அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !

Saturday, October 15, 2016



  ஆயுதபூஜை விடுமுறை முடித்து கோயம்புத்தூர் வருவதற்காக ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தேன். அன்று 30 நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டேன். இசைஞானியின் இசையை என் காதுகளுக்கு விருந்தாக்கிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு பாட்டி வந்து அமர்ந்தார். ஒரு ஐந்து நிமிடம் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. நாம் காதில் Earphone மாட்டிக்கொண்டிந்த காரணத்தாலோ என்னவோ?

ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். கோவை இந்த ப்ளாட்பாரத்தில்தானே தம்பி வரும் என்று. நான், Earphone-ஐ கழற்றிவிட்டு ஆம் இதில்தான் வரும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் இசையோடு கலந்தேன். என்னுடன் பேச்சை தொடர்ந்தார் அந்த பாட்டி. நான் Earphone-க்கு விடைகொடுத்துவிட்டு அந்த பாட்டியிடம் உரையாடலானேன். இப்படிதாம்பா ஒருமுறை அஞ்சாவது ப்ளாட்பாரத்துல வண்டி வருதுன்னு சொல்லி திரும்ப ஒன்னாவது ப்ளாட்பாரத்துல வருதுன்னு மாத்தி சொல்லி ரொம்ப அலைஞ்சுட்டோம். வயசானவா நாங்க, மாறி மாறி ஏறி இறங்கதுக்குள்ள வண்டி வந்துருச்சு என்றார். ஆமாம் பாட்டி, அப்பப்ப அப்படி நடக்கும், ஆனா எப்பவும் இந்த ப்ளாட்பாரத்துலதான் வரும்னு நான் சொன்னேன். கோவைல இருக்க எங்க பொன்னு வீடு கொஞ்சம் இடிச்சு கட்ட போறாங்க அத பாத்துக்க நாங்க போயிட்டு இருகோம், பொன்னு ஐதராபாத்-ல இருக்கா அவங்க காலைலயே கோவை போய் சேர்ந்திருப்பாங்க, நம்ம வழியாதான் அவங்க வண்டி போச்சு ஆனா காலைல 5 மணிக்கு அவங்க கூட அதே வண்டியில எங்களால போக முடியல, அவர் பாவம் காலம்பர 4 மணிக்கே அவர எழுப்ப வேணாம்னுதான் எல்லாத்தையும் நேத்தே லாரில ஏத்தி அனுப்பிட்டோம், மேஸ்திரி இந்நேரம் அங்க போய் எல்லாம் இறக்கி வெச்சிருப்பார். நமக்கென்ன சும்மா காவல் காக்கத்தானே போறோம் அதான் பொறுமையா கிளம்புறோம்னு படபடவென பேசிட்டே போனார். மேலும் தொடர்ந்தார். அவர் அதோ அங்க உக்காந்துட்டு இருக்கார்னு ஒரு இடத்தை காட்டினார் பாட்டி. நானும் பார்த்தேன். சற்று தூரத்தில் வெள்ளை வேட்டி சட்டையுடன் கையில் ஒரு நாளிதழுடன் அமர்ந்திருந்தார் ஒரு பெரியவர். அவர் Dominic Savio-ல Head Master-ஆ இருந்து Retire ஆனவரு. இங்க இருந்தா எதாச்சும் வெளியில வேலை செஞ்சுட்டே இருப்பார். போனவாரம் கூட Principal வந்து ஒரு Meeting இருக்குனு சொல்லி Invitation குடுத்துட்டு போனார். இங்க இருந்தா மனுஷன் ஒரு இடத்துல இருக்க மாட்டார். Bank-க்கு கூட அவரே நடந்துதான் போவார். இத்தனை வருஷம் நேர்மையாக வாழ்ந்திட்டு இருக்கார். ஒருத்தர்ட்ட கூட காசுன்னு எதிர்ப்பார்த்து வாழ்ந்ததில்லை அவர். பசங்க எதாச்சும் காசு குடுத்தாகூட, அதை ஒரு ரூபா கூட குறையாம உடனே Bank போய் அவங்க account-ல போட்டுட்டு வந்துருவார். நாங்க எங்க போனாலும் ரெண்டு நாள் மூனு நாள் மேல அங்க தங்க முடியறதில்ல. நாம எதுக்கு மத்தவங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டு. எதோ நாங்க மனசுல இளமையா இருக்கறதால அங்க இங்க போயி பசங்க பேரங்கனு பாத்துட்டு வரோம். என்க்கு 75 வயசாச்சு. Sir-கு 87 ஆனா இப்பவும் யார் தயவும் இல்லாமதான் இருக்கோம். ஒரு பையன் சிங்கப்பூர்-ல இருக்கான், பெரிய பொன்னு கொச்சின்-ல இருக்கா, சின்ன பொன்னு ஐதராபாத்-ல இருக்கா. அவ வீடு ஒன்னு கோவைல இருக்கு, அத கொஞ்சம் alteration பண்றா அத பாத்துக்கத்தான் நாங்க போறோம்னு சொன்னார் அந்த பாட்டி. நான் அவர் சொன்ன அனைத்திற்கும் பொறுமையாக கேட்டுக்கொண்டும் சில நேரங்களில் என் கருத்துக்களையும் தெரிவித்து வந்தேன். அவர் இன்னமும் நிறைய பேசினார்.

அந்த பாட்டி பேசிய 20 நிமிடத்தில் 10 நிமிடம் தன் கணவரைப்பற்றியே உயர்வார் பேசிக்கொண்டிருந்தார். அந்த பேச்சில் அவர்களிடையேயான காதல் தென்பட்டது. அந்த உன்னதமான அன்பிற்கு நான் தலைவணங்கினேன். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது. சரி பாட்டி நான் கிளம்பறேன் என்று கூறி கிளம்பலானேன். அடுத்த முறை ஊருக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வந்து போப்பா என்று சொல்லி அவர்கள் வசிக்கும் வீட்டின் தெரு பெயரையும் வீட்டு எண்ணையும் என்னிடம் சொன்னார். சரி பாட்டி என்று சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன். அப்போது அந்த பாட்டியின் கணவரான அந்த பெருமைக்குரிய தாத்தாவை கடந்துதான் சென்றேன். அவர் அங்கே ப்ளாட்பாரத்தில் இருந்த ஒரு திண்ணையில் வெண்ணிற உடையில், கையில் தினமணி நாளேடு படித்துக்கொண்டிருந்தார். அவரை கடக்கும்போது என்னையறியாமலே அவர் மீது மரியாதைக்கொண்டது. இவர்கள் இருவரின் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை ஒரு நொடி சிந்தித்துப்பார்த்து சிலிர்த்துப்போனேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன். இந்த அருமையான சம்பவத்தை என் வலைப்பக்கத்தில் பதிந்தேயாக வேண்டும் என்று...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !

* தினேஷ்மாயா *

0 Comments: