கடவுள் யார்?

Saturday, February 06, 2010




















கடவுள் யார்?


உலகில் உள்ள அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த கேள்வியை கேட்டிருப்பார்கள்.ஆனால் அதற்கான விடை கிடைக்காமலேயே இன்னமும் இருக்கின்றனர்.
நான் இப்பொது இதற்கான விடையை சொல்லப் போவதில்லை. ஏதோ என் மனதிற்கு தோன்றிய
ஒரு சில கருத்துக்களை சொல்லலாமென நினைக்கிறேன்.

நான் என்னை ஆத்திகன் அல்லது நாத்திகன் என்ற வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை. கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறதா என்று யார் கேட்டாலும் என் பதில்,
ஆம் என்பதே..

ஆம்! கடவுள் என்பது என்னை பொறுத்தவரை இயற்கையும் அதன் சக்தியுமே.
இயற்கைக்கு உருவம் தந்தால் அதுதான் கடவுள். நம்மை ஒரு சக்திதான் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு விடாப்பிடியான நம்பிக்கை உண்டு.
அந்த சக்திதான் இயற்கையின் சக்தி. அதுதான் கடவுள். அந்த சக்தி ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளது. அதை உணர்ந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் மற்றவர்கள் இறந்து போகிறார்கள்.

நம்மை படைத்த சக்திதான் அந்த இறைவனையும் படைத்தது. இறைவன் இயற்கையை படைக்கவில்லை. இயற்கைதான் இறைவனை படைத்தது. அந்த சக்தி உன்னுள்ளும் இருக்கு அவனிடமும் இருக்கு. நம் மனித சக்திதான் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வருகிறது.

நாமும் ஒரு கடவுள்தான். அதை உணர யாரும் முன்வருவதில்லை. படைத்து காத்து அழிப்பவனே கடவுள். இம்மூன்று செயல்களையும் மனிதனும் செய்கிறானே. ஆனால் அவன் இயற்கையின் உதவியுடனேயே இதை செய்கிறான். இறைவனும் அப்படித்தானே.

மனிதாபிமானம் உள்ளவரைத்தான் மனிதன் இவ்வுலகில் வாழமுடியும். என்று
மனிதாபிமானம் அழிகிறதோ அன்று ஒவ்வொரு மனிதனும் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு
தங்களை தாங்களே அழித்துக் கொள்வார்கள்.

அந்த மனிதாபிமானத்தை மனிதனிடத்தில் இருக்கும்படி செய்ய நம் முன்னோர்கள் சொல்லித்தந்ததுதான் இந்த கடவுள் என்னும் கருத்து.

கடவுள் என்பவன் உன்னையும் உன் செயல்களையும் பார்த்து கொண்டிருக்கிறான் அவன் நீ செய்யும் தீய செயல்களுக்கு தண்டனை தருவான். இப்படி நம் முன்னோர்கள் சொன்னதாலேயே மனிதாபிமானம் இன்னமும் இவ்வுலகில் நிலைத்து இருக்கிறது. அதும் இறைவனுக்கு பயந்து....

கடவுளை வெளியில் தேட வேண்டாம். அவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான்.

பிறர்க்கு துன்பம் என்றபோது எதையும் எதிர்பாராமல் தானாகவே சென்று உதவி செய்பவன்
கடவுள். உலகை நல்ல பாதையில் அழைத்து செல்ல முற்படும் நல்ல உள்ளம் கடவுள். பிறர் துயரை தனதாக நினைத்து உதவும் நல்லவன் கடவுள். இயற்கையினை பாதுகாத்து தன் அடுத்த சந்ததியினருக்கு அளிக்கும் உயர்ந்தவன் கடவுள்.தன்னையும் தன் சுற்றத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவன் கடவுள். பாரபட்சமின்றி உதவுபவன் கடவுள். பிறர் கண்ணீரை துடைக்க முன் வருபவன் கடவுள்.

இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். எத்தனை சொன்னாலும் அது அனைத்தும் ஒரு மைய கருத்தையே வலியுறுத்துகிறது.

அது...


நாம்தான் கடவுள்........


இந்த உலகமே உனது சொத்து. அதை நீதான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். உன் மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும். உன்னால் முடியாது என்று சொல்லாதே. ஏனென்றால் நீதான் கடவுள். உன்னால் முடியாவிட்டால் வேறு எவரால் முடியும்?

வாழு.... வாழவை....
முன்னேறு.... முன்னேற்றிவிடு....

வாழ்க வளமுடன்...



என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: