இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Saturday, January 12, 2013



   என் நண்பர்கள் எனக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும்போது பெரும்பாலானோர் Happy Pongal என்று ஆங்கிலத்திலேயே வாழ்த்தினர். அவர்களுக்கு நன்றி என்று பதில் தெரிவித்துவிட்டு, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தேன். நான் சந்தித்ததில் பலர் இப்படிதான் ஆங்கிலத்தில் வாழ்த்தினர். அப்போது மனசு கொஞ்சம் சுறுக்கென்று வலித்தது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவிக்கின்றனர். 

     மனிதனிடம் நாகரிகம் தோன்றிய காலத்திற்கு முன்னிருந்தே விவசாயம் இருந்து வருகிறது. உலகமே ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் எவ்வளவோ போராடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உணவை நமக்கு தருவது விவசாயம் மட்டுமே. விவசாயம் சூரியனையும் மழையையும் அதிகம் நம்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் காரணகர்த்தாவாக இருந்து இந்த உலகை காக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் இப்போது எங்கே இருக்கிறது விவசாயம், பொங்கலை கொண்டாட ?
  
   தொல்லைக்காட்சிகளில் புத்தம்புது சினிமாக்களிலும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளிலும் ஒரு சில பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும்தானே நமது பொங்கல் கொண்டாட்டங்கள் மூழ்கி கிடக்கிறது.

    என் கிராமத்தில் நான் சிறுவயதில் கொண்டாடிய உண்மையான பொங்கலை நினைத்து பார்க்கும்போது மனசில் அவ்வளவு சந்தோஷம் வருகிறது. பல திசைகளில் சிதறிக்கிடக்கும் சொந்த பந்தங்கள் அனைவரும் கிராமத்தில் ஒன்று கூடுவோம். உறவுகளுக்குள் விரிசல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடுவோம். புத்தாடை, புது பானை, பனிக்கரும்பு, பூசனிக்காய் குழம்பு, வடை, பலவகையான கூட்டு, உப்பு போடாத பொங்கல் சோறு... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அந்த நினைவுகளை.

      என் வருத்தமெல்லாம், நம் கலாச்சாரத்தை விட்டு இவ்வளவு தூரம் வண்டுவிட்டோமே, எப்படி நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இனிவரும் தலைமுறையினருக்கு உணர்த்தபோகிறோம் என்பதே. எனக்காவது அந்த உண்மையான பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவிலாவது இருக்கிறது. இனிவரும் தலைமுறையினர் பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் வெறும் சரித்திர நாவல்களில் மட்டுமே படித்து தெரிந்துக்கொள்ளும் அவல நிலை ஏற்படும். 

     இயன்றவரை நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிக்காப்போம். இன்றிரவு ஊருக்கு  செல்கிறேன். இந்தமுறை முதல்முறையாக வெள்ளை வேட்டி சட்டை எடுத்திருக்கிறேன். வீட்டில் பானை வாங்கி பொங்கல் வைக்கலாம் என்றிருக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


- அன்புடன்
****தினேஷ்மாயா*****

0 Comments: