இறப்புக்கு உத்தரவாதம்

Saturday, September 21, 2013


     இந்த சித்திரம் M.F.Hussain அவர்களால், போபால் விஷவாயு விபத்தின் நினைவாக வரையப்பட்டது. அது எத்தனையோ கோடிக்கு ஏலம் போகவிருப்பதாக நாளேடுகளில் படித்தேன். அந்த விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்க எவரும் முன்வராத நிலையில் இந்த ஓவியம் கோடிக்கணக்கில் ஏலத்திற்கு போய் எவரோ ஒருவர் வீட்டிலோ அல்லது அருங்காட்சியகத்திலோ அலங்கார பொருளாய் பொக்கிஷமாய் இருக்கப்போகிறது. ஆனால் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விடியலும் வந்தபாடில்லை. 

  இந்த ஓவியமும் கோடிக்கணக்கான ஏலத்தொகையும் ஒருபக்கம் இருக்கட்டும் விடுங்கள். இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி ஆலோசிக்கவே இங்கே வந்தேன்.

        அணுமின் நிலையங்கள் மக்களின் உயிருக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை அதனால் பாதிப்படையும் மக்கள் மட்டுமே உணர்ந்திருக்கின்றனரே தவிர மற்றவர்களுக்கு அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வோ அக்கறையோ இல்லை. சமீபத்தில்தான் ஜப்பானில் சுனாமியின் போது அணு உலை ஒன்று விபத்துக்குள்ளாகி அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஜப்பான் நாட்டிலும் அணு உலை விபத்தை கட்டுப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ அல்லது விபத்தின் பின்விளைவுகளை குறைக்கவோ வழிமுறைகள் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. 

      இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் நமது நாட்டில் அமைக்கப்படும் அணு உலைகளுக்கான உபகரணங்களில் இருந்து உதிரி பாகங்கள் வரை அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாக வேண்டி இருக்கிறது. நமது நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டப்படி அணு உலையில், வேலை செய்வோரின் கவனக்குறைவு தவிர இந்த உபகரணங்கள் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களில் செயலிழப்பால் விபத்து ஏதும் நேர்ந்தால், விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நஷ்டஈட்டை இந்த பாகங்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்திற்கு வெளிநாட்டு பணக்கார வர்த்தக முதலைகள் பெரிதும் எதிர்க்கின்றனர்.

      சரி விடுங்கள். நஷ்டஈடு என்றால் பெரியதொகையாக இருக்கும் அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரும் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது என்று சொல்வதா இல்லை வெளிநாட்டு நிறுவனங்கள், பாகங்களை விற்பனை செய்வதுடன் எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

  எனக்கு இருப்பது ஒரே கேள்விதான். அணு உலை ஒன்றை அமைக்கப்போகிறோம். எதிர்காலத்தில் விபத்து ஏற்படும், அந்த விபத்துக்கு யார் நஷ்டஈடு கொடுப்பது என்று ஆலோசனை செய்கிறீர்களே. விபத்து ஒன்று நடந்தால் என்று நீங்கள் சிந்திக்கும்போது, விபத்து ஒன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படி அணு உலையினால் விபத்து ஏற்பட்டால் நாம் இழக்கப்போவது விலைமதிக்க முடியாத மனித உயிர்கள். அதுமட்டுமின்றி விபத்தால் பாதிக்கப்படும் மக்களின் 5 தலைமுறைவரையிலும் இந்த பாதிப்பை நேரடியாக உணரமுடியும். அப்படியிருக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் இந்த அணு உலை எதற்கு ?

      உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையத்தை ராஜஸ்தானில் தொடங்க அடிக்கல் நாட்டும் இந்த வேளையில் , கூடங்குளத்தில் மக்களின் கல்லறைகளுக்கும் அடிக்கல் நாட்டுவது, மக்களின் இறப்புக்கு உத்தரவாதம் தருவதுபோல்தான் எனக்கு தோன்றுகிறது.

* தினேஷ்மாயா *

0 Comments: