நேற்றைய கனவு

Saturday, July 05, 2014



     பெரும்பாலும் நமக்கு வரும் கனவுகள் நாம் கண்விழிக்கும் போது நமக்கு நினைவில் இருக்காது. ஆனாலும் எனக்கு என்ன வியாதியோ தெரியவில்லை, பல வருடங்களுக்கு முன்னர்  எனக்கு வந்த கனவுகள் சில என் நினைவில் இன்னமும் அப்படியே இருக்கிறது. அந்த பிரச்சனையை சமாளிக்க எனக்கு வந்த கனவுகளையும் இங்கே பதிந்துவிட்டால் அது என் நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று என் மனசு சொல்கிறது. அதான் நான் கண்விழித்ததும் எனக்கு அன்றைய கனவில் வந்து என் நினைவில் இருப்பவைகளை இங்கே பதியலாம் என்று நினைக்கிறேன்.

    கனவுகளைப்பற்றி நான் மேற்கொண்டிருக்கும் என் ஆராய்ச்சிக்கும் இந்த பதிவுகள் பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும் என்கிற காரணத்தாலும் இங்கே பதிவு செய்கிறேன். அத்தோடு அந்த கனவு எனக்கு வந்ததற்காக காரணங்கள் ஏதுமிருந்தால் அதையும் இங்கே பதிகிறேன்.

தேதி: 04-07-2014.

நேற்றைய கனவில் நானும் என் நண்பன் கௌதமும் ஒரு ரயில் நிலையத்திற்கு செல்கிறோம். அங்கு நான் செல்ல வேண்டிய ரயில் வந்து நின்றுக்கொண்டிருக்கிறது. அது எடுக்க இன்னும் அரைமணி நேரம் ஆகும். நானும் அவனும் என் வீட்டிற்கு சென்று என் பயணத்திற்கு தேவையான என் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரலாம் என்று விரைவாக புறப்படுகிறோம். என் கணிப்புப்படி நான் வீட்டிற்கு சென்று திரும்பிவர அதிகபட்சம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகின்றது. நானும் அவனும் வேறொரு நண்பரான கோகுல் அவர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறோம். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சென்றதுமாதிரி எதுவும் நினைவில் இல்லை. ஆனால் திரும்பி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தபோது 6-வது பிளாட்பாரத்தில் இருக்கிறேன் நான். அப்போது அந்த பிளாட்பாரத்தில் இருக்கும் ஒரு ரயில் கிளம்புகிறது. அங்கே கொடியசைப்பவரிடம் கேட்கிறேன், இது எங்கே செல்கிறது என்று. அவர் எதோ சொன்னார் என் காதில் விழவில்லை. அப்புறம் நான் JAISALMER EXPRESS -ல் JAIPUR செல்ல வேண்டும் என்கிறேன். அதோ அங்கே முதலாவது பிளாட்பாரத்தில் இருக்கிறது அங்கே செல்லுங்கள் என்கிறார். அவர் சொல்லி முடிக்கும்போது வண்டி கிளம்புகிறது. வண்டியை நான் தவறவிட்டுவிட்டேன் என்பதை என் உள்மனது உறுதி செய்கிறது. அத்தோடு எனக்கு இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. என் பெட்டி மற்றும் உடமைகள் எல்லாம் அந்த வண்டியில் இருக்கிறது. ஆனால் நான் என் உடமைகளை எடுத்துவரவே என் வீட்டிற்கு சென்றேன் என்பதும் எனக்கு புரிகிறது, இருந்தும் என் உடமைகளை அந்த வண்டியில் வைத்ததுப்போல என் உள்ளுணர்வு சொல்கிறது. அப்போது என் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். நேரம் மாலை 4:35. எப்படி மாலை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா. நான் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கனவில் வெளிச்சம் இருந்தது. இரண்டு ரயில் கிளம்புவதை என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. அவரே என்னிடம் சொன்னார், வண்டி 5:00 மணிக்கு வாணியம்பாடியில் நிற்கும் முடிந்தால் அதற்குள் அங்கே சென்று வண்டியை பிடியுங்கள் என்றார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது நான் இருப்பது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் என்று. ஆனால் நான் அந்த வண்டியை பிடிக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இத்தோடு இந்த கனவு முடிந்தது.


2006-ஆம் வருடம் நானும் என் அப்பாவும் அதிகாலை 4.30 மணிக்கு எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கிளம்புகிறோம். அவரும் நானும் திருப்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்புகிறோம். ரயில் கிளம்ப சற்று நேரம் இருக்கும்போதுதான் அவர் சொல்கிறார், குடும்ப அட்டையை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டோம் என்று. அந்த குடும்ப அட்டை அப்போது சென்னையில் நடைப்பெறவிருக்கும் ஒரு கலந்தாய்வுக்காக எனக்கு கண்டிப்பாக தேவை. உடனே நான் மட்டும் ரயிலில் இருந்து இறங்கி ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டிற்கு சென்றேன். அதற்குள் அப்பா அம்மாவிற்கு போன் செய்து அந்த அட்டையை தயாராக வைத்திருக்க சொன்னார். நான் வீட்டிற்குள் செல்லவும் இல்லை. ஆட்டோவில் இருந்தபடியே அந்த அட்டையை வாங்கிக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறேன். ரயில் நிலையத்தை அடையும்போது ரயில் கிளம்பிவிட்டது. அப்பா ரயிலில் இருந்து வெளியே எட்டிப்பார்க்கிறார். உடனே நான் அதே ஆட்டோவைப்பிடித்து அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் அடுத்த ரயில் நிலையமான ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்து 5 நிமிடம் கழித்தே 5-ஆவது பிளாட்பாரத்தில் வந்தது. அப்புறம் நானும் பயணத்தில் இணைந்துக்கொண்டேன்.

இதை நான் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், என் வாழ்வில் இந்த ஒருமுறை மட்டுமே ரயிலை நான் தவறவிட்டிருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு தொடர்பாக பல விஷயங்கள் நேற்றைய கனவில் வந்திருக்கு. ஆனாலும் நான் ஏன் JAIPUR செல்ல வேண்டும் என்று சொன்னேன் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை...

சரி நண்பர்களே. அடுத்தப் பதிவில் சந்திப்போம்.

* தினேஷ்மாயா *

0 Comments: