பழமைவாதிகள்

Thursday, July 31, 2014



 நேற்று ஒரு செய்தி படித்தேன். சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் சுவரொட்டிகளில் அந்த திரைப்படத்தின் நடிகர் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதாகவும், அதைப் பார்த்து நம் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஒரு அமைப்பு தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளனராம்.

சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு திரைப்படத்தை பார்த்து ஒரு தவறான பழக்கத்தை கற்றுக்கொள்ளும் காலமெல்லாம் மலையேறி ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நடிகர் திரைப்படத்தில் புகைப்பிடிக்காவிட்டால் மட்டும் நம் இளைஞர்கள் புகையை நிறுத்திவிடுவார்களா என்ன ?

நடிகர் ரஜினி தன்னுடைய சிவாஜி படத்தில் இருந்து புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்த்து வருகிறார். அப்படியானால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டனரா என்ன ?

புகை என்பது இந்த சமூகத்திற்கே பகை. அதை தடுக்க ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசுதான் முன்வர வேண்டும். அவர்களே புகையிலை பொருட்களை தயாரிக்க சம்மதித்துவிட்டு பிறகு அதில் கட்டாயம் புகையிலை உயிரைக் கொள்ளும் என்று கட்டாய வாசகம் எழுதிவைத்தால் மட்டும் வாங்குபவர்கள் வாங்காமல் இருப்பார்களா என்ன ?

இதுபோன்ற பழமைவாதிகளுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நிச்சயம் இவர்கள் அனைவரும் கற்றது தமிழ் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அந்த படத்தைப் பார்த்துவிட்டு யாராவது தன் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்தில் மட்டுமே சேர்த்தார்களா, இல்லை இவர்கள்தான் தமிழில் பட்டம் படித்தேதீருவேன் என்று படிக்க சென்றார்களா ?

முதலில் திரைப்படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களையே நம்மால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கெட்ட விஷயம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்வது சரியல்ல. திரைப்படத்தை பார்த்து ஒரு பழக்கத்தை ஒருவன் கற்றுக்கொள்கிறான் என்று பேசும் பழமைவாதிகள் 1990-களிலேயே இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பது 21-ஆம் நூற்றாண்டு. இதில் இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் கெட்டுப்போக வெகு சுலபமான பல வழிகள் இருக்கிறது. உண்மையாகவே சமூகத்தின்மீது அக்கறை இருப்பவர்கள் இளைஞர்களை தவறான பாதையில் இட்டு செல்லும் வழிகளை எதிர்த்து போராடவும்.

அதைவிட முக்கியமாக, திரைப்படம் எடுப்பவர்களுக்கும் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டுமே படம் எடுக்காதீர்கள். உங்கள் கதாப்பாத்திரம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புதான். அதனால், இயக்குனர்களும் காட்சிகளை நெறிப்படுத்தி இதுப்போன்ற விமர்சனங்களை தவிப்பது நல்லது.


·         தினேஷ்மாயா * 

0 Comments: