இணையதள கொலைக்காரன்

Sunday, February 24, 2013



      இணையதளம் இன்று உலகத்தை உங்கள் உள்ளங்கையில் எடுத்துவந்து கொடுக்கிறது. இதற்கு ஈடு இணை ஏதுமில்லாவண்ணம் அதீத வளர்ச்சி அடைந்து நிற்கிறது இந்த இணையதளம் இன்று. பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகள் அனைத்திற்கும் இணையதளத்தையே நம்பி இருக்கும் நிலையும் வந்தாகிவிட்டது.

   இணையதளம் பெரும்பாலும் நம் நேரத்தை விரயமாக்குவதோடு, நம் வேலைகள் பலவற்றையும் பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். வழக்கம்போல் நானும் இன்று இணையதளத்தில் ஆழ்ந்திருந்தேன். வழக்கம்போல் மின்சாரமும் தடைப்பட்டுவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பலநாட்களாய் தேங்கி கிடந்த துணிகளை துவைத்தேன். என் அறையை சுத்தம் செய்தேன். துணிகளை அலமாரியில் மடித்து வைத்தேன், புத்தகங்களையும் அடுக்கி வைத்தேன், அறையை கொஞ்சம் அலங்காரம் செய்தேன். இன்னும் சில உபயோகமான வேலைகளையும் செய்து முடித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன். இந்த இணையதளம் என் வேலைகளை செய்யவிடாமல் என் நேரத்தை கொலை செய்துக்கொண்டிருக்கிறது என்று.

   வகுப்பறையில் நாம் சில பாடங்களை கற்போம். அதுபோல இணையதளமும் ஒரு வகுப்பறை தான். நமக்கு தேவையாவ விஷயங்களை இங்கே கற்றறியலாம். ஆனால், வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் அனைத்தும் வகுப்பறையில் மட்டுமே கிடைத்துவிடாது. வெளியே வந்து உலகத்தை பரந்த கண்ணோட்டத்தோடு பாருங்கள். வாழ்க்கை அங்கே விரிந்து கிடக்கிறது. அதனை அனுபவித்து வாழுங்கள். இணையதளத்தை ஊறுகாய் போல எடுத்துக்கொண்டு, உலக அனுபவத்தை உணவாக்கிக்கொண்டு வாழப்பழகிவிட்டால், எல்லாம் சுகம் தான். 

   இணையதளத்திற்கு அடிமையாகி பலர் அவதிப்படுகின்றனர். அது ஒரு மனநோய் என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கின்றனர். அதிகநேரம் இணையதளத்தில் இருப்பதை தவிர்க்கவும். தேவைக்கேற்ப எதையும் அளவோடு பயன்படுத்தினால் அது நமக்கும் சரி, மற்றவர்க்கும் சரி எப்போதும் நன்மையை மட்டுமே தரும். சிந்தித்து செயல்படுவோம்.

- தினேஷ்மாயா -

0 Comments: