பிரார்த்தனை

Tuesday, January 01, 2013


 

      ஞான மார்க்கம் , பக்தி மார்க்கம் என்று இறைவனை அடைய இந்து மதத்தில் இரண்டு மார்க்கங்கள் சொல்வார்கள். பக்தி மார்க்கத்தைத்தான் பெரும்பாலான  மக்கள் இங்கே தேர்ந்தெடுப்பார்கள். இல்லறத்தில் இருந்தவாறே இறைவனை அடையலாம் என்பதே நம் மக்களின் கூற்றும் கூட. மனதில் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தே நமது நடைமுறையாக இருந்து வருகிறது.

     இன்று ஆங்கில புத்தாண்டு. நேற்றிரவும் இன்று காலையும் என் கிறித்துவ நண்பர்கள் தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்தனர். அதுவும் தேவாலயங்களில் நடைப்பெறும் பிரார்த்தனைகளை பார்த்தால் மணிக்கணக்கில் நடைப்பெறும். அனைத்து பக்தர்களும் பொறுமையாய் இறைவனை பிரார்த்திப்பார்கள்.அங்கே மந்திரங்களுக்கு இடமில்லை என்றாலும், விவிலியத்தில் இருக்கும் சில கூற்றுக்களை பகிர்ந்துக்கொள்வார்கள். கிறித்துவர்கள் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள், அப்படி முடியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் எப்பாடு பட்டாவது தேவாலயம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

   இசுலாமிய தோழர்கள் தினமும் தொழுகையில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகை செய்கின்றனர். குறைந்தது ஒரு தொழுகைக்கு ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடத்தை ஒதுக்குகின்றனர். கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு அரைமணி நேரம் இறைவனை பிரார்த்திக்கின்றனர். அதுவும் அவர்கள் தொழுகை செய்வது ஒருவகை யோகாசனமும் கூட. தொழுகையில் இறைவனை அடைவதோடு உடலையும் நன்றாக வைத்திருக்க யோகாசனமும் கைக்கோர்த்துக்கொள்கிறது.

   இந்து மதத்தின் நிலைப்பாடே வேறு. நம்மவர்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு நேரம் இறைவனை பிரார்த்திக்க செலவழிக்கிறோம் ?

   இறைவனை காணும்போதோ அல்லது மனதில் இறைவனை நினைத்து கண்ணைமூடி ஒரு நொடி அல்லது ஐந்து நொடி பிரார்த்திப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம். வீட்டில் தாய்மார்கள் வேண்டுமானால் பூசைகள் பிரார்த்தனைகள் அபிஷேகம் அலங்காரம் செய்ய பல நேரம் இறைவனுக்காக செலவு செய்வார்கள். அவர்களை தவிர்த்து மற்றோர் இறைவனை துதிக்க ஒரு நாளுக்கு ஐந்து நிமிடம் ஒதுக்குவதே பெரிதாய் இருக்கிறது. இறைவனை பிரார்த்திப்பது கட்டாயம் ஒன்றும் இல்லையே என்பர் சிலர். தேவைக்கு மட்டும் சென்று பிரார்த்தனையை சொல்ல நம் பிரச்சனைகளை கோரிக்கைகளை வைக்க மட்டும் இறைவன் இல்லை.

     உங்களுக்காக பிரார்த்திப்பதோடு இருந்திடாமல், இந்த உலகத்திற்காகவும் கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் அவனை முழுவதும் நம்புங்கள். நம்பிக்கை இல்லாவிட்டால் முழுதும் நம்பாதீர்கள்.

    நான் தினமும் குளித்துவிட்டு, இறைவனுக்கு 3 ஊதுபத்தி ஏற்றிவிட்டு மனதில் எப்போதுமே 2 கோரிக்கைகளை மட்டும்தான் வைப்பேன். இன்றைய நாள் நல்லதாம அமையனும், எல்லோரும் நல்லா இருக்கனும். இதுதான் என்னுடைய பிரார்த்தனையில் அதிகம் இடம்பெறும் .

        எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் பழக்கம் எனக்கில்லை. நான் இறைவனை எப்போது வேண்ட மாட்டேன், பிரார்த்திப்பேன். வேண்டுதலுக்கும் பிரார்த்தனைக்கும் வித்தியாசங்கள் அதிகம் உண்டு. மனதில் அதிக ஆசைகளை வைத்துக்கொண்டால் அதிக துன்பங்களும் வந்து சேரும். அதனாலேயே அதிக ஆசைகளையும் வேண்டுதல்களையும் அவனிடத்தில் நான் முன் வைப்பதில்லை. எதாவது செயலில் ஈடுபடும் முன்னர் இறைவனை ஒரு நிமிடம் பிரார்த்துவிட்டு துவங்குவேன். அதுபோதும் என்று என் மனம் சொல்லும். அதிக வேண்டுதல்களை வைத்துவிட்டு இறைவனை குழப்புவதைவிட, அவனே நமக்கு எல்லாவற்றையும் செய்யட்டும் என்று விட்டுவிட்டேன். 

       நம்மையும் இந்த உலகத்தையும் படைத்த இறைவன் எனப்படும் இயற்கையினை தினமும் வழிபடுவோம். மனதார ஒரு நிமிடமாவது உலக நன்மைக்காக பிரார்த்திப்போம்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: