புதிய பாரதம் மலரட்டும்....

Tuesday, August 24, 2010






அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளைப் பார்க்கும்போதோ, அதைப் பற்றிப் படிக்கும்போதோ, நம்மவர்களுக்கு அந்த மாதிரி எல்லாம் நம் நாடு இல்லையே என்று! . வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த நாடுகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த இன்னொரு முகத்தை அறிந்த இந்தியர் எவரும், தன் நாட்டைப் பற்றித் தாழ்வாக நினைக்க மாட்டார் என்பதுதான் நிஜம். 

வறுமை தாண்டவமாடும் பூமி... பாம்பாட்டிகள், குரங்காட்டிகள் நிறைந்த ஊர்... இந்தியர்கள் எல்லோரும் மூட நம்பிக்கைகளில் திளைப்பவர்கள்... 

கோவணங்களைக் கட்டிக்கொண்டிருக்கும் பரதேசிகள் நிறைந்த ஊர்... வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுபவர்கள்... 

இந்தியாவைப் பற்றி மேலைநாடுகளில் பெரும்பாலானவர்கள் இப்போதும் இப்படிதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இமேஜ் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருந்தாலும், பொதுவாக பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை இன்னும் கேலிப் பார்வைதான் பார்க்கின்றன. 

1. வளர்ந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகம். சுதந்திரம் பெற்று 200 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அமெரிக்காவிலேயே இந்த நிலை! 

2. இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வெளியேறி 59 ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த குறுகிய காலத்துக்குள்ளேயே இந்தியா நிறைய சாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

3. ஆனாலும், இந்தியா பற்றி பெரும்பாலான மேலைநாட்டு ஊடகங்கள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. "தி இண்டிபெண்டன்ட்" பத்திரிகை சமீபத்தில் ஐரோப்பிய நாட்டைவிடவும் இந்தியா அதிக அளவில் கார்பன் போன்ற விஷ வாயுக்களை உற்பத்தி செய்கிறது என்று அந்தக் கட்டுரை சகட்டுமேனிக்குக் குற்றம் சுமத்தியது. 

4. ஒரு விஷயத்தை அந்தப் பத்திரிகை மறந்துவிட்டது & அல்லது, மறைத்துவிட்டது. 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு தனி நாட்டுடனும் ஒப்பிட முடியாது; ஒப்பிடக் கூடாது. மாறாக, ஐரோப்பா கண்டம் முழுவதுடனும் ஒப்பிட வேண்டும். 

5. ஓர் அமெரிக்கர் உற்பத்தி செய்யும் கார்பன் டையாக்சைடு வாயுவின் அளவில் பத்தில் ஒரு பங்கைதான் ஓர் இந்தியர் சராசரியாக உற்பத்தி செய்கிறார் என்பதுதான் உண்மை. 

6. அதே பத்திரிகை, சில நாள் கழித்து இன்னொரு கட்டுரை வெளியிட்டது. உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் என்று குறிப்பிட்டு, அதற்காக இந்தியாவையும் சீனாவையும் குறைகூறியிருந்தது. 

7. இந்தியாவின் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுவா காரணம்? வெறும் எண்ணிக்கை அடிப்படையிலா நாடுகளை ஒப்பிடுவது? 

8. இந்தியாவில் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 336 பேர் வசிக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 246 பேர் வசிக்கிறார்கள். உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 137 பேர்தான் உள்ளனர். 

9. உலகில் உள்ள அத்தனை மக்களையும் அமெரிக்காவில் குடியேறச் செய்தாலும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 300 பேர் கூட இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, உலகப் பிரச்னைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்பதை எப்படி ஏற்க முடியும்? 

10. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவின் செயல்பாடு பாராட்டும் வகையில்தான் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் அமெரிக்க, இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்திகளாக இடம் பெறுவதில்லை. 

11. எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் இந்தியாவை எப்போதுமே முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் வழக்கம் மேற்கத்திய ஊடகங்களுக்கு உண்டு. ஆனால், 110 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மிகக் குறைவு என்பதை அவை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. 

12. இவ்வளவு மக்கள்தொகை இருந்தும், பல மொழி, பல இனம், பல கலாசாரம் என்று இருந்தும் இந்தியா என்ற ஒரு நாடு ஜனநாயக வழிமுறைகளில் இருந்து இன்னமும் விலகாமல் இருக்கிறதே! இதையும் மேற்கத்திய நாடுகள் அங்கீகரிப்பதில்லை. 

13. வறுமையாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஆகட்டும், சுகாதாரம் ஆகட்டும், எல்லா பிரச்னைகளுக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது பழி போட்டுவிட்டு, தப்பித்துக்கொள்வது என்பது வளர்ந்த நாடுகளின் வழக்கம் ஆகிவிட்டது.

14. தகவல் தொழில்நுட்பம், அணு ஆராய்ச்சி, வின்வெளி ஆய்வு போன்றவற்றில் வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்திருக்கிறது. நாம் இன்னமும் செய்ய வேண்டியதை மறந்துவிடக் கூடாது. 

15. கிட்டத்தட்ட 30 கோடி இந்தியர்களுக்கு மூன்று வேளை உணவு என்பதே ஒரு கனவாக இருக்கிறது என்பது கொடுமை. இந்தியாவில் வறுமை எப்போது முற்றிலும் ஒழிக்கப்படுகிறதோ அப்போது ஒரு புதிய இந்தியா பிறக்கும்.


நன்றி: தினகரன்


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: