சில்லறை வர்த்தகம்

Sunday, September 16, 2012




சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைப் பற்றி நான் ஏற்கெனவே நாம் முந்தைய பதிவு ஒன்றில் அலசியிருக்கோம்.


இரண்டு தினங்களுக்கு முன், நம்து மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இருப்பினும் இதை அமல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களில் கையில் இருக்கிறது. இப்ப்டி அனுமதிப்பதால் நம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிட்டும், அத்தோடு நம் உணவு பாதுகாப்பு முறையும் சிறப்படையும், விவசாயப்பொருட்களின் இழப்பை தவிர்க்கலாம், பலதரப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம் என்று என்னென்னமோ விளக்கங்கள் சொல்லி தனது முடிவ அரசு சரிப்படுத்த பார்க்கிறது.
பொருளாதார வல்லுனர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் நாட்டின் நிதி பற்றாக்குறையை போக்க இது உதவும் என்று பிரதமர் தெரிவிக்கிறார். அது எப்படி என்றுதான் புரியவில்லை. மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஒரு கூரையின் கீழ் கிடைக்கும் என்று மார்தட்டிக்கொள்கிறது அரசு. இதுதானே இங்கே சந்தை என்னும் பெயரில் பல நூற்றாண்டுகளாய் நம் நாட்டில் நடந்து வருகிறது. நமது நாட்டில் வெளிநாட்டவர்கள் வந்து சந்தை போட்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்யப்போகின்றனர். இதனால் இங்கு இந்த தொழிலையே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது வேலைகளை உருவாக்கி தருவோம் என்று எந்த நம்பிக்கையில் அரசு சொல்கிறது என்று தெரியவில்லை.
நம் அனைவருக்கும் தெரியும் நம்மை பல நூற்றாண்டுகளாய் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களும்கூட நம் நாட்டிற்கு வர்த்தகம் செய்ய வந்தவர்கள்தான். கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நம் மீது செலுத்தி நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தனர். இன்று மீண்டும் வெளிநாட்டவர்களுக்கு நம் சந்தையின் கதவுகளை திறந்து வைக்கிறோம். இது எங்குபோய் முடியும் என்றுதான் தெரியவில்லை.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் என்பதால், தங்கள் நாட்டு வேலைகளை வெளிநாட்டவர்க்கு தரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா முடக்கி வைத்துக்கொண்டிருக்கும் வேளையில், நாம் நமது நாட்டில் இருக்கும் பணிகளை வெளிநாட்டவர்க்கு தந்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சிலரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எவ்வகையில் நியாயம். ஒரு திட்டத்தையோ சட்டத்தையோ கொண்டுவரும் முன்பு பெரும்பாலான மக்களையும் கொஞ்சம் மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். தினமும் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் அன்னாடங்காய்ச்சிகள் இங்கு இந்தியாவில் அதிகம். அப்படியிருக்கையில் அவனின் அன்றாடத் தேவைக்கு வாங்கும் பொருட்களை வெளிநாட்டவர் சொல்லும் விலையில் வாங்கமுடியுமா ? வாழ்க்கை நடத்த முடியுமா ?
இந்த நடைமுறை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி இந்த நுகர்வோர்களுக்கு கைமாற்றிவிடும் இடைத்தரகர்கள் அதிகரித்துவிடுவார்கள். விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு இதை செயல்படுத்துவதாய் நினைக்கிறது அரசு. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. உண்மையாக விவசாயிகளின் நலனை மனதில் கொண்டிருந்தால், அவர்களின் பொருட்களை அவர்களே விற்பனை செய்ய உரிமை அளித்திருக்க வேண்டும். ஒரு துணி கடைக்கு போகிறோம். ஒரு துணி எடுக்கிறோம். விலை 500 ரூபாய் என்று ஒட்டி இருக்கிறது. அதை பேரம் பேசாமல் வாங்கி வருகிறோம். ஆனால் காய்கறி வாங்க சந்தைக்கு சென்றால், 1 கிலோ வெங்காயம் 15 ரூபாய் சொல்வான் விவசாயி, ஆனால் அதை நீங்கள் 12 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவீர்கள். இதில் விவசாயி எங்கே பயனடைகிறான். மேலே சொன்னது போல, அந்நிய முதலீட்டாளர்கள் சொன்ன விலையை கொடுத்து விடுகின்றனர் ஆனால் நம் விவசாயி சொன்ன விலையில் பேரம் பேசுகின்றனர். இதனால் லாபம் அடைவது நாம் இல்லையே. அந்நிய முதலீட்டாளர்கள் தானே. ஐரோப்பாவில் ஒரு நிமிடத்துக்கு ஒரு விவசாயி தன் விவசாயத்தை விட்டுவிட்டு வேறொரு தொழிலை தேடத்துவங்குகிறான் என்கிறது ஒரு அறிக்கை. இந்த நிலை நம் நாட்டிற்கும் வந்துவிடுமோ என்றுதான் நான் அச்சப்படுகிறேன். 

     பேராபத்து என்று எதுவும் இல்லை. அது சிறியதாய் தான் வரும். ஆனால் அதன் விளைவுகள் பின்வரும் நாட்களில்தான் அது பேராபத்து என்பதை நமக்கு உணர்த்தும். இன்றைய பொருளாதார நிலையை மனதில் கொண்டு அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பது நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு சமம். 

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: