* கும்கி *

Sunday, December 23, 2012



* கும்கி *

   பிரபு சாலமனின் இன்னுமொரு இயற்கை படைப்பு. மைனா திரைப்படத்தின் சாயலை இதிலும் கொஞ்சம் தந்திருக்கிறார். இருப்பினும் ஒரு வித்தியாசமான கதைக்களம். இங்கே திரையரங்கில் பத்து நாட்களாக இடம் கிடைக்கவில்லை. அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் என்றுதான் ஓடுகிறது. 

  படம் அருமை. சாதாரண கதை. திரைக்கதைதான் இந்த படத்திற்கு பலம். இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையையும் நம்மையும் நகர்த்தி செல்கிறது. விக்ரம் பிரபு புதுமுகம் என்று தெரியாதபடி நடித்திருக்கிறார். நடிகர் திலகம் மற்றும் இளைய திலகம் இவர்களின் வாரிசாயிற்றே. அந்த சாயல் இருக்காதா என்ன. லஷ்மி மேனன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து இதிலும் கலக்கியிருக்கிறார். தன் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இதுவரை இரண்டுமுறை இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தாச்சு, இன்று இரவு பத்துமணி காட்சிக்கு நண்பர்கள் அழைப்பை ஏற்று மூன்றாவது முறையாக பார்க்க செல்கிறேன். சுந்தரபாண்டியன் திரைப்படத்தை திரையரங்கில் இரண்டு முறை பார்த்தேன் அடுத்து கும்கியை இரண்டுமுறை பார்த்திருக்கேன், இன்று மூன்றாவது முறையாக பார்க்கப்போறேன்.


சற்று வித்தியாசமான கதை. அறுவடைக்கு பங்கம் விளைவிக்கும் காட்டு யானையை விரட்ட கும்கி யானையை ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து அழைத்துவருகிறது. வழக்கமான தமிழ் சினிமாவிற்கு தேவையானதை சேர்த்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

பாடல்கள் அனைத்தும் அருமை. “சொல்லிட்டாலே அவ காதல” பாடலில் காட்டும் அருவியை படம் பார்க்கும் எவராலும் மறக்க முடியாது. இதற்காகவே இன்னுமொருமுறை கூட படம் பார்க்க செல்வேன். கதைக்களத்திற்காக இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாய் அமைகிறது. 

படத்திலேயே எனக்கு அதிகம் பிடித்த காட்சி, மேலே நான் போட்டிருக்கும் காட்சிதான். (மாணிக்கம்)யானையின் தந்தத்தை பிடித்துக்கொண்டு பொம்மா மாணிக்கத்திற்கு முத்தம் கொடுப்பது. 

அறுவடை ஆரம்பிக்கும் முன்னர் யானை ஊருக்குள் வரும். அப்போது பயிர்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும். அறுவடையின் போது யானைக்கு மதம் பிடிக்கும். அப்போது வயல்வெளியின் பக்கத்தில்தான் யானையை கட்டியிருப்பார்கள். அப்போது பயிர்களைப் பார்த்தால், நன்கு பயிர் முற்றி மஞ்சள் நிற்மாய் காட்சியளிக்கும். இயக்குனர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தியிருக்கிறார் என்று படம் பார்க்கும்போதே கவனித்து ரசித்தேன்.

படத்தின் கடைசியில் இரண்டு யானைகளுக்கும் நடக்கும் சண்டை கொஞ்ச நேரமானாலும் வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. அனைத்தும் கிராபிக்ஸ் என்று தெரியாதபடி இருந்தது இன்னும் ரசிக்கவைத்தது.

தம்பி ராமையாவின் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. மருமகனின் நிழலில் வாழும் தாய்மாமனாய் வருகிறார். தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

பாடல்கள் அனைத்தும் சீரான இடைவேளையில் அதுவும் கதையோடு ஒட்டி அமைந்திருக்கிறது. தேவையான இடத்தில் தேவையான பாடல்களை கவிஞர் யுகபாரதியும் இசையமைப்பாளர் இமானும் கொடுத்திருக்கின்றனர்.

“கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சாம்” பாடல் ஆட்டம் போட்டு ரசிக்க வைக்கிறது. கொஞ்ச நேரம் வந்தாலும் சரியான நேரத்தில் பாடல் வந்து ரசிகர்கள் அனைவரையும் ஆடவைத்துவிட்டு செல்கிறது. 

இந்த திரைப்படத்தை திரையரங்கில் மட்டுமே பாருங்கள். அப்போதுதான் இந்த படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: