மனிதன் பேசுகிறேன்

Sunday, February 24, 2013




இயந்திர வாழ்க்கை வாழும் அனைத்து இயந்திரங்களுக்கும் வணக்கம்.

நான் மனிதன் பேசுகிறேன்.

எதற்கு ஓடுகிறோம், எங்கே ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்க்கையை வாழாமல் அதை ஒரு ஓட்டப்பந்தயமாக கருதி ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் ஆகிவிட்டனர் நீவிர்.

பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தால் விலைகொடுத்து வாங்க முடியாத விஷயங்கள் உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது. 

உங்கள் அனைவர்க்கும் ஒரு உண்மை சொல்லட்டுமா. பணத்தை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது. உழைத்துதான் வாங்க முடியும். அப்படிப்பட்ட பணத்தையே பணத்தால் வாங்கிட முடியாத போது, எதை நீங்கள் பணத்தை வைத்து வாங்கிவிடப்போகிறீர்கள். 

உயிர்வாழப்போவது எத்தனை வருடம், எத்தனை மாதம், எத்தனை நாள், எத்தனை மணி நேரம், எத்தனை நொடி என்று எவர்க்கும் தெரியாது. எல்லோர்க்கும் ஒருநாள் இந்த ஓட்டம் நிச்சயம் நிற்கத்தான் போகிறது. அதற்கு முன்னர், ஓட்டத்தை நிறுத்திவிட்டு கொஞ்சம் நில்லுங்கள். கண்களை மூடி ஆழமாய் சுவாசியுங்கள். புல்தரையில் கைகள் கால்களை பரப்பி வானம் நோக்கி படுங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.

இயற்கையின் ஆச்சர்யமூட்டும் வண்ணங்களையும், அதிசயமூட்டும் சப்தங்களையும் ரசியுங்கள்.

காலார நடைப்பழகுங்கள். பக்கத்து வீட்டுக்கு சென்றால் கூட உந்துவண்டியை எடுக்காமல் குறைந்தது 2 கி.மீ. தூரம் வரையிலான இடத்திற்கு நடந்து செல்லுங்கள். உலகத்தை கொஞ்சம் பாருங்கள். உங்கள் நடைப்பயணத்தில் பல அனுபவங்கள் உங்கள் கூட வரும். வெயில் என்று பார்க்கிறீர்களா. வெயில் நம் உடம்பிற்கு மிகவும் அவசியம். வெயிலில் நடந்தால் மட்டுமே வியர்வை வருமே தவிர, குளிர்சாதன அறையில் இருந்தாலோ, காரில் பயணம் செய்தாலோ, வியர்வை வராது. நம் உடம்பில் தேவையில்லாத நீரை வியர்வைதான் வெளியேற்றும் என்பது ஆறாம் வகுப்பில் படித்திருக்கிறோம்.

உதவி செய்யுங்கள். அனைவர்க்கும் உதவி செய்யுங்கள். எதிரியோ நண்பனோ, தெரிந்தவனோ தெரியாதவனோ அனைவரையும் ஒன்றாக பாருங்கள். நாம் வாழும் இந்த உலகத்திற்கு நாம் கட்டாயம் செய்யவேண்டியது என்னவென்றால், அதில் வாழும் சக தோழர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே.

இசை கேளுங்கள். மனதில் இருக்கும் பாரம் அனைத்தையும் இறக்கிவைத்து இசையில் ஒன்றற கலந்திடுங்கள்.

பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். சாப்பிடவேண்டுமே என்ற கட்டாயத்திற்காக எதையும் சாப்பிடாதீர்கள். வயிறு ஒன்றும் குப்பைத்தொட்டி இல்லை உங்களுக்கு பிடிக்காத பொருளை அங்கே கொட்ட.

மனதிற்கு பிடித்தால் எதைவேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் அதே சமயம், திண்ண உணவை செறிக்கவைக்க கொஞ்சமாவது உழையுங்கள்.

சின்ன சின்ன விஷயங்களை இரசியுங்கள். எதற்கும் தயங்காதீர்கள். எவர்க்கும் அஞ்சாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. 

இறைவனை நம்பாவிட்டாலும் இயற்கையை நம்புங்கள். பஞ்ச பூதங்களை இயன்றவரை மாசுப்படாமல் காத்திருங்கள்.

சொர்க்கமோ நரகமோ அதை இங்கேயே அனுபவியுங்கள். அது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த உலகம் மட்டுமே உண்மை. இங்கேயே எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.

காதல் செய்யுங்கள். பிடித்த நபர் மட்டுமல்ல. உங்களுக்கு எது பிடித்தாலும் அதனை நேசியுங்கள். காதலை பரப்புங்கள். அமைதி தானாக பரவும். 

கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் கோபம் கொண்டால், அது உங்களை கொல்லும். 

புன்னைகைக்க பழகிக்கொள்ளுங்கள். பொன் நகையைவிட புன்னகையே சிறந்த ஆபரணம்.

மழையில் நனையுங்கள். மழையை ரசியுங்கள். 

திருமணம் செய்துக்கொள்ளுங்கள்
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றிருங்கள். அளவோடு உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். அளவான குழந்தை செல்வத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் உடம்பில் தெம்பு இருக்கும்வரை உங்கள் தேவைகளையும் உங்கள் வேலைகளையும் நீங்களே செய்துவாருங்கள்.

ஓடி விளையாடுங்கள். உடலுக்கு வேலைகொடுங்கள். 

நன்றாக தூங்குங்கள். தூக்கம் மட்டுமே உங்களுக்கு மனதிற்கு சக்தியையும்  உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

சோம்பி திரியாதீர்கள். 

தேவைக்கேற்ப செலவு செய்யுங்கள். சேமித்து வையுங்கள்.

அடுத்த தலைமுறையினருக்கு இயற்கைவளத்தை கொஞ்சமாவது விட்டுவையுங்கள். 

எல்லா உறவுகளிலும் உண்மையாய் இருங்கள். 

நல்ல விஷங்களை பிறர்க்கு சொல்லிக்கொடுங்கள். பலர்க்கு முன்னோடியாய் இருங்கள்.

வாழ்க்கையை ஒரு போட்டியாக பாவித்து, எப்போதும் வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிராதீர்கள். 

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள். மனிதனாய் இருக்க முயலுங்கள்.

- தினேஷ்மாயா -

0 Comments: