பச்சைத்தமிழ்

Sunday, October 28, 2012



இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

புறநானூறு : 13 - நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். துறை : வாழ்த்தியல்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


  இது புறநானூற்றில் இருந்து எடுக்கப்பட்ட பாட்டு. இதை நான் இங்கே எதற்காக பதிவு செய்திருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ?
    
   மேலே புறநானூற்றில் இருப்பதும் தமிழ்தான், நான் இங்கே எழுதுவதும் தமிழ்தான். ஆனால், புறநானூற்றில் இருப்பது நமக்கு அவ்வளவாக புரிவதில்லையே. ஏன்??

   தமிழை நாம் வாழவைக்கிறோம் என்று எவ்வளவு கொலை செய்திருக்கிறோம் என்று தெரிகிறதா. சங்க காலத்து தமிழ் என்று பிரித்து சொல்ல வேண்டாம். அதுவும் தமிழ்தான். அந்த தமிழை வேற்றுமொழிகளில் கலப்பால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டோம் என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை. இன்றைய சூழலில் வெறும் ஏட்டுக்களில் மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என் பச்சைத்தமிழ். இப்போது இருப்பதெல்லாம் சாயம் வெளுத்துப்போன தமிழ் மட்டுமே. சங்க இலக்கியத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அறிந்துக்கொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அதுதான் ஒரு பச்சைத்தமிழனுக்கு அழகு..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: