கிறுக்கன்

Friday, July 09, 2010





     நான் போன வாரம் இந்தியன் வங்கி சென்று இருந்தேன். எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த அன்பர் ஒருவர் கையில் கத்து கத்தாக பணம் வைத்திருந்தார். அத்தனையும் 100 ரூபாய் நோட்டுகள். அவர் பணத்தை எண்ணி முடித்துவிட்டு, தன் பேனாவை எடுத்து அந்த ரூபாய் நோட்டுக்களின் மீது அதன் எண்ணிக்கையை எழுதினார். இதை வங்கி அலுவலரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். நான் அவரிடம் இதைப் பற்றி கேட்கும் முன் அவர் அலுவலரிடம் தான் வைத்திருந்த பணத்தை எடுத்து நீட்டினார். அலுவலரும் பணத்தை வாங்கி தன் பங்கிற்கு மீண்டுமொரு முறை எண்ணிப்பார்த்தார். எனக்கு என்ன ஆச்சரியமென்றால், அந்த அலுவலரும் பணத்தின் எண்ணிக்கையை அந்த ரூபாய் நோடின் மீது மீண்டும் எழுதினார். என்ன கொடுமை சார் இது என்று கேட்டு விடலாம் என்று தோன்றியது எனக்கு. ஆளாளுக்கு பணத்தில் கிறுக்க அவர்கள் என்ன RBI கவர்னரா இல்லை அது என்ன வெள்ளைக் காகிதமா. நம் இந்தியாவின் பெருமையினை நிலைநாட்டும் இந்திய ரூபாய் நோட்டில் கிறுக்குவது மிகப் பெரிய தவறு. இப்படி செய்வது அந்த ரூபாய் நோட்டினை பெரிய வர்த்தகங்களுக்கு உபயோகமற்றது ஆக்கிவிடுகிறது.
         இப்படி நம் மக்கள் நம் ரூபாய் நோட்டில் எழுதுவதால் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் பணம் வீணாகுகின்றது என்று ஒரு தகவல் சொல்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பார்ப்பதை விட ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் என்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
     நான் பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். காதல் ஜோடிகளின் பெயர்கள் ரூபாய் நோட்டுக்களில் எழுதப்பட்டிருக்கும். அட அறிவில்லாத காதல் புறாக்களே. காதல் என்பது ஊருக்கு வெளிப்படுத்த வேண்டியதில்லை. உங்கள் மனதிற்கு மட்டும் வெளிப்படுத்தினால் போதுமே. அதை ஏன் நம் பாரம்பரியம் மிக்க இந்திய ரூபாய் நோட்டில் எழுதி நம் இந்தியாவையும் புனிதமான காதலையும் கொச்சைப் படுத்துகிறீர்கள்.
     இதுபோலதான் நம் பாரம்பரியம் மிக்க சுற்றுலாத் தளங்களில் இவர்களின் செயல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. பேருந்து இருக்கைகளில், தியேட்டர் சுவர்களில், ரயில் பெட்டிகளில், கோவில் சுவர்களில் அட இதைவிட கண்ணில் தெரியும் காலி இடங்கள் எங்கும் இவர்களின் கை வித்தை தான் அதிகம் தெரிகிறது. இதை இவர்கள் மனம் வைத்தால் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் செயல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரவேண்டுமே தவிர வெறுப்பை ஒருபோதும் ஏற்படுத்த கூடாது. ஆகவே அன்பர்களே தயைகூர்ந்து பொது இடங்களில் கிறுக்குவதை நிறுத்துங்கள். உங்கள் கருத்துக்களை வலைப்பக்கத்தில் கிறுக்குங்கள் – என்னைப் போல…



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: