சில்லறை இல்லை

Saturday, October 08, 2011





சில்லறை இல்லை
     நம் நாட்டில் மக்கள்தொகை அதிகம் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு நம் நாட்டில் அதிகம் பிச்சைக்காரர்கள் என்பதும் கொஞ்சம் கசப்பான உண்மையே. இவர்களை அடியோடு இல்லாமல் செய்வது மிகவும் கடினம். உங்களில் அனைவரும் கண்டிப்பாக ஒரு இரவலர்களை சந்தித்திருப்பீர்கள். அவர் உங்களிடம் வந்து “ஐயா, அம்மா…” என்று கேட்டதும் சிலர் தங்களிடம் இருக்கும் சில்லறையை கொடுப்பார்கள். அது அவர்களின் உதவும் தன்மையை காட்டுகிறது.
     இன்னும் சிலர் இருக்கிறார்கள். அப்படி யாராவது அவர்களிடம் இரவல் கேட்டால் தங்கள் சட்டைப்பையை ஒரு 20 அல்லது 30 நொடிகள் துலாவிவிட்டு சில்லறை இல்லை என்பார்கள். ஒரு சிலரோ அவர்கள் இரவல் கேட்டதுமே சில்லறை இல்லை என்பார்கள்.
     அவர்களிடம் சில்லறை இல்லை என்பதைவிட இரவல் தர மனம் இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் உங்களிடம் சில்லறை வேண்டும் என்று கேட்கவில்லையே. அதற்காக இரவல் வேண்டி வருவோர் அனைவருக்கும் 10 அல்லது 20 ரூபாயை கொடுக்க சொல்லவில்லை நான். சில்லறை இல்லை என்றால் என்ன. உங்களிடம் இருப்பதில் கொஞ்சம் பணத்தை கொடுக்கலாமே.
ஒரு காலத்தில் நான் யாருக்குமே இரவல் தரமாட்டேன். வெளிநாட்டில் கை கால் இல்லாதவர்கள்கூட சொந்தமாக வேலை செய்து பிழைக்கிறார்கள். ஆனால் இங்கே நம் நாட்டில்தான் இரவல் எடுக்கிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. இரவல் கேட்கும் அனைவருக்கும் நான் இரவல் தருவதில்லை. உழைக்க தகுதி இருந்தும் உழைக்காமல் இரவல் கேட்பவர்களை நான் கொஞ்சமும்கூட திரும்பிப்பார்க்க மாட்டேன் அவர்களுக்கு செவிசாய்க்கவும் மாட்டேன். ஒருசிலர் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இரவல் கேட்பார்கள். அதுபோன்றவர்களுக்கு நான் என்றுமே பணம் கொடுத்து உதவியதில்லை. அந்த பிள்ளைக்கும் தாய்க்கும் உணவு வாங்கித் தருவேன். ஒருசிலர் சாப்பாடு வேணாம்யா காசே போதும் என்பார்கள். அவர்களுக்கு நான் இரவல் தந்ததில்லை. இரவல் தருவதை நான் பழக்கமாக கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் இரவல் தருவது என் பழக்கம் என்றாகிவிட்டால் இரவல் கேட்பதும் அவர்களின் பழக்கமாகிவிடும். இரவல் கேட்பதையோ இரவல் தருவதையோ நான் என்றும் ஆதரித்ததில்லை. உழைக்க முடியாத ஒருசிலருக்கு மட்டுமே இரவல் தருவேன். நான் தரும் ஒருவேலை இரவல் ஒன்றும் அவர்களின் அப்போதைய தேவைக்குத்தான் போதுமானதாக இருக்கும், இருந்தாலும் நான் இப்போது இருக்கும் நிலையில் என்னால் இயன்றது இதுதான். இன்னும் கொஞ்சம் வாழ்வில் உயர்ந்தப்பின்னர் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நிறுவி இதுபோன்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பேன். அதுவரை என் மனதிற்கு சரி என்று படுவோர்க்கு இரவல் தருவேன்.
     சில்லறை இல்லை என்று சொல்லாமல், இருக்கும் பணத்திற்கு சில்லறை மாற்றி அதை அவருக்கு இரவலாக தரலாமே. அவர்கள் சொல்லும் நன்றி உங்களுக்கு வந்து சேருகிறதோ இல்லையோ உங்கள் சந்ததிக்கு அது சென்றடையும். தர்மம் தலை காக்கும் என்பது ஆயிரம் சதவிதம் உண்மையே. கொடுத்து வாழ்பவன் என்றும் கெட்டுப்போவதில்லை..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: