கனவு @ 15-07-14

Wednesday, July 16, 2014

    


       இன்று ( 15-07-2014) இரவு கனவு எங்கிருந்து தொடங்குகிறது என்றெல்லாம் தெரியவில்லை. நான் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கிறேன். எங்கு செல்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என் தோளில் ஒரு பையை மாட்டியிருக்கிறேன். அது ரொம்ப பெரிதாக இருக்கிறது. அதை என் தோளில் மாட்டியபடி ஓட்ட முடியவில்லை. அதனால் அதை வண்டியின் முன் டேங்க் மீது வைத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஓட்டுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. நான் ஓட்டுவதற்கு இந்த பை ரொம்பவே தடங்கலாக இருக்கிறது. வண்டியை ஓட்டுவதும் இந்த பையை சரி செய்வதும் இப்படி மாறி மாறி செல்வதால், நான் எங்கே செல்ல வேண்டும் என்பதையே மறந்து நான் இதுவரை சென்ற வழியைவிட்டு வந்த வழியிலேயே திரும்பி செல்கிறேன் என்பதை உணர்ந்தேன். என்ன இது, நான் எதிர் திசையில்தானே செல்லவேண்டும் என்று சுதாரித்துக்கொண்டு வண்டியை திருப்புகிறேன். வண்டியை திருப்பும்போது அந்த பை கீழே விழப்பார்க்கிறது. உடனே பையை கொஞ்சம் சமாளித்து டேங்க் மேலே வைத்துவிட்டு, வண்டியை ஓரம் கட்டுகிறேன். அங்கே 5 அல்லது 6 காவல்துறையினர் இருக்கிறார்கள். நான் பையை சரிசெய்துக்கொண்டிருக்கிறேன். என்னருகில் இருக்கும் ஒரு தள்ளுவண்டிகாரரை அழைக்கிறார் ஒரு காவல்துறை உயரதிகாரி. அவரிடம் ஏதோ விசாரித்துக்கொண்டிருக்கிறார். நான் என்ன ஆச்சு என்று கேட்கிறேன். அருகில் இருக்கும் தெருவில் ஒரு ஆட்டோக்காரர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று என்னிடம் தெரிவிக்கிறார். அடுத்து என்னவோ சொன்னார், ஆனால் அது நினைவில் இல்லை. நானும் அவர் சொன்னதை கேட்டுவிட்டு பையை சரி செய்துவிட்டு வண்டியை கிளப்புகிறேன். இப்போது சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் பாலத்தின் மேலே செல்கிறேன். இதுதான் எனக்கு கடைசியாக நினைவில் இருக்கிறது. அடுத்து எதுவும் கனவு வரவில்லை. ஆனால் நான் கண் விழிக்கும் முன் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. அப்போது இரு சிறிய கனவு. ஒரு நல்ல கானா பாட்டு, அதுவும் கிராமத்து வாசனை நிறைந்த பாட்டு அதற்கு ஒரு 10 நபர்கள் ஆட்டம் ஆடுகின்றனர். அநேகமாக தப்பாட்டம் அல்லது ஒயிலாட்டமாக இருக்கலாம். அவர்கள் பாடியபடி ஆடுகின்றனர். அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கிராமிய மணம்வீசிய அந்த பாடலை என்ன பாடல் என்று உற்று கவனிக்க எத்தனிக்கிறேன் உடனே என் நண்பர் என்னை தொலைப்பேசியில் அழைத்துவிட்டார். தூக்கமும் கலைந்து கனவும் கலைந்து கண் விழித்தேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: