ல.

வாழ்க்கையில் எத்தனையோ முறை ஒரு வசனத்தை கேட்டிருப்போம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று. அப்படியானால் மனிதன் மாறுவான், மனித மனம் மாறும். நல்லவன் கெட்டவன் ஆகலாம், கெட்டவன் நல்லவன் ஆகலாம். இதுதான் விதி / நியதி.

ஆனால் ஒருவர் எப்போதுமே கெட்டவனாக தான் இருப்பார் என்று நாம் முத்திரை குத்துவது மிகப்பெரிய தவறு.

ஒரு பெரிய பரந்த ஆழமான விசாலமான அறிவும் மனமும் இருந்தால் மட்டுமே இந்த விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியும்

என்றைக்குமே இவர்கள் இப்படித்தான், அவர்கள் மாறவே மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

வாழ்க்கை வினோதமானது, விசித்திரமானது.

ஒவ்வொரு மனிதனையும் எந்த நொடியிலும் மாற்றக்கூடிய சக்தி வாழ்க்கைக்கு உள்ளது என்பதை மறவாதீர்கள்.

அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம்.

* தினேஷ்மாயா *

0 Comments: