பீச்சாங்கை

Wednesday, August 19, 2020


 எந்தவொரு விஷயத்தை துவங்கும்போது சகுனம் பார்த்து செய்வது இன்றும் நம் சமூகத்தில் பரவலாக நிலவும் ஒரு பழக்கம். வலது கால் எடுத்து வைத்து வாருங்கள், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்யுங்கள், வலது கையால் கொடுத்து வாங்குங்கள் என்றெல்லாம் பிறர் பேசக்கேட்டதுண்டு.

  ஒருமுறை எனக்கு ஒரு சிந்தனை வந்தது. ஏன் நம் மக்கள் இதுபோல ஒரு பாகுபாடு பார்க்கிறார்கள்? இரண்டு கைகளுமே ஆண்டவன் படைத்ததுதானே, பின் ஏன் வலது கை உயர்ந்தது, இடது கை தாழ்ந்தது என்கிற பிரிவினை பார்க்கப்படுகிறது என்று எண்ணினேன்.

 சில தினங்களுக்கு முன்னர் மேற்கூறிய சிந்தனைக்கு மாற்று சிந்தனை என்னுள் உதித்தது. பிறந்த குழந்தையை தூக்க சென்றபோது, அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள், என் கைகளை சோப்புப் போட்டு கழுவும்படி அறிவுறுத்தி நான் அதை செய்தேனா என்றும் உறுதிப்படுத்தினார்கள். நான் சொன்னேன், இப்போதுதான் Sanitizer  போட்டு கைகளை சுத்தப்படுத்தினேன் இனியும் சோப்புப் போட்டு கைகளை கழுவ வேண்டுமா என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள், என்ன இருந்தாலும் கைகளில் கிருமிகள் ஒட்டியிருக்கலாம், அதனால் சோப்பினால் கழுவிய பிறகு குழந்தையை தூக்குங்கள் என்றார்கள்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டை விட்டு வெளியில் சென்றால், எப்போதும் நம் கைகளை சுத்தமாக வைத்திருப்போம். என்னதான் சுத்தமாக நாம் வைத்திருந்தாலும், நம் உடலில் இருக்கும் கிருமிகள் இருக்கத்தான் செய்யும். நன் உள்ளங்கைகளிலேயே பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் எப்போதும் குடிக்கொண்டிருக்கும். அவற்றில் பல நம் உடம்பிற்கு நல்லது செய்யும், ஒருசில தீங்கு செய்யும். சரி, நான் விஷயத்திற்கு வருகிறேன்.

 

அந்த காலத்தில் ஏன் எதையும் இடது கைகளால் செய்யக்கூடாது என்றார்கள் என்பதற்கான அர்த்தம் எனக்கு இப்போது புரிந்தது. அப்போதெல்லாம் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் கைகளால்தான் தங்கள் உடல்கழிவுகளை சுத்தம் செய்வார்கள். அதற்காகவே தங்கள் இடதுகையை பயன்படுத்துவார்கள். உணவு உண்ண வலது கையை பயன்படுத்துவார்கள். அதுபோக வேறெந்த விஷயத்திற்கும் வலதுகையையே அதிகம் பயன்படுத்துவார்கள். அதனால் அதனை அடிக்கடி சுத்தம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வளவு செய்தும் வலது கையிலேயே பல கிருமிகள் தங்கிவிடும். அப்படியிருக்கையில், இடது கையில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் தான் என்னவோ, அந்த காலத்தில் நம் மக்கள் இடதுகையால் ஒரு செயலை செய்வது சரியாகாது என்று கருதினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், இந்த ஆரோக்கியம் தொடர்பான காரணத்தை விடுத்து, வேறெந்த காரணத்தாலும் பாகுபாடு பார்ப்பதை நான் இன்றும் வன்மையாக எதிர்க்கிறேன்.

 * தினேஷ்மாயா *

0 Comments: