ஜனநாயகம்

Saturday, September 08, 2012



    நமக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளில் மிகவும் முக்கியமான உரிமை ஓட்டுரிமைதான். ஆனால் இதை எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகின்றனர் என்று தெரியவில்லை. நான் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிய பிறகு கிட்டதட்ட 3 தேர்தல்களை பார்த்துவிட்டேன். ஆனால் ஒருமுறை கூட நான் வாக்களிக்க சென்றதில்லை. என் உரிமையை நான் விட்டுக்கொடுக்கிறேன் தான், ஆனால் என்ன செய்ய..

    ஒரு ஹோட்டலுக்கு போகிறோம். அங்கே நமக்கு நல்ல பசி. நாம் விரும்பும் உணவு இல்லை. நேற்று செய்த உணவு மட்டுமே அதுவும் கெட்டுப்போன நிலையில்தான் இருக்கு என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதை உண்பீர்களா இல்லை வேறு கடையை நோக்கி செல்வீர்களா. பெரும்பாலான மக்கள் அதை வெறுப்பார்கள், சிலர் பசிக்கு எது கிடைத்தால் என்னவென்று அதை உண்பார்கள்.

    இதில் நான் முதல் ரகம். ஒரு நல்ல, தகுதியான ஆள் தேர்தலில் நிற்காத போது, நல்லவன் வேறு எவனுமே இல்லை என்கிற காரணத்தால் ஒருவனுக்கு வாக்களித்து வருவதைவிட எவனுக்கும் வாக்களிக்காமல் இருப்பதே நான் என் நாட்டிற்கு செய்யும் கைமாறாக நினைக்கிறேன். ஊழல், இலஞ்சம் மற்றும் பல குற்றங்களுக்கு பெயர் போன ஒருவனை ஆட்சியில் அமரவைத்த பெருமை எனக்கு வேண்டவே வேண்டாம். யாருக்கும் ஓட்டு போடாமல், தன் வாக்குறிமையை பயன்படுத்தாத ஒரு முட்டாள் என்ற இழிச்சொல்லே எனக்கு போதும். நமது தேர்தல் ஆணையமும், யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்கள், தனியே ஒரு விண்ணப்பத்தை தேர்தல் நேரத்தில் தேர்தல் நடக்கும் அறையில் வைத்திருப்பார்கள், அதை நாம் பூர்த்தி செய்து தரனுமாம். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாவண்ணம் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமையும் கூட. ஆனால், ஒருவன் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை மட்டும் பகிரங்கமாக அறிவிப்பது போலத்தானே இருக்கிறது இந்த நடவடிக்கை. 

    மாற்றம் வேண்டும். தேர்தலில் மட்டும் அல்ல, தேர்தல் நடைமுறைகளிலும், தேர்தலில் போட்டியிடுவோரை பதவிக்கு வரும் முன்னரே கலங்கமற்றவரா என சோதிக்கும் சக்தியை மக்கள் கையில் தரவேண்டும். 

     பல ஊடகங்களில் செய்திகள் பல வந்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்களவையில் இருக்கும் உறுப்பினர்களில் 100 பேர் மீது கொலை குற்றம் இருக்கு, 150 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கு என்று. சரி, இவ்வளவு தெரிந்தும் நமது மக்களும், தேர்தல் ஆணையமும், நீதி துறையும் அமைதி காப்பது ஏனோ. காரணம் இருக்கு. அப்படி பதவியில் வந்து அமர்ந்தவர்களை திரும்பி வீட்டுக்கு அனுப்ப சட்டத்தில் இடமில்லை. சரி, அப்படியொரு சட்டத்தை இயக்க சொல்லலாம் என்று பார்த்தால், அந்த சட்டத்தை இயற்றும் சக்தி அந்த கிரிமினல்கள் கையில் தான் இருக்கு. அவர்கள் கையில் அவர்களே விலங்கு மாட்டிக்கொள்வார்களா. சட்டச்சிக்கல் என்பது இதுதானோ.

    சரி, இதை விடுங்கள். எப்படியோ போகட்டும் இந்த சமூகம் என்று என்னால் இருக்க முடியவில்லை. நல்லதொரு விடியலை உருவாக்குவோம் நாம். அடி மேல் அடி அடிப்போம். அம்மி நகர்கிறதா என்று பாராமல், அம்மி போல் அமர்ந்திருக்கும் அரசியல்வியாதிகளை நம் ஜனநாயகத்தின் சக்கரத்தில் இருந்தே அடியோடு தள்ளிவைப்போம்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: