தியானம் செய்வோம் வாங்க..

Thursday, October 07, 2010



இந்த உலகத்தில் எல்லோரும் என்னைவிட்டு விலகத் தொடங்கிய நேரம் அது.. வாழ்க்கையே வெறுப்பாய் தோன்றியபோது...

ஒருநாள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.. ஜன்னலோர சீட்டில்தான் அமர்ந்திருந்தேன். எதேச்சையாக ஒரு ஆட்டோவின் பின்புறத்தில் இந்த வாசகத்தை கண்டேன்..


“நீ நினைப்பதெல்லாம் நடக்கும், தியானம் செய்” 
- வள்ளலார்...


என்று எழுதப்பட்டிருந்தது..

கடவுள் நேரில் வரமாட்டார். எதாச்சும் உருவத்தில் வந்துதான் நமக்கு உதவி செய்வார் என்ற கொள்கையில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. வாழ்க்கையே வெறுப்பாய் தெரிந்த நேரத்தில் இந்த வாசகம் எனக்கு புதிய உத்வேகத்தை தந்தது. இதற்குமுன்கூட நான் தியானம் ச்ய்ததுண்டு. ஆனால் அதைவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. தியானத்தை என்று விட்டேனோ அன்று முதல் மனநிம்மதி என்பதை கனவிலும் பெறவில்லை நான். இப்போதுதான் உணர்ந்துக் கொண்டேன் நான். இனி தினமும் ஒரு மணிநேரமாவது பழையபடி தியானம் செய்ய வேண்டும் என்று..

நீங்களும் தியானம் செய்யலாமே...

நான் யாரிடமும் தியானம் கற்றுக்கொள்ளவில்லை.. யோகா வேண்டுமானால் ஒரு முறைப்படி குருவிடம் சென்றுதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

என் தியானத்திற்கு நான் தான் குரு.

நான் எப்படி தியானம் செய்வேன் என்று கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். ஏனென்றால் பலப்பேர் பலமுறை என்னிடம் கேட்டதுண்டு. நீங்க எப்படி தியானம் செய்வீங்கனு. நான் தியானம் செய்வது ஒரு சிலருக்கே தெரியும். இப்போது அது உங்களுக்கு தெரியும். நான் எதுக்கு சொல்றேன்னா, நீங்களும் முயற்சி செய்யனும்னுதான்..

தியானம் செய்ய உகந்த நேரம் என்று எதுவும் இல்லை.. மனம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது. மனம் இருந்தால் போதும். எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்..

பலர் சொல்வர். காலை எழுந்ததும் தியானம் செய்வது நல்லது என்று. நான் ஒன்றும் அதை மறுக்கவில்லை. முதலில் தியானம் எதற்கு என்று தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நாளில் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்குவீர்கள்தானே.. தூக்கம் என்பது உங்கள் உடலுக்கு நீங்கள் தரும் ஓய்வு..

SLEEP - Stress Level Elimination Exercise Plan என்று சொல்வாங்க.
உங்கள் உடம்பிற்கு ஓய்வு தரும் நீங்கள் ஏன் உங்கள் மனம் அதாவது உங்கள் மூளைக்கும் மனதிற்கும் ஓய்வு தருவதில்லை..

மற்றவரிடம் பேசும்போதும்,யாரிடம் பேசாமல் இருக்கும்போதும், டிவி பார்க்கும்போதும்,எதையாச்சும் படிக்கும்போதும், ஏன் தூங்கும்போதும் சரி, அட எல்லா நேரத்திலும் உங்கள் மனம் எதையாவது நினைச்சுட்டே இருக்கும். நமக்கு விவரம் தெரிந்த நாளில் தொடங்கி நாம் உயிரைபிரியும் நேரம் வரை நம் மனம் நம்முடன் எதையாச்சும் பேசிட்டே இருக்கும்..

அது தவறு என்று சொல்லவில்லை. உங்கள் மனதிற்கு ஓய்வு வேண்டும் என்றுதான் சொல்கிறேன். இதற்குதான் தியானம் செய்ய வேண்டும்.

உடல் அழிந்தாலும் உயிர் அழியாதது. அதற்குதான் சொல்கிறேன், அந்த உயிரின் மூலாதாரமான மனதிற்கு ஓய்வு தந்து அதை இன்னும் ஆற்றலுடன் செயல்பட வைப்பது நம் கையில்தான் இருக்கு..

முதலில் தியானம் செய்ய நீங்கள் நினைத்தால், அப்பதி செய்ய தொடங்கும் முன் ஒரு இரண்டு வாரங்களுக்கு காலை 5-6 மணிக்குள்ளாக எழுந்திருக்க பாருங்க. அதிகாலையில் எழுவது நம் மனதிற்கு புது தெளிவையும் புத்துணர்வையும் தரும். நமக்கே இனம்புரியா சந்தோஷம் வரும். காலையில் எழுந்து காபி குடிச்சுட்டு மறுபடியும் தூங்கிடாதீங்க. பல் தேச்சுட்டு, முகம் கை கால் சுத்தம் செஞ்சுட்டு, வெளியே ஒரு அரை மணிநேரம் ஜாலியா நடந்துட்டு வாங்க. முடிஞ்சா ஒரு மணிநேரம் கூட நடந்துட்டு வாங்க.. அசுத்தம் இல்லா காற்று உங்களுக்கு புதிய உணர்வுகளையும் புது சக்தியையும் தரும்.

இரண்டு வாரங்களுக்கு முடிந்தால் ஒரு மாதம் இப்படி அதிகாலையில் எழுந்து நடப்பது உங்கள் மனதிற்கு புதிய மகிழ்ச்சியை தரும்..

அப்புறம் ஒரு மாதம் இப்படி செஞ்ச பிறகு, தியானம் செய்ய ஆரம்பிப்போம்.

காலையில் ஒரு மாதம் தொடர்ந்து எழுந்து பழகிட்டீங்க நீங்க. இப்போ உங்களுக்கு தானாகவே அதிகாலையில் விழிப்பு வந்துடும். இது ரொம்ப முக்கியம். காலையில் எந்த அலாரமும் இல்லாமல் யார் உதவியும் இன்றி நீங்களே சீக்கிரம் எந்திரிச்சுடுவீங்க.

தியானம் செய்ய நல்ல இடம் முக்கியம். கொஞ்சம் சுத்தமான இடம் தேவை. எப்பவும் தியானம் செய்யும்போது, ஒரு நிலையான இடத்தில் இருந்து கொண்டும், எதாச்சும் ஒரு கூரையின் கீழும்தான் செய்யனும். அதாவது,
பேருந்தில் போகும்போதோ, அல்லது எதாச்சும் இடத்திற்கு பயணத்தில் இருக்கும்போதோ செய்யகூடாது. ஒரு நிலையான இடத்தில்தான் செய்ய வேண்டும்.

அப்புறம் வெட்டவெளியில் தியானம் எப்பவும் செய்யவே கூடாது. காரணம் ஏன் என்று தெரிஞ்சுக்க விரும்புனீங்கனா என் மின்னஞ்சலிலோ அல்லது தொலைப்பேசியிலோ கேளுங்கள் சொல்றேன். காரணத்தை இங்கே பதிவு செய்ய முடியாது அதான்.

அப்புறம் முடிஞ்சா கொஞ்சம் ஊதுபத்தியை உங்கள் வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் இருப்பிடத்தை நல்ல வாசனையால் நிரப்பும். அதுவும் உங்கள் மனதிற்கு தெம்பாய் அமையும்.

அப்புறம் கீழே வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்யக் கூடாது. ஏதாச்சும் துணி போட்டுக்கோங்க. அதன்மீது அமர்ந்துதான் தியானம் செய்ய வேண்டும்.

அப்பாடா. ஒரு வழியா தியானம் செய்ய உட்கார்ந்தாச்சா.. சரி..

உங்களுக்கு வசதிப் படும்படி உட்கார்ந்துக்கோங்க.

குறிப்பு : மாற்றுத்திறனாளிகளும் தியானம் செய்யலாம் செய்ய முடியும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்களும் மேலே சொன்னதுபோல தங்களுக்கு ஏற்றார்போல வசதிகளை செய்துக்கொண்டு தியானம் செய்யலாம். தரையில்தான் அமர வேண்டும் என்றிலை..

உங்கள் வசதிக்கு ஏற்ப உட்கார்ந்துக்கோங்க. கூன் போட்டு உட்காராதீங்க. நேராக நிமிர்ந்து உட்காருங்க.

இப்போ உங்கள் கண்களை மூடிக்கோங்க. எடுத்ததும் உங்களுக்கு பிடிச்ச கடவுளையோ அல்லது கடவுளின் பேரையோ சொல்ல வேண்டாம். எதுக்கு அவசரப்படுறீங்க. பொறுமையா இருங்க.

எப்பவும் மன என்பது நல்ல விஷயங்களை மறந்திடும். ஒரு நாளில் ஆயிரம் முறை சிரித்தால் அதையெல்லாம் மறந்துட்டு ஒருமுறை அழுதால் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கும் நம் மனம். நம் மனசு ஒரு குழந்தை மாதிரிங்க. உங்களுடையது எப்படியோ எனக்கு தெரியாதுப்பா. எனக்குத் தெரியும்,என் மனசு ஒரு குழந்தை மாதிரிதாங்க.

கண்களை முடியபின், உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் முதலில் உங்கள் கண்முன் கொண்டு வாருங்கள். கேள்வி இருந்தால்தான் விடை கண்டுபிடிக்க முடியும்.

உங்கள் கஷ்டங்கள் என்னென்ன என்று முதலில் உங்கள் கண்முன் கொண்டு வாருங்கள். அதை நீங்கள் நீங்களாக இருந்து பார்க்காதீர்கள். யாரோ ஒரு மூனாவது மனிதர் என்று நினைத்துப் பாருங்கள். உங்கள் கவலைகளை கண்முன் வைத்துப் பார்த்தால் பெரிசாய் தெரியும். தூரமாய் வந்துப் பாருங்கள். ரொம்ப சிறியதாய் மாறியிருக்கும். உங்கள் கவலைகளை முதலில் உங்கள் கன்முன் கொண்டுவாருங்கள். பிறகு அதை உங்கள் பார்வையில் இருந்து முழுதும் அகற்றிவிடுங்கள்.

இப்போது உங்கள் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் இறக்கி வெச்சாச்சு. அடுத்து உங்கள் முகமூடி...

நான் தினேஷ். என் பெயர், என் பெற்றோர், என் உறவினர், என் நண்பர்கள், என் கனவு, என் ஆசை, என் காதல், என் வெற்றி, என் தோல்வி, என் இலட்சியம் இப்படி என்னுடையது அல்லது நான் என்று சொல்லக்கூடிய என்னவெல்லாம் உங்களுடன் இருக்கிறதோ உங்கள் பெயர் உட்பட, அதை எல்லாம் உங்கள் கண்முன்னர் கொண்டுவாருங்கள்.

இப்போது அவை எல்லாத்தையும் உங்கள் கவலைகளை தூரம் இருந்து பார்ததுபோல இதையும் பாருங்கள். இப்போது அவை உங்களுக்கு சொந்தமில்லை. இப்போது உங்களிடன் வேறு என்ன இருக்கு சொல்லுங்க.

உங்கள் உடம்பு அதோடு உங்கள் உயிர்.. இவைமட்டும்தான் உங்களிடம் இருக்கிறது..

இதுதான் வேண்டும்...

இந்த நிலையை எவராலும் முதன்முதலிலேயே அடைதுவிட முடியாது. குறைந்தது ஒரு மாதமாச்சும்தேவைப்படும் புதிதாய் தியானம் செய்பவர்களுக்கு.

இப்படி நீங்கள் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி உங்களுக்கு பழகிவிட்ட பிறகு, இனி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கலாம்.

இப்படித்தான் நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். எடுத்ததுமே தியானம் செய்கிறேன் என்று நான் தரையில் அமர்ந்துவிடவில்லை. ஒரு மாதம் காலையில் எழுந்து வெளியில் நடைபழகிவிட்டு, அடுத்த ஒரு மாதம் நான் என்னும் மாயையை என்னிடம் இருந்து கழற்றிவைத்துவிட்டு அதன் பிறகே என் தியானத்தை முதன்முதலில் தொடங்கினேன்..

முதலில் நீங்கள் இந்த இரண்டு மாத காலத்தில் உங்கள் முகமூடியினை கழற்றிவைத்துவிட்டு வாருங்கள். அதற்குப்பிறகு தியானம் எப்படி செய்யலாம் என்று பதிவு செய்கிறேன். ஒருவேலை நான் பதிவு செய்ய மறந்திருந்தால் நீங்கள் எனக்கு நினைவு கூறுங்கள்...



இது சும்மா நான் தியானம் செய்வதுபோல என் தோழி ஒருத்தி எடுத்த புகைப்படம் இது...



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: