முதல் காதல்..

Monday, October 08, 2012




     மனிதன் எதை வேண்டுமானாலும் காலப்போக்கில் மறந்துவிடலாம். ஆனால், தன் வாழ்வில் எட்டிபார்த்த முதல் காதலை ஒருவராலும் ஒருபோதும் மறக்க முடியாது. பொதுவாக அனைவரின் வாழ்விலும் காதல் நிச்சயம் எட்டிப்பார்க்கும், எட்டிப்பார்த்திருக்கும். பெரும்பாலான முதல் காதல் ஜெயிக்காமலே போய்விடும். அதற்கு காரணம், காதல் என்ன என்றே தெரியாத வயதில் அந்த காதல் வருவதால்தான் முதல் காதல் பெரும்பாலும் வெற்றி காண்பதில்லை. என் முதல் காதல் பற்றி என் வலையில் ஒரு வருடத்திற்கு முன்னரே பசுமை நினைவுகள் என்னும் தலைப்பில் கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் சேர்த்து ஒரு கதையாக எழுதி இருந்தேன். முதல் காதலைப்பற்றி சொல்லும்போது என் முதல் காதலையும் கொஞ்சம் தூசு தட்டிப்பார்த்தேன்.

     நான் செய்த கிறுக்குத்தனங்களை எண்ணி இப்போது சிரித்துக்கொள்கிறேன். அது காதல் இல்லை ஒரு ஈர்ப்புதான் என்று தெரியாத வயசு  அது. அவளை எப்போது பார்த்தாலும் சீண்டிக்கொண்டே சண்டையிட்டுக்கொண்டே இருப்பேன். அவள் கொஞ்சம் திமிராய் இருப்பாள், நான் அவளைவிட கொஞ்சம் அதிகம் திமிராய் அவளிடம் மட்டும் நடப்பேன். இதனாலேயே எங்களுக்குள் எப்போதும் ஒரு வாக்குவாதம் இருந்துட்டே இருக்கும். இருப்பினும் அது எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்துச்சு. அவள் ஒரு முறை தன் கட்டுரை நோட்டை தமிழாசிரியையிடம் சமர்பித்துவிட்டு சென்றுவிட்டாள். நான் தான் அப்போது எங்கள் வகுப்பிற்கு தலைமை பொறுப்பு என்பதால் தமிழாசிரியை என்னை அந்த நோட்டுக்கள் எல்லாத்தையும் ஆசிரியர்கள் அறைக்கு கொண்டு வந்து வைக்க சொன்னார். அன்று சனிக்கிழமை. எப்படியும் அவர் அவ்வளவு நோட்டுக்களையும் திருத்த மாட்டார் என்று எனக்கு தெரியும். அதனால், எல்லா நோட்டுக்களையும் எடுத்துக்கொண்டு போய் அவர் அறையில் வைத்துவிட்டு அவள் நோட்டைமட்டும் மடித்து என் சட்டைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டேன். ஒருவழியாக அதை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் என் பைக்குள் வைத்துவிட்டேன். வீட்டிற்கு வந்ததும், அவள் நோட்டை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா வந்துவிட்டார். யார் நோட்டு இது கையெழுத்து புதுசா இருக்கே என்று எடுத்து பார்த்துட்டார். ஐயோ, மாட்டிக்கிட்டோம் என்று பயந்துட்டேன். சரி சமாளிப்போம் என்று, தமிழாசிரியை நான் கட்டுரை நோட்டை முடிக்காமல் இருப்பதால் இந்த நோட்டை தந்து இதை பார்த்து எழுதிவர சொன்னார்கள் என்று சொல்லி சமாளிச்சுட்டேன். காதல் வந்தால் பொய்யும் உடன்பிறவா சகோதரன் போல கூடவே வந்துவிடும் என்பது உண்மைதான் பாருங்கள். அப்புறம், அவள்  நோட்டை எடுத்து அவள் எழுதிய ஒரு பக்கத்தை கிழித்து என் டேபிளில் மறைத்துவைத்துக்கொண்டேன். திங்கட்கிழமை திரும்பவும் என்னைதான் ஆசிரியை அனைத்து நோட்டுக்களையும் வகுப்பறைக்கு கொண்டுவர சொன்னார். அவர் சொல்வார் என்று எனக்கு முன்னரே தெரியும், அதனால் அவள் நோட்டை எடுத்து என் சட்டைக்குள் மறைத்துவைத்துக்கொண்டேன். கொண்டுவரும்போது அவள் நோட்டையும் மற்ற நோட்டுக்களுடன் சேர்த்துவிட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே ஆசிரியை அனைத்து நோட்டுக்களை திருத்தம் செய்யவில்லை. இன்னும் இரண்டு கட்டுரைகளை எழுதிவிட்டு புதன்கிழமை மீண்டும் சமர்பிக்க வேண்டும் என்று சொன்னார். நான் தான் அனைவருக்கும் அவர்களின் கட்டுரை நோட்டை விநியோகம் செய்தேன். அனைவரின் நோட்டையும் கொடுத்துவிட்டு என் நோட்டை என் இடத்தில் சென்று வைத்துவிட்டு அவள் நோட்டைத்தான் கடைசியாக அவளிடம் கொடுத்தேன். அப்போதே சிறிதாய் ஒரு முறைப்பாய் என்னை பார்த்தாள். நானும் அவள் நோட்டை கொடுத்துவிட்டு என் இடத்தில் வந்தமர்ந்தேன். அவள் தன் நோட்டை திறந்து பார்த்தாள். ஒரு பக்கம் கிழிந்திருப்பதை பார்த்தாள். எதுவும் பேசாமல் சட்டென்று என்னை திரும்பி பார்த்தாள். இப்போது அவள் பார்வையில் கோபம் கொஞ்சம் அதிகம் தெரிந்தது. எனக்கோ ஒரு சின்ன பயம். அவள் ஆசிரியையிடம் சொல்லிவிடுவாளோ என்று. ஆனால் அவள் என்னை முறைத்ததோடு நிறுத்திக்கொண்டாள். அவளுக்கு நன்றாகவே தெரியும் அதை நான்தான் செய்திருப்பேன் என்று. மனதில் என்ன நினைத்தாலோ தெரியவில்லை, அவள் அதை யாரிடமும் சொன்னதாய் எனக்கு தெரியவில்லை.

   இது ஒரு சின்ன விஷயம் தான். இதைவிட பெரிதாய் பல கிறுக்குத்தனங்களை எல்லாம் செய்திருக்கேன். அவள் பிறந்தநாளன்று எங்கள் வீட்டில் தரைவழி தொலைப்பேசியில் இருந்து அவள் வீட்டு தொலைப்பேசிக்கு அழைத்து "Happy Birthday" என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டேன். ஆனால் ஒரு சின்ன சொதப்பல். தொலைப்பேசியை எடுத்தது அவள் இல்லை அவளின் அம்மா என்று மறுநாள் தான் தெரிந்துக்கொண்டேன். அவளுக்கு பிறந்தநாள் என்பதால் அவளை அன்று அவள் வீட்டில் திட்டவில்லை. என் நண்பர்கள் மூலம்தான் எனக்கு தெரியவந்தது, நேற்றிரவு யாரோ ஒருத்தன் அவள் வீட்டிற்கு தொலைப்பேசியில் அழைத்து அவளுக்கு வாழ்த்து தெரிவித்தானாம். அவன் யாரென்று தெரியாமல் அவள் குழப்பத்தோடு இருக்கிறாள், அவன் யாரென்று தெரிந்தால் பிரின்சிபாலிடம் நேரில் சென்று சொல்வதாக இருக்கிறாள் என்றார்கள் என் நண்பர்கள். நல்ல வேலையாக, நான் இதை என் நண்பர்களிடம் உளறிகொட்டவில்லை. 

  இப்படி இன்னும் பல பல கிறுக்குத்தனங்களை செய்திருக்கேன். நானா இப்படியெல்லாம் செய்தேன் என்று நீங்கள் யோசிக்கும் அளவிற்கு பல விஷயங்களை முதல் காதலுக்காக செய்திருக்கேன். 15-16 வயதாச்சே. என்ன செய்ய. வயது கோளாறா இல்லை மனது கோளாறா என்றுதான் தெரியவில்லை. என்ன இருந்தாலும் என் வாழ்வில் முதல் காதல் வந்த பின்னர்தான் கவிதைகள் எனக்கு எழுத வரும் என்பதை உணர்ந்துக்கொண்டேன். அப்போது கவிதைகள் என்ற பெயரில் சிலவற்றை கிறுக்கி அவள் நோட்டில் எல்லாம் வைத்திருக்கிறேன். அவளிடத்தில் ரொம்ப பிடிச்சது அவள் திமிர் மட்டுமின்றி, எந்த விஷயத்தையும் பெரிதாக்க மாட்டாள். அதனால்தான் நான் செய்த பல விஷயங்களால் நான் ஒருமுறையும் மாட்டிக்கொண்டதில்லை. அவள் என்மீது கோபம் வைத்திருந்தாலும் அந்த கோபத்திலும் சிறு அக்கறை இருந்தது என்பதை நான் அறிந்தேன். நேரம் வருகையில் நிச்சயம் என் முதல் காதலைப் பற்றி பதிவு செய்கிறேன்.

பின்குறிப்பு: நான் மேலே சொன்னது உண்மையா இல்லை கற்பனையா என்று முடிவு செய்வது உங்கள் கையில்....


- அன்புடன்
****தினேஷ்மாயா****

2 Comments:

Anonymous said...

naanum ippadi thaan seithu kadaisiyil avalidam kathalai solli vidden

தினேஷ்மாயா said...

பதில் என்ன கிடைத்தது ??