விழிப்புணர்வுடன் இருப்போம்

Sunday, June 07, 2020



இந்த கொடிய கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாகி கொத்து கொத்தாக மக்கள் மடியும் நேரம் வந்தால், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சவப்பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்கு எப்போதும் சந்தை தங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். சில நேரங்களில் எது தேவையோ அதை சந்தைப்படுத்துவார்கள், அல்லது செயற்கையாக ஒரு தேவையை உருவாக்கிவிடுவார்கள்.

மக்கள்மீது அக்கறை ஏதுமின்றி சந்தை பொருளாதாரம் என்று முன்னிலைப் பெற்றதோ அன்றே நமக்கான சவக்குழிகளை இந்த கார்ப்பரேட்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதில் விழுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நமது தலையாய கடமை..

இதைப்பற்றி விரிவாக மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

* தினேஷ்மாயா *

உன் உயிர் உன் கையில்



செய்தி:  உணவகங்களில் பார்சல் வாங்க வருபவர்களும், உணவு அருந்த வருபவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

என் கேள்வி : சாப்பிடும்போது எப்படி முகக்கவசம் அணிந்திருக்க முடியும் ? குறைந்தது பத்து அல்லது இருபது நிமிடமாவது முகக்கவசம் தவித்தாக வேண்டும். அது ஆபத்தில்லையா ?

மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதது ஏன் ?

உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் உயிரும் உன் கையில்தான் இருக்கிறது..

தன்னம்பிக்கையோடு இருப்போம்.. விலகி இருப்போம்..

* தினேஷ்மாயா *


வாழ்க்கையின் முரண்


அவனிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. அவன் எது சொன்னாலும் அப்படியே நடந்துவிடும். அவன் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடந்துவிடும். நமக்கேன் வம்பு. அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

இப்படி ஒரு சிலர் பேச நாம் கேட்டிருப்போம்.

இதுபோல சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எது சொன்னாலும், எது நினைத்தாலும் அப்படியே நடந்துவிடும். கருநாக்கு உடையவன் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கிருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால். இப்படி ஒரு அறிய சக்தி இருக்கும் இவர்கள், ஏன் அதை நல்ல விடயத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஏன் எப்போதும் நல்லதையே நினைத்துக்கொண்டும் நல்லவற்றையே சொல்லிக்கொண்டும் இருக்கலாமே.

இதுதானோ வாழ்க்கையின் முரண் ??

* தினேஷ்மாயா *

எங்கள் ஊர் FRCS

Friday, June 05, 2020




அவள் புத்தகம் படித்து பார்த்ததில்லை. அவளுக்கு படிக்கவும் தெரிந்ததில்லை. ஆனால், அவள் சொல்லும் செய்தி எந்த புத்தகத்திலும் வந்ததில்லை. அவள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமூட்டும். அத்தனையும் உண்மையாக இருக்கும்.

தலைவலிக்குது என்று சென்றால் ஆயிரம் பரிசோதனைகளை செய்துவிட்டு ஒன்றுமில்லை இதை சாப்பிடு சரியாகிடும் என்று நான்கு சத்து மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்களுக்கிடையே, பள்ளிக்கூடமே போகாமல், கை வைத்தியத்தால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல, ஊரில் பலர குடும்பங்களுக்கு வைத்தியம் பார்க்கும் எங்கள் ஊர் FRCS அவள்.

முன் குறிப்பு: நான் அவள் பேரன்தான். 
அவள் சிறு வயதில் தென்னை மரம் ஏறுவாள். நீச்சல் அடிப்பாள்.
பின்குறிப்பு. இவையிரண்டும் எனக்கு இன்றுவரை தெரியாது.

சிறுசேமிப்பு என்றாலும் அதில் தெரியும் அவளின் பொருளாதார ஆளுமை. தண்ணீரையும் காசு போலவே சிக்கனமாய் செலவு செய்ய சொல்லிக்கொடுத்தவள்.

அவள் போடும் காபியின் சுவையை இன்றுவரை வேறெங்கும் சுவைத்ததில்லை.

அவள் வைக்கும் கறிக்குழம்பிற்கு இந்திய புவிசார் குறியீடே கொடுக்கலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், துக்கம் நெஞ்சை அடைக்கை வார்த்தைகளும் அடைப்பட்டுப் போகிறது.

இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். எனக்கும் வரும். உங்களுக்கும் வரும். ஆனால், நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அது வரும்போதுதான் இதுவரை நாம் கற்ற தத்துவங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது – அவளைப்போல !


* தினேஷ்மாயா *

கலப்படமில்லாத பேரன்பு




எலேய்.. எந்திரிச்சு வெறும் வயிரா கிடக்க. எதாச்சும் குடி..

நல்லா அள்ளி தின்னு. அப்பத்தான் குடலு பெருசாகும். இப்படி கம்மியா அள்ளி தின்னா எப்பிடி?

வெயில்ல வெளியே போகாதடா.. உச்சி வெயிலு.. ஒடம்புக்கு ஆகாது..

என்னடா சுருண்டு உக்காந்திருக்க. கால் வலியா. ஏண்டி அந்த வெளக்கெண்ணய்ய எடுத்துனு வா. சுளுக்கு கிளுக்கு பிடிச்சிருக்கும்.. நீவி விட்டா சரியாயிரும்..

எத்துக்குடா ஆஸ்பத்திரி போற. செத்த இரு. மாமன அனுப்பி ஆத்துல நண்டு பிடிச்சார சொல்றேன். ஆவி புடிச்சுட்டு நண்டு ரசம் தின்னா சளி பறந்துரும்..

இந்தா பிடி.. ஆயாகிட்ட 40 ரூவாதான் கன்னு இருக்கு. கைசெலவுக்கு வெச்சுக்கோ ..

இப்படி இன்னும் ஏராளம் ஏராளம்.. இந்த கலப்படமில்லாத பேரன்பு, அவளுடன் சேர்த்தே புதைக்கப்பட்டது அந்த சுடுகாட்டில்..

என் பாட்டி இறந்தாள், என் நினைவில் வளர்ந்தாள் !!


* தினேஷ்மாயா *

இடப்பெயர்ச்சி




ஓரிடத்தில் வளர்ந்த செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டுவைத்தால் அது செழிப்பாக வளரும் என்பதில் நிச்சயம் இல்லை. அது இருக்கும் இடத்திலேயே விட்டிருந்தால் தனக்கான நீரை தானே எப்படியாவது தேடிக்கொண்டிருக்கும், அல்லது நீரின்றி வெயிலில் வாடி இறந்திருக்கும். அதை வேறொரு இடத்திற்கு மாற்றுவதால், அதன் வேர் மயிர்களில் உள்ள அதன் உயிர் பாதி பிரிந்துவிடுகிறது. வேரறுப்பது என்பது இதுதானோ !?

அப்படி வேரறுக்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் நன்றாக வளர ஒரு கைப்பிடி மண்ணை அது வளர்ந்த இடத்தில் இருந்து எடுத்துவந்து புது இடத்தில் போடுவார்கள்.
ஒரு செடிக்கு இத்தனை செய்கிறோம்.

ஆனால், தன் தாய்நாட்டை விட்டு அகதிகளாய் வெளியேறும் மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் ? அவர்களை வேற்றுகிரக மனிதர்களைப் போல் பார்ப்பது ஒன்றைத்தவிர !?

* தினேஷ்மாயா *


மாயநதி !



           
  ஒரு நதியின் மரணத்தில்தான் கடலில் பிறப்பு இருக்கிறது. மனம் என்னும் மாயநதியை அணைக்கட்டி வைக்காமல், அதை இந்த பிரபஞ்சம் என்னும் பெருங்கடலோடு கலக்கவிடுவோம். அப்பெருங்கடலில் மூழ்கிப்போவோம்.


* தினேஷ்மாயா *

அதுக எங்கிட்டுப் போகும்?



வௌஞ்ச வெள்ளாமைய வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.

சாமி எங்கேயோவா இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!

இந்த காக்கா குருவிகமட்டும் இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித் திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?

- வைரமுத்து அவர்களின்  “கள்ளிக்காட்டு இதிகாசம்” நூலில் இருந்து..

* தினேஷ்மாயா *