எது அழகு ?

Sunday, January 27, 2013



     அழகு என்பது பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறதே தவிர, உருவ தோற்றத்தில் இல்லை. இன்றைய காலகட்டத்தில் அழகு என்றால், வெண்மையாக இருப்பது என்று பொருள் கொள்ளும் வண்ணம் மாறிகிடக்கிறது இந்த சமூகம்.

தகவல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாய் மாறிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் ஊடகங்கள் சொல்வதை வேத வாக்காக எண்ணி நடக்கின்றனர். ஊடகங்களில் சொல்வதை வெறும் காதில் மட்டும் கேட்டுவிட்டு, தன் மனதார சிந்தித்து செயல்படும் மக்கள் வெகு குறைவே. அப்படியிருக்க, ஊடகங்கள் தங்கள் வியாபாரத்திற்காக சமுகத்தில் பல தீய எண்ணங்களை விதைக்கின்றனர்.

     அழகு சாதனங்களை விற்பனை செய்ய, அழகு சாதனங்களை உபயோகிப்பவர்கள் மட்டுமே அழகாய் இருப்பர் என்பன போன்ற ஒரு மாயை நிலையை சமூகத்தில் விதைத்திருக்கின்றனர். என் தமிழ் பெண்கள், இயற்கையான பொருட்களை மறந்து, அழகு பொருட்கள் என்று சொல்லப்படுபவைகளையும், அழகு நிலையத்தையும் நாடி செல்லும் அவல நிலை அறங்கேறி வருகிறது. முகத்திற்கும் தேகத்திற்கும் மஞ்சள் பூசும் நிலை போய், Facial-ஐ நாடி செல்கின்றனர். மாதம் ஒருமுறையில் தொடங்கி வாரம் ஒருமுறை அதை செய்துக்கொள்ளும் அளவிற்கு அழகு என்கிற வார்த்தை பெண்களை பாடாய் படுத்துகிறது.
     வருத்தப்படும் விஷயம் இன்னொன்றும் இருக்கிறது. பெரும்பாலான ஆண்கள் அப்படியிருக்கும் பெண்களைத்தான் விரும்புகின்றனர் என்பதால் பெண்களும் அப்படியே இருக்க விரும்புகின்றனர். உண்மையான அழகு என்பது உள்ளத்தில்தான் இருக்கிறது என்பதை அனைவரும் எப்போது உணர போகின்றனர்.
                                
                                  
     சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை பார்த்தேன். நீங்கள் திரையில் காண்பது போல அவள் அழகொன்றுமில்லை. பார்வையற்ற ஒரு நபர் சில பூசை பொருட்களை தெருவில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார். அவள் தன் தோழிகளுடன் சென்று அவரிடம் சில பொருட்களை வாங்கிவிட்டு என்னைக்கடந்து சென்றாள். அப்போது அவள் தோழிகள், எதுக்குடி இதை வாங்கின இதுதான் நம்மிடம் ஏற்கெனவே இருக்கே என்றனர். அதற்கு அவள், இது நம்மிடம் இருக்கு என்று எனக்கும் தெரியும், ஆனால் இவரிடம் எத்தனை பேர் பொருளை வாங்குவாங்க சொல்லு. எல்லோரும் பெரிய பெரிய ஷோரூம்களுக்கு சென்று பொருட்களை சொன்ன விலைக்கே வாங்கிவருவாங்க, இல்லைனா சிறிய கடைக்கு சென்று பேரம் பேசி வாங்குவாங்க. இதுபோல பார்வையற்றவர்கள் பிச்சை எடுக்காமல், சிறிதாய் மட்டுமே லாபம் கிடைத்தாலும் ஒரு தொழிலை செய்து வாழும்போது அவர்களை ஊக்குவிக்கனும் என்று சொன்னாள். அவள் என் கண்களுக்கு ரொம்பவே அழகாய் தெரிந்தாள். வெள்ளைத் தோளின் உள்ளே கறுப்பு மனம் படைத்தவளைவிட, கறுப்புத் தோளின் உள்ளே வெள்ளை மனம் படைத்தவளே என்னைப்பொறுத்தவரை உண்மையான அழகுடையவள், என்றும் அழியா அழகுடையவள்.

- தினேஷ்மாயா -

0 Comments: