இரும்புத்திரை போற்றிய மனக்குகை

Saturday, August 08, 2020

சமீபத்தில் நான் கடந்துவந்த ஒரு நிகழ்வை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

என் அலுவலகத்தில் ஒரு பெண் அலுவலருக்கு கொரோனா பாதித்தது. அவரின் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அந்த பெண் அலுவலர் அதிலிருந்து மீண்டு விட்டார். ஆனால், அவரது கணவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார். நேற்று அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார் !

இந்த செய்தி பேரதிர்ச்சி மட்டுமின்றி மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்தது. 

வாழ்க்கை என்றால் என்ன என்று மீண்டும் மீண்டும் கேள்விகள் என்னுள் எழுந்தவண்ணம் இருக்கிறது.

ஒரு மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருக்கிறார் அவர். அவரின்  மனைவியும் மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருக்கிறார். இருவருக்கும் கைநிறைய சம்பளம், அதிகம் குடைச்சல் இல்லாத பணி, அன்பான பிள்ளைகள், மகிழ்ச்சியான குடும்பம்.

அந்த நபரை எனக்கு நேரில் தெரியாது, ஆனால் இன்று அவரின் நண்பர்கள் அவரைப்பற்றி சொன்னபோதுதான் உணர்ந்தேன். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது !

தற்கொலை என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க தெரியாத ஒரு தைரியமான மனிதர் அவர். அலுவலகத்திலும் சரி, சொந்த வாழ்விலும் சரி எதையும் பொறுமையோடும், துணிச்சலோடும் எதிர்கொள்ளும் மனம் படைத்தவர் அவர். 

இப்படிப்பட்ட ஒரு நபர் தற்கொலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? நிச்சயம் அந்த காரணத்தை அவர் மட்டுமே கூற முடியும், ஆனால் அதற்கு இப்போது அவர் நம்மிடையே இல்லை. 

இதுதான் இங்கே நான் பதிய வந்த காரணம்.

ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவருக்கு ஆறுதலாய் நாம் இருக்க வேண்டும். உலகில் 780 கோடி மக்கள் இருந்தாலும் எனக்கென்று ஆறுதல் சொல்ல, எல்லாம் சிலகாலமே, இதுவும் கடந்து போகும், மனதை விடாதே, நான்/நாங்கள் உன்னுடன் இருக்கோம், இந்த பிரச்சனை நிரந்தரம் அல்ல, இது முடிவும் அல்ல, எதுவானாலும் பார்த்துக்கலாம் என்று அவருக்கு தைரியமும் ஆறுதலும் சொல்ல எவரும் இல்லை என்று அவர் நினைக்கும் அந்த ஒரு நொடியை அவர் எப்படி கடந்து வந்திருப்பார் !

அந்தவொரு நொடிதானே அவரை மீளாத்துயிலில் கொண்டு சேர்த்தது. அந்த நொடியை கடக்கும் சக்தியை ஏன் அவர் சுற்றமும், இந்த சமூகமும் அவருக்கு தரவில்லை ? ஆனால், உண்மை என்னவென்றால், அவரின் சுற்றமும் இந்த சமூகமும் எப்போதும் அவருக்கு உறுதுணையாய் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அதை அவர் உணரும் வண்ணம் ஏன் எதுவும் நடக்கவில்லை, இல்லை அவர் அதை உணராமல் போய்விட்டாரா தெரியவில்லை.

இனி நான் பேசப்போவது மறைந்த அந்த ஆன்மாவைப் பற்றி மட்டுமல்ல. இங்கே நடமாடிக்கொண்டிருக்கும் அனைத்து ஆன்மாக்களைப் பற்றியும்தான்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமூக சூழ்நிலை இன்றில்லை. கலாச்சார மாற்றம், பண்பாடு கலப்பு, உலகமயமாக்கல், நுகர்வு கலாச்சாரம், வெற்றியாளன் ஆகவேண்டும் என்கிற துடிப்பு, அடுத்தவனை விட அல்லது சொந்தங்களை விடவும் கொஞ்சம் அதிகம் சொத்து சேர்த்துவிட வேண்டும் என்கிற கவலை, சமூக அங்கீகாரம் கிடைக்கக்கூடிய ஒரு பெரிய வேலை / நல்ல குடும்பம், எதற்கு என்றெல்லாம்ம் கேள்வி கேட்காமல் வேகமாய் ஓடவேண்டிய ஒரு வாழ்க்கை.

எதுவும் இல்லாமல் இருந்த காலத்திலேயே எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனிதன் நிம்மதியாக இருந்தான். ஆனால், எல்லாம் கிடைத்த பிறகும் நிம்மதியை தேடிக்கொண்டிருக்கிறான் என்பதை நம்மால் தினந்தோறும் காணமுடிகிறது. அப்படியானால், இந்த உலகம் கட்டமைத்திருக்கும் வரையறைகளுக்குள் நாம் தேடும் நிம்மதி இல்லை என்பது திண்ணம்.

பணத்தை சம்பாதிப்பதைவிட நல்ல மனதை சம்பாதிப்பவர்கள் நிச்சயம் நிம்மதியாய் இருக்கிறார்கள் எனலாம். ஆம். கோடிகளில் புரளும் ஒருவன் நிச்சயம் தூக்கம் வராமல், நிம்மதியிழந்து கட்டிலிலும் புரண்டுக்கொண்டிருப்பான். அதேசமயம், இன்றைய உழைப்பிற்கு இன்றே கூலியைப் பெற்றுக்கொண்டு, தண்டல் கட்டி, மீதமிருக்கும் பணத்தில் வீட்டிற்கு தேவையானதை வாங்கி சென்று பொங்கித் தின்று பெரிய ஏப்பம் விட்டுவிட்டு, அதைவிட பெரிதாய் குறட்டை விட்டுக்கொண்டிருப்பான் அவன்.

நாளையைப் பற்றிய கவலை அவனிடம் இல்லை. நாளையைப் பற்றி எண்ணி அவன் இன்றைய நிம்மதியை இழக்க விரும்பமாட்டான். நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கவலை அவனிடம் இருக்காது. ஆனால், எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனது அவனிடம் இருக்கும். மனதில் பெரிதாய் கவலைகளை குப்பைகள் போல தேங்க விடமாட்டான். தன் நண்பர்களிடமோ, குடும்பத்தாரிடமோ, சுற்றும் முற்றும் இருப்பவர்களிடமோ பகிர்ந்துவிட்டு இன்றைய பொழுதை முடித்துக்கொண்டு உறங்க சென்றிடுவான்.

ஆனால், இந்த நவநாகரிகத்திற்கு அடிமையாகிவிட்ட நாமோ, பிறரிடம் நம் கவலைகளையும், துயரங்களை மனம்விட்டு பேசுகிறோமா? அப்படி பேசினால் மற்றவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்? இதுவரை நான் கட்டி காப்பாற்றிவந்த கௌரவம் என்னாகும்? இப்படி நினைத்து நினைத்தே நம் கவலைகளை நம் ஆழ்மனதில் விதைக்கிறோம் அது பின்னாளில் விருட்சமாய் வளர்ந்து நிழல் தந்து அந்த நிழலிலேயே நமக்கு ஒரு  கல்லறையையும் எழுப்பிவிடுகிறது.

தொலைதொடர்பு வசதி. சமூக வலைத்தளம் வருவதற்கு முன்பெல்லாம், கடிதம், தந்தி, ட்ரங்க் கால் போன்ற சாதனங்கள் இருந்தபோதே மனிதர்கள் மனம்விட்டு பேசினார்கள். இங்கே தமிழகத்தில் ஒரு ஓரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்துக்கொண்டு தன் கவலைகளை அங்கே நாகாலாந்தில் இராணுவத்தில் இருக்கும் தன் மகனிடம் பகிர்ந்துக்கொள்வார் ஒரு தாய். அங்கே தனக்கு விடுமுறை கிடைக்கவில்லை, உங்களை வந்து சந்திக்க முடியவில்லை, இருந்தாலும் இந்த கடிதம் எனக்கு உங்களை சந்தித்த மனநிறைவை தருகிறது என்று நினைத்து அந்த மகனும் அடுத்த விடுமுறைக்காக காத்துக்கொண்டு பதில் கடிதமொன்றை போடுவார்.

தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பதாய் உணர்ந்த காலம் அது. ஆனால், இன்று தொலைதொடர்பு வசதி பல்கி பெருகிவிட்டாலும், அருகில் இருக்கும் ஒருவருமே நமக்கு தொலைவில் இருப்பதாகத்தானே ஒரு உணர்வை தருகிறது.

மனம் விட்டு பேச இங்கே எவருக்கும் மனம் இல்லை. மனம்விட்டு பேச நிறைய மனங்களை எவரும் சம்பாதிக்கவில்லை. பணம் இருக்கிறது, நிறைய மனம் இருக்கவில்லை. கூட்டுக்குடும்பம் என்பதன் அருமை இப்போது புரிகிறது. வீட்டில் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால், அதை அவர் வெளியில் சொல்லக்கூட வேண்டாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களோ ஏன் சிறியவர்களோ கூட அவரின் முக வாட்டத்தையும், நடவடிக்கையையும் வைத்தே அவர் சரியாக இல்லை என்பதை கணித்து அவரை அழைத்தோ அல்லது அவரிடம் சென்றோ என்ன பிரச்சனை என்பதை கேட்டு அதற்கான தீர்வையும் சொல்லி அவர அதிலிருந்து மீட்டு வருவார்கள்.

என்றைக்கு தனிக்குடும்பங்கள் உருவாகி, நான்கு அறைகளே நம் உலகம் என்று சுருங்கிவிட்டதோ, அன்றைக்கே நாம் இந்த சமூகத்திடமிருந்து விலகிவிட்டோம் என்பதே உண்மை. நண்பர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களிடம் பேச நேரம் இருந்தாலும், மனம்விட்டு பேசுவதை தவிர்ப்போம். பணிச்சுமை, நேரமின்மை இப்படி பல போலியான காரணங்களை நாமே நமக்கு சொல்லிக்கொள்வோம்.

ஒவ்வொருவருக்கும் மனதில் வெளியே சொல்லமுடியாத சங்கதிகள் ஆயிரம் இருக்கும். ஆனால், அந்த மனக்குகையை இரும்புத்திரை போட்டு மறைத்துவிட்டால், அதனுள்ளே வந்து ஆறுதல் சொல்ல எவராலும் முடியாது.

போலியான இரும்புத்திரைகளை உடைத்து எறியுங்கள். மனதை குகைக்குள் வைக்காமல், வெளியே வையுங்கள். திறந்த புத்தகமாய் இருப்பவர்கள் பல காலம் நிம்மதியாய் வாழ்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்.

எதையும் மனம்விட்டு பேசுங்கள். தயங்காமல் பேசுங்கள். அப்படி பேசும்போது மனதில் இருக்கும் பாரம் குறையும். 

" உன்னை கனப்படுத்தி கொள்ளாதே. கனமான பொருட்களே வெள்ளத்தில் மூழ்கும்." - எங்கோ கேட்ட வசனம் நினைவுக்கு வருகிறது...

* தினேஷ்மாயா *

0 Comments: