திரையரங்கு அனுபவம்

Wednesday, December 05, 2012



    நான் வேலைக்கு சேர்ந்தபிறகுதான் அதிகம் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் அதுவும் தியேட்டருக்கு சென்று திரைப்படங்கள் பார்க்க  ஆர்வத்தோடு செல்கிறேன். மனசை கவர்ந்த திரைப்படங்களைப்பற்றி நான் சொல்லப்போவதில்லை. அதைப்பற்றி எவ்வளவோ பேர்  சொல்லி இருப்பார்கள். நான் என் மனதில் பதிந்த திரையரங்க அனுபவங்களை கொஞ்சம் பகிந்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் கிட்டதட்ட 50 திரைப்படங்களையாவது நான் திரையரங்குகளில் பார்த்திருப்பேன். எப்போதும் திரைப்படம் துவங்கும் முன்னரே திரையரங்கினுள் சென்றுவிட வேண்டும் என்று விரும்புவேன் நான். ஆனால் சில சமயங்களில் கூட்ட நெரிசல் அல்லது தாமதம் காரணமாக படம் துவங்கிய பின்னர் சென்றிருக்கிறேன். அதுமாதிரி செல்ல எனக்கு பிடிக்காது. தசாவதாரம் திரைப்படம் ஆரம்பித்து 10 நிமிடம் கழித்துதான் சென்றேன். ஏழாம் அறிவு திரைப்படம் பார்க்கும்போதும் இதே நிலைதான். சில படங்களுக்கு தியேட்டர் வாசலை திறந்ததும் உள்ளே செல்லும் முதல் ஆளாய் இருந்திருக்கிறேன். ஏண்டா இவ்வளவு சீக்கிரம் வந்தோமோ என்றெல்லாம் நினைக்கும்படி இருக்கும். தியேட்டரில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் வரும் விளம்பரங்கள் ரொம்பவே அறுவையாக இருக்கும். எங்கே போனாலும் எப்போ பார்த்தாலும் ஒரே விளம்பரங்கள்தான் வரும். சமீபகாலமாக NSSO மற்றும் Gift Certificates, Vicco Products விளம்பரங்கள் பெரும்பாலும் அனைத்து தியேட்டர்களிலும் காணமுடிகிறது. இடைவேளையில் வெளியே வந்தால் பாதி கூட்டம் புகைப்பிடித்தலில் மும்முரமாய் இருப்பார்கள். பெரிய பெரிய கடைகளில் கூட அதிக விலை வைத்து விற்கமாட்டார்கள். ஆனால் நம் தமிழக திரையரங்குகளில் மட்டுமே ஐந்து ரூபாய் பொருளை இருபது ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். அதையும் வாங்க முண்டியடித்து நிற்பார்கள். குளிர்சாதன தியேட்டரில் சிலர் தூங்குவதற்காகவே வருவார்கள். ரொம்ப நாளான படம் அல்லது ஓடாத திரைப்படம் என்றால் காதல் ஜோடிகளா இல்லை புதுமண ஜோடிகளா என்றெல்லாம் தெரியாது அவர்கள்தான் அதிகம் தென்படுவார்கள். எப்போதும் வரும் வசனம் இது, எச்சில் துப்பாதீர், முன் இருக்கையில் கால் வைக்காதீர், திரையரங்கை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள். இன்னொரு வசனமும் உண்டு, புகைப்பிடிப்பதும் மது அருந்துவது ம்உடல் நலத்திற்கு கேடு. இவை வந்த பின்னர்தான் திரைப்படத்தையோ விளம்பரத்தையோ துவங்குவார்கள். முன்பெல்லாம் இரவு நேரத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ வேலை முடிந்து இரவு நேரத்தில்தான் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்கிறது. இப்போதெல்லாம் இரவு பத்து மணி காட்சிக்குத்தான் அதிகம் செல்வேன். இதை எழுதும் முன்னர் நான் கடைசியாக பார்த்த திரைப்படம் அம்மாவின் கைப்பேசி. தங்கர் பச்சானின் படம் என்ற ஒரே காரணத்துக்காக படத்திற்கு சென்றேன். முகமூடி மிஷ்கினுக்காக சென்றேன். துப்பாக்கி முருகதாசுக்காக சென்றேன். நண்பன் ஷங்கருக்காக சென்றேன். வித்தகன் பார்த்திபனுக்காக சென்றேன். இங்கே பலரும் நடிகருக்காகத்தான் அதிகம் படம் பார்க்க செல்வர். ஆனால் நானும் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என்று விரும்புபவன், சில குறும்படங்களையும் இயக்கியவன் என்கிற முறையில் சில இயக்குனர்களின் படமென்றால் கட்டாயம் சென்றுவிடுவேன். ஆங்கில திரைப்படங்களிலும் கொஞ்சம் நாட்டம் உண்டு. ஆனால் திரையரங்குக்கு சென்று பார்ப்பதானால் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்த படங்களுக்கு மட்டும்தான் செல்வேன். பாஷை புரியாமல் அங்கே படம் பார்க்க எனக்கு விருப்பமில்லை. Spider Man-4, SkyFall நான் சமீபத்தில் திரையரங்கில் பார்த்த ஆங்கில படங்கள். இடைவேளையில் Sprite மட்டுமே பெரும்பாலும் வாங்குவேன். எப்பவாச்சும் நண்பர்கள் விரும்பினால் பாப்கார்ன் வாங்குவேன். நண்பர்கள் விரும்பினால் அவர்கள் வாங்குவதை அவர்களுக்காக நானும் வாங்கிடுவேன். பெரும்பாலும் தனியாக படம் பார்க்க செல்ல மாட்டேன். மனசுக்கு தோன்றிலால் மட்டுமே தனியாக படத்திற்கு செல்வேன். இதுவரை 4 அல்லது 5 படங்கள் மட்டுமே தனியாக பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். தமிழக திரையரங்கங்கள் எனக்கு தந்த அனுபவம் ரொம்பவே பிடிச்சிருக்கு. சில நேரங்களில் சில கசப்பான கோபமான அனுபவங்களை சந்தித்தாலும் அதிகப்படியான நல்ல அனுபவங்களை தந்திருக்கிறது. அதனால்தான் எந்த புதிய படமானாலும் வீட்டில் பார்க்க விரும்பமாட்டேன். திரையரங்கில் சென்று பார்ப்பேன். அப்போதுதான் கலைஞர்களையும் திரையரங்கு உரிமையாளர்களையும் வாழவைக்கவும் முடியும் ஊக்கப்படுத்தவும் முடியும். இப்போதைக்கு நேரம் ஆகிவிட்டது. வேறொரு பதிவில் இதைப்பற்றி பேசுவோம்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

1 Comments:

Anonymous said...

Padikka romba suvarashyamaga irukkieathu....
Barathy