The Alchemist – இரஸவாதி

Tuesday, July 07, 2020



பல ஆண்டுகளாக நான் படிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு புத்தகத்தை இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

Paulo Coelho – அவர்கள் எழுதிய The Alchemist புத்தகம்தான் அது.

என் நண்பர் ஒருவர் மும்பையில் இருந்து தமிழகம் வந்தார். அவர் சென்னையில் ஒருவாரம் தனிமை முகாமில் இருக்க நேர்ந்தது. தனிமையில் இருக்கையில் படிக்க ஒரு சிறந்த புத்தகம் இருந்தால் சொல் என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இந்த புத்தகத்தை அவருக்கு படிக்க சொன்னேன்.

இணையத்தில் இருந்து இந்த புத்தகத்த பதிவிறக்கம் செய்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். மொழிபெயர்ப்பாளர் திரு.சி.முருகேசன்.

என் நண்பருக்கு இந்த நாவலை அனுப்பிவிட்டு அவரை இந்த நாவலை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் சொல்லினேன். அப்போதுதான் எனக்கு தோன்றியது, நானே இந்த புத்தகத்தை படித்ததில்லை ஆனால் பிறரை தவறாமல் படிக்கவேண்டும் என்று சொல்கிறேனே என்று. உடனேயே அனைத்து வேலைகளையும் ஓரங்கட்டிவிட்டு ”இரஸவாதி”யை படிக்க ஆரம்பித்தேன்.

ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். இதை படிக்க படிக்க மனதில் அவ்வளவு ஒரு ஆனந்தம். எங்குமே மனதிற்கு வலி தரக்கூடிய சூழல் இந்த புத்தகத்தில் இல்லை. இதை ஒரு இலக்கிய நாவல் என்பதைவிட ஒரு தத்துவ புதினம் எனலாம். இதில் பிரபஞ்சத்தின் தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது, வாழ்வின் இரகசியம் சொல்லப்பட்டிருக்கிறது. மரணம், வலி, போராட்டம், தேடல், புதையல், இரசவாதம் இவை எல்லாவற்றையும் விட இந்த உலகை இயக்கிக்கொண்டு இருக்கும் காதல் அதிகம் பேசப்படுகிறது.

இந்த நாவலைப் பற்றிய திறனாய்வு நான் செய்யப்போவதில்லை. இந்த நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையோ, அதன் மூலக்கதையையோ சொல்லப்போவதில்லை. இந்த புதினத்தில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

  • ·         நாம் வாழ்க்கையில் எப்போதும் மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
  • ·         ஆனால், காலப்போக்கில் ஒரு மாயமான சக்தி அவர்கள் தம்முடைய இலக்கை அடைவதென்பது இயலாத காரியம் என்று அவர்களை நம்பவைக்கத் துவங்கிவிடும்.
  • ·         அந்த சக்தி பாதகமானது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அதுதான் உன் இலக்கினை அடைவதற்கான வழியை காட்டும். உன்னுடைய ஆன்ம பலத்தையும் மனோ பலத்தையும் ஆயத்தப்படுத்துவதும் அதுதான்.
  • ·         நீ யாராக இருந்தாலும், நீ செய்வது எதுவாக இருந்தாலும், நீ ஏதேனும் ஒன்றை உண்மையாகவே விரும்புவாயானால், அதற்கு காரணம் அந்த விருப்பம் பிரபஞ்சத்தின் ஆன்மாவிலிருந்து உதித்தது என்பதுதான். இந்த பூமியின் மீதான உன் பிறப்பின் நோக்கமே அதுதான்.
  • ·         மக்கள் தங்களுடைய கனவை வாழ்க்கையின் எந்தப்பருவத்திலும் நிறைவேற்றக்கூடிய திறம்படைத்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததே கிடையாது.
  • ·         கிடைப்பதற்கு முன்கூட்டியே ஒரு பொருளைக் கொடுப்பதாக உறுதியளிக்க ஆரம்பித்தாயானால் அதை அடைவதற்கான வேலையை செய்வதில் ஆர்வம் போய்விடும்.
  • ·         சில விஷயங்களை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
  • ·         காற்றின் சுதந்திரத்தை அறிவாய். அந்த சுதந்திரம் உனக்கும் கிடைக்கும்.
  • ·         உன்னைத் தவிர உன்னை பிடித்து நிறுத்தக் கூடியது வேறெதுவுமில்லை.
  • ·         உனக்கு போதும் என நீ நினைக்கும் அனைத்தும் உன் இலக்கை நோக்கிய பாதையின் உன் படிக்கற்கள் மட்டுமே.
  • ·         எப்பொழுதும் நேரடியான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்.
  • ·         உன் இலக்கினை அது நிறைவேறும் வரை மறந்துவிடாதே.
  • ·         ஒருவருடைய வீட்டைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அந்த நபரை நீ நம்பக்கூடாது.
  • ·         உலகில் உள்ள அத்தனை அதிசயங்களையும் இரசிக்கனும், அதே சமயம் கரண்டியில் இருக்கிற எண்ணெய்த் துளிகளையும் மறந்துவிடக்கூடாது.
  • ·         ஒருவன் தன் இலக்கிலிருந்து தப்பி ஓடிவிடாமல் தடுப்பதற்காகக் கேள்வி கேட்கப்படக்கூடாத விஷயங்கள் சில இருக்கத்தான் இருக்கின்றன.
  • ·         உன்னுடைய முடிவுகளை நீயே எடு.
  • ·         உனது வாழ்க்கை என்ன என்பதில் தெளிவாக இரு.
  • ·         Principle of favorability
  • ·         Beginner’s Luck
  • ·         பலரும் இங்கே மாற்றங்களை விரும்புவதில்லை. ஏனென்றால், மாறிய சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதில் இருக்கும் ஒருவித பயம்தான் அதற்குக் காரணம்.
  • ·         வரத்தை அலட்சியப்படுத்தினால் அது சாபமாகிவிடும்.
  • ·         கனவு காண்பதை விட்டுவிடாதே.
  • ·         நீ ஒன்றை விரும்பும்போது அதை அடைய இந்த பிரபஞ்சமே வழி வகுக்கும்.
  • ·         அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய பிரபஞ்ச மொழி ஒன்று இருந்தது.
  • ·         வார்த்தைகளற்ற பிரபஞ்ச மொழி – காற்று உணர்த்தும் செய்தி.
  • ·         எண்ணத்திற்குக் கூட ஆன்மா உண்டு.
  • ·         உலகத்திற்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவை புரிந்துகொள்பவர்களால் எல்லாவற்றிற்குமான ஒரு பொது மொழியை புரிந்துகொள்ள முடியும்.
  • ·         வாழ்வு என்பதை ஒரு பெரிய விழாவாக, கோலாகலமான கொண்டாட்டமாக கருதவேண்டும். ஏனென்றால், நாம் ஜீவித்திருக்கிற இந்த தருணம்தான் வாழ்வென்பது.
  • ·         உலகம் பல மொழிகளில் பேசுகிறது. ஒட்டகத்தின் சப்தம் பயத்தை ஊட்டலாம். ஈச்ச மரத்தின் காட்சி அற்புதமாக தெரியலாம், காலைநேர பாலைவனத்தின் காற்றும் அமைதியும் மனதிற்குள் இலயத்தை தரலாம். உலகம் பல மொழிகளில் நம்முடன் பேசுகிறது.
  • ·         மனித சமூதாயத்திற்கெல்லாம் மூத்தது – காதல் !
  • ·         சோசியம் பார்த்து, எதிர்காலத்தில் நல்லது நடக்குமென்றால் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். நடக்கப்போவது தீயதாக இருக்குமானால், முன்கூட்டியே தெரிந்துபோனமையால் அது நிகழ்வதற்கு முன்பிருந்தே வருத்தப்பட நேரிடும்.
  • ·         எதிர்காலம் இறைவனுக்குரியது. எதிர்காலத்தை மறந்துவிடு. நிகழ்காலத்தில்தான் இரகசியமே இருக்கிறது. நிகழ்காலத்தை உன்னிப்பாக கவனித்தால் அதை நீ மேம்படுத்திக்கொள்ளலாம்.
  • ·         நாளைக்கு இறப்பது என்பது பின்னொரு நாளில் இறப்பதைக்காட்டிலும் மோசமானது அல்ல.
  • ·         வாழ்வதற்காகவோஅல்லது இந்த உலகத்தைவிட்டு புறப்படுவதற்காகவோதான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. எல்லாம் ஒரே வார்த்தையில் அடக்கம். “மக்தூப்”.
  • ·         சாவைப் பற்றி கவலைப்பட ஏதுமில்லை. உலகத்தின் ஆன்மா இவனுக்காக காத்திருக்கிறது. விரைவில், அதிலொரு பகுதியாகப் போகிறான்.
  • ·         வாயினுள்ளே போவது எதுவும் பாவம் இல்லை. வாயிலிருந்து வெளியே வருவதில்தான் இருக்கிறது.
  • ·         உன் இதயம் எங்கிருக்கிறதோ அங்கேதான் புதையலும் இருக்கிறது.
  • ·         நீ உனது புதையலை அடைந்தே தீர வேண்டும். அப்பொழுதுதான் உனது பாதை நெடுகிலும் நீ கற்றுக்கொண்ட ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாகும்.
  • ·         உயிர் உயிரை ஈர்க்கும்.
  • ·         தன்னுடைய இலக்கை தேடி அடைவதற்கு ஒருவனின் காதல் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காதலால் ஒருவன் தன்னுடைய தேடலைக் கைவிடுவானேயானால் அதற்குக் காரணம் அது உண்மையான காதலாக, உலக மொழியைப் பேசக் கூடிய காதலாக இருக்காது.
  • ·         கற்றுக்கொள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதுதான் செயல்முறை.
  • ·         சொர்க்கத்தினுடைய நகலும் படிவமுமாகத்தான் இயற்கையான உலகம் இருக்கிறது என்பதை அறிவாளிகள் புரிந்து கொண்டார்கள்.
  • ·         உன்னுடைய இதயத்தைக் கவனி, அதற்கு எல்லாம் தெரியும். ஏனென்றால், அது உலக ஆன்மாவிலிருந்து வந்தது. ஒருநாள் அங்கேயே திரும்பப் போய்விடும்.
  • ·         துன்பம் பற்றிய பயம் துன்புறுவதைக் காட்டிலும் மிக மோசமானது என்று உன் இதயத்திடம் சொல்.
  • ·         கனவுகளைத் தேடிப் புறப்பட்ட இதயம் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளானதில்லை.
  • ·         இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தேடி அடைவதற்காக ஒரு புதையல் காத்துக்கிடக்கிறது.
  • ·         உன் இதயம் சொல்வதை எப்போது சரியாக கேட்கிறாயோ அப்போது உலக ஆன்மாவிடம் உன் இதயம் திரும்பிவிட்டது என்று உணர்ந்துக்கொள்.
  • ·         வாழ்க்கையில், வெற்றியாளன் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகிறான்.
  • ·         உன்னிடம் பெரும் புதையலை வைத்துக்கொண்டு அதை பிறரிடம் சொல்ல முற்பட்டால் அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
  • ·         ஆன்மாவின் வலிமையை கண்கள் காட்டும்.
  • ·         மற்றவருடைய இலக்கில் குறுக்கிடும் எவரும் தன்னுடைய இலக்கை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
  • ·         ஒரு சங்கை எடுத்து காதில் வைத்தால் அதில் கடலின் அலையோசை கேட்கும். ஏனென்றால், கடல்தான் அதன் இலக்கு. அதிலிருந்துதான் சங்கு பிறப்பெடுத்து வந்தது. மீண்டும் அதிலேயே சென்று சேர எப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது.
  • ·         கனவை அடையவிடாமல் தடுப்பது ஒன்றே ஒன்றுதான். தோற்றுவிடுவோமோ என்கிற பயம்.
  • ·         சாகப் போகிறோம் என்கிற பயமே வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள செய்வது வழக்கம்.
  • ·         காற்றுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
  • ·         பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்தும், பரிணமித்த அனைத்தும் உன்னுள் இருக்கிறது என்பது எப்போது உணரப்போகிறாய் ?
  • ·         ஒருமுறை நிகழ்ந்தது மறுமுறை ஒருபோதும் நிகழாது. ஆனால், இருமுறை நிகழ்ந்ததோ மூன்றாவது முறையும் கண்டிப்பாக நிகழும்.
  • ·         ஒருவன் என்ன தொழில் செய்கிறான் என்பது பொருட்டல்ல. ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உலக வரலாற்றில் முக்கிய பாத்திரம் வகிக்கிறான். சாதாரண நிலையில் அது அவனுக்கு புரிவதில்லை.
  • ·         இலக்கை தேடிச் செல்பவர்களுக்கு வாழ்க்கை பெருந்தன்மையாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை உணர பொறுமை அவசியம்.

 இன்னும் எத்தனையோ வரிகள் என்னை அதிகம் கவர்ந்தது. அதில் சிலவற்றையே இங்கே பதிவு செய்கிறேன். முன்பெல்லாம் ஒரு நூலை படித்தால் வெறுமனே படித்துவிட்டு அதை மனதில் வைத்துக்கொள்வேன். இப்போதெல்லாம், எந்த ஒரு நூலாக இருந்தாலும்சரி, அதை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே அதிலிருந்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்துவிடுகிறேன். அது எனக்கு பின்னாளில் உதவலாம் என்பதற்காகவும், உங்களுடனும் பகிரலாம் என்றும். மேலே நான் பதிந்த வரிகளை மீண்டும் படித்து முடிக்கையில் அந்த நாவலை முழுவதுமே படித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.

ஒருமுறை குறுஞ்செய்தி ஒன்றை படித்தேன். அதில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூலில் இருந்து ஒருசில வரிகளை அதில் பதிவிட்டிருந்தார்கள். அந்த வரிகளை படித்த அடுத்த நொடியே, எனக்கு அந்த நூலை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. உடனே அதை பதிவிறக்கம் செய்து 3 நாட்களில் அதை படித்து முடித்துவிட்டேன்.

அதுபோல, இங்கே நான் பதிவிடும் சில வரிகள் உங்களை ஒருவேளை ஈர்க்கும். உடனே அந்த நாவலை நீங்களும் தேடிச்சென்று படிக்க விரும்புவீர்கள். அதனாலேயே நான் படிக்கும் நூலில் நான் இரசித்த சில வரிகளை இனி என் வலையில் பதிந்து உங்களோடு பகிரப்போகிறேன்.

இன்னொரு விடயத்தை சொல்ல மறந்தேன். இந்த நாவலை நான் தமிழில் படிப்பதை பார்த்துவிட்டு என் மனைவி கேட்டாள். ஏன் இதை தமிழில் படிக்கிறாய், ஆங்கிலத்தில் படித்தால்தான் அருமையாக இருக்கும் என்றார். அதற்கு நான் சொன்னேன், இந்த நூல் முதலில் போர்ச்சுகீசிய மொழியில்தான் வெளியானது. ஆங்கிலத்தில் ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில நூலே மூலநூலில் இருந்து மொழியாக்க செய்யப்பட்டதுதான். எந்த மொழியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நூலை நான் படிக்கும்போது நம் இதயத்தோடு தொடர்பு படுத்திக்கொள்ள எந்த மொழி நமக்கு உதவுகிறதோ அந்த மொழியில் படிக்கலாம்.

உங்களில் எவருக்காவது ”The Alchemist – இரஸவாதி” நூல் தமிழில் படிக்க விரும்பினால், இணையத்தில் தேடுங்கள். தேடி கிடைக்காவிட்டால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் நான் உங்களுக்கு இந்த நூலை பகிர்கிறேன்..     மி: dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *

மனித நேயம்



அமெரிக்காவில் ஒரு நபரை காவலர் ஒருவர் கொன்றதற்கு ஒட்டுமொத்த நாடும் ஒன்று சேர்ந்து போராடியது. ஆனால், இங்கே சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்திற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட மக்கள் வெளிப்படுத்தாது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

என்னை நேரடியாக பாதிக்காத எந்தவொரு விடயத்திற்காகவும் நான் ஏன் போராட வேண்டும் என்கிற மனநிலையை இந்தியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரின் உரிமைக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையாய் குரக் கொடுக்க வேண்டும். 

அதுவரை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, மக்களை பிரித்தாளவே செய்வார்கள், அப்பாவிகளை வஞ்சிப்பார்கள்.

* தினேஷ்மாயா *

வாழ்வின் ஆதாரம் - உயிர்



“பீகாரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - செய்தி”

இதுதான் இந்தியா. 

50 பேருக்குமேல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. இப்படிப்பட்ட மக்களை வைத்துக்கொண்டுதான் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 7 இலட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம். ஆனால், உயிர்தான் வாழ்வின் ஆதாரம் என்பதை இந்த மக்களும் அரசாங்கமும் என்று உணரப் போகிறார்கள் ?

* தினேஷ்மாயா *

ஆயுத எழுத்து...



சமீபத்தில் ஐதராபாத்தில் நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை பெரும்பாலானோர் கொண்டாடினர். நீதி நிலை நாட்டப்பட்டது என்றனர். அந்த காவல்துறையினருக்கு மலர்கள் தூவி வாழ்த்தினர்.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது சட்டப்படி கிடைத்திருக்க வேண்டும். காவல்துறையினருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லை என்று அன்று சொன்னோம். ஆனால், அன்று காவல்துறையினரின் செயலை மெச்சிய மக்கள்தான் இன்று சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்தில் காவல்துறையினருக்கு எதிராக கொதிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு அதிகாரத்தோடு ஆயுதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதங்கள் மக்களை காக்க பயன்படாமல் மக்களை தாக்கவே அதிகம் பயன்படுவதால் அதிகம் பாதிப்பு அப்பாவி பொதுமக்களுக்கே..

* தினேஷ்மாயா *

வாழ்க பணநாயகம்



22-05-2018

இரண்டு ஆண்டுகள் ஆகியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கே இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்துக்காக நீதியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நிதி மட்டுமல்ல, நீதியும் ஏழைகளுக்கு என்றும் எட்டாக்கனியே..


வாழ்க பணநாயகம்..
வீழ்க சனநாயகம்..

* தினேஷ்மாயா *

*சோறு - சாதம்*



இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.
காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். 

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். எந்த பிச்சைக்காரராவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? 
அது ஏன்?

திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது. 

சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன்  வருகிறது.

"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். 
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி பாடியுள்ளான். 

இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்? 
அதன் பின்னால் உள்ள அரசியல். 
"கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.
"எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "தண்டச் சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது "தண்ட சாதம்" என்று சொல்வதுண்டா?

சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் பூசைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது.

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது.
இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே.

தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்க செய்வான்? சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே பயன்படுத்துவோம்.

Shared from Twitter id: @RAKESH48763046
  
* தினேஷ்மாயா * 

விழிப்புணர்வுடன் இருப்போம்

Sunday, June 07, 2020



இந்த கொடிய கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாகி கொத்து கொத்தாக மக்கள் மடியும் நேரம் வந்தால், இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சவப்பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்கு எப்போதும் சந்தை தங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். சில நேரங்களில் எது தேவையோ அதை சந்தைப்படுத்துவார்கள், அல்லது செயற்கையாக ஒரு தேவையை உருவாக்கிவிடுவார்கள்.

மக்கள்மீது அக்கறை ஏதுமின்றி சந்தை பொருளாதாரம் என்று முன்னிலைப் பெற்றதோ அன்றே நமக்கான சவக்குழிகளை இந்த கார்ப்பரேட்கள் தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதில் விழுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நமது தலையாய கடமை..

இதைப்பற்றி விரிவாக மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

* தினேஷ்மாயா *

உன் உயிர் உன் கையில்



செய்தி:  உணவகங்களில் பார்சல் வாங்க வருபவர்களும், உணவு அருந்த வருபவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

என் கேள்வி : சாப்பிடும்போது எப்படி முகக்கவசம் அணிந்திருக்க முடியும் ? குறைந்தது பத்து அல்லது இருபது நிமிடமாவது முகக்கவசம் தவித்தாக வேண்டும். அது ஆபத்தில்லையா ?

மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதது ஏன் ?

உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் உயிரும் உன் கையில்தான் இருக்கிறது..

தன்னம்பிக்கையோடு இருப்போம்.. விலகி இருப்போம்..

* தினேஷ்மாயா *


வாழ்க்கையின் முரண்


அவனிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. அவன் எது சொன்னாலும் அப்படியே நடந்துவிடும். அவன் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடந்துவிடும். நமக்கேன் வம்பு. அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

இப்படி ஒரு சிலர் பேச நாம் கேட்டிருப்போம்.

இதுபோல சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எது சொன்னாலும், எது நினைத்தாலும் அப்படியே நடந்துவிடும். கருநாக்கு உடையவன் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கிருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால். இப்படி ஒரு அறிய சக்தி இருக்கும் இவர்கள், ஏன் அதை நல்ல விடயத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஏன் எப்போதும் நல்லதையே நினைத்துக்கொண்டும் நல்லவற்றையே சொல்லிக்கொண்டும் இருக்கலாமே.

இதுதானோ வாழ்க்கையின் முரண் ??

* தினேஷ்மாயா *

எங்கள் ஊர் FRCS

Friday, June 05, 2020




அவள் புத்தகம் படித்து பார்த்ததில்லை. அவளுக்கு படிக்கவும் தெரிந்ததில்லை. ஆனால், அவள் சொல்லும் செய்தி எந்த புத்தகத்திலும் வந்ததில்லை. அவள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமூட்டும். அத்தனையும் உண்மையாக இருக்கும்.

தலைவலிக்குது என்று சென்றால் ஆயிரம் பரிசோதனைகளை செய்துவிட்டு ஒன்றுமில்லை இதை சாப்பிடு சரியாகிடும் என்று நான்கு சத்து மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்களுக்கிடையே, பள்ளிக்கூடமே போகாமல், கை வைத்தியத்தால் எங்கள் குடும்பம் மட்டுமல்ல, ஊரில் பலர குடும்பங்களுக்கு வைத்தியம் பார்க்கும் எங்கள் ஊர் FRCS அவள்.

முன் குறிப்பு: நான் அவள் பேரன்தான். 
அவள் சிறு வயதில் தென்னை மரம் ஏறுவாள். நீச்சல் அடிப்பாள்.
பின்குறிப்பு. இவையிரண்டும் எனக்கு இன்றுவரை தெரியாது.

சிறுசேமிப்பு என்றாலும் அதில் தெரியும் அவளின் பொருளாதார ஆளுமை. தண்ணீரையும் காசு போலவே சிக்கனமாய் செலவு செய்ய சொல்லிக்கொடுத்தவள்.

அவள் போடும் காபியின் சுவையை இன்றுவரை வேறெங்கும் சுவைத்ததில்லை.

அவள் வைக்கும் கறிக்குழம்பிற்கு இந்திய புவிசார் குறியீடே கொடுக்கலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், துக்கம் நெஞ்சை அடைக்கை வார்த்தைகளும் அடைப்பட்டுப் போகிறது.

இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். எனக்கும் வரும். உங்களுக்கும் வரும். ஆனால், நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு அது வரும்போதுதான் இதுவரை நாம் கற்ற தத்துவங்கள் மண்ணோடு புதைந்துவிடுகிறது – அவளைப்போல !


* தினேஷ்மாயா *

கலப்படமில்லாத பேரன்பு




எலேய்.. எந்திரிச்சு வெறும் வயிரா கிடக்க. எதாச்சும் குடி..

நல்லா அள்ளி தின்னு. அப்பத்தான் குடலு பெருசாகும். இப்படி கம்மியா அள்ளி தின்னா எப்பிடி?

வெயில்ல வெளியே போகாதடா.. உச்சி வெயிலு.. ஒடம்புக்கு ஆகாது..

என்னடா சுருண்டு உக்காந்திருக்க. கால் வலியா. ஏண்டி அந்த வெளக்கெண்ணய்ய எடுத்துனு வா. சுளுக்கு கிளுக்கு பிடிச்சிருக்கும்.. நீவி விட்டா சரியாயிரும்..

எத்துக்குடா ஆஸ்பத்திரி போற. செத்த இரு. மாமன அனுப்பி ஆத்துல நண்டு பிடிச்சார சொல்றேன். ஆவி புடிச்சுட்டு நண்டு ரசம் தின்னா சளி பறந்துரும்..

இந்தா பிடி.. ஆயாகிட்ட 40 ரூவாதான் கன்னு இருக்கு. கைசெலவுக்கு வெச்சுக்கோ ..

இப்படி இன்னும் ஏராளம் ஏராளம்.. இந்த கலப்படமில்லாத பேரன்பு, அவளுடன் சேர்த்தே புதைக்கப்பட்டது அந்த சுடுகாட்டில்..

என் பாட்டி இறந்தாள், என் நினைவில் வளர்ந்தாள் !!


* தினேஷ்மாயா *

இடப்பெயர்ச்சி




ஓரிடத்தில் வளர்ந்த செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டுவைத்தால் அது செழிப்பாக வளரும் என்பதில் நிச்சயம் இல்லை. அது இருக்கும் இடத்திலேயே விட்டிருந்தால் தனக்கான நீரை தானே எப்படியாவது தேடிக்கொண்டிருக்கும், அல்லது நீரின்றி வெயிலில் வாடி இறந்திருக்கும். அதை வேறொரு இடத்திற்கு மாற்றுவதால், அதன் வேர் மயிர்களில் உள்ள அதன் உயிர் பாதி பிரிந்துவிடுகிறது. வேரறுப்பது என்பது இதுதானோ !?

அப்படி வேரறுக்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் நன்றாக வளர ஒரு கைப்பிடி மண்ணை அது வளர்ந்த இடத்தில் இருந்து எடுத்துவந்து புது இடத்தில் போடுவார்கள்.
ஒரு செடிக்கு இத்தனை செய்கிறோம்.

ஆனால், தன் தாய்நாட்டை விட்டு அகதிகளாய் வெளியேறும் மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் ? அவர்களை வேற்றுகிரக மனிதர்களைப் போல் பார்ப்பது ஒன்றைத்தவிர !?

* தினேஷ்மாயா *


மாயநதி !



           
  ஒரு நதியின் மரணத்தில்தான் கடலில் பிறப்பு இருக்கிறது. மனம் என்னும் மாயநதியை அணைக்கட்டி வைக்காமல், அதை இந்த பிரபஞ்சம் என்னும் பெருங்கடலோடு கலக்கவிடுவோம். அப்பெருங்கடலில் மூழ்கிப்போவோம்.


* தினேஷ்மாயா *

அதுக எங்கிட்டுப் போகும்?



வௌஞ்ச வெள்ளாமைய வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.

சாமி எங்கேயோவா இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!

இந்த காக்கா குருவிகமட்டும் இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித் திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?

- வைரமுத்து அவர்களின்  “கள்ளிக்காட்டு இதிகாசம்” நூலில் இருந்து..

* தினேஷ்மாயா *

சூது கவ்வும் !!

Saturday, May 30, 2020





சமீபகாலமாக  இணையத்தில் ரம்மி எனப்படும் விளையாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி அது அவர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பதை காணமுடிகிறது. சூதாட்டம் என்பதை இணையத்தில் விளையாடினாலும் சரி, எங்கு விளையாடினாலும் சரி அது நிச்சயம் ஒருவனின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் என்பதை எவரும் உணர்ந்தபாடில்லை.
சூது கவ்வும் என்பது இன்றளவும் பொருத்தமாக இருக்கும் ஒரு முதுசொல். பாரத கதை அனைவரும் அறிந்ததே. பாண்டவர்கள் நாடிழந்து, கானகத்தில் திரிய இந்த சூதாட்டம்தான் காரணம். நளன் தன் மனைவியை பிரிய, நாட்டை இழக்க இந்த சூதாட்டமே காரணம். இவையெல்லாம் வெறும் கதைகள் என்று நீங்கள் புறந்தள்ளினாலும், அதில் கூறப்பட்டுள்ள அறம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

ரம்மி என்று மட்டுமில்லை, இன்றைய உலகில் பல்வேறு வகையான சூதாட்டங்கள் இருக்கிறது. எவற்றிலும் சிக்காமல் இருப்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஏதாவது ஒரு சூதாட்டத்தில் சிக்கிக்கொள்பவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாதவர்கள் போல் தவிக்கிறார்கள்.
இந்த சூதாட்டங்கள் எல்லாம் கொடுப்பதைப்போன்று கொடுக்கும். ஆனால், அது எடுப்பதோ கொடுத்ததைவிடவும் பன்மடங்கில் இருக்கும். இந்த உளவியல் தெரியாமல் அல்லது தெரிந்தும் அதிலிருந்து வெளியேவர விரும்பாமல் இருப்பவர்கள்தான் அதிகம்.
ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல், ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவன் ஆசையை தூண்டவேண்டும். அதைத்தான் செய்கிறார்கள். Casino, Rummy இதுபொன்ற விளையாட்டுக்களை பொழுதுபொக்கிற்காக விளையாடுபவர்களைவிட பணத்திற்காக விளையாடுபவர்களே அதிகம். இதில் அதிர்ஷ்டம் என்பது 10% மட்டுமே. மீதம் 90% உங்கள் திறமை என்று நம்பினால் அது மிகப்பெரிய தவறு. உங்கள் திறமைக்கான மதிப்பு வெறும் 10% மட்டுமே. மீதம் 80% அந்த விளையாட்டை நடத்துபவர்கள் கையில் இருக்கிறது. ஒருவனுக்கு எப்போது கொடுக்கனும், எப்போது எடுக்கனும், எவ்வளவு கொடுக்கனும், எவ்வளவு எடுக்கனும் என்றெல்லாம் அவனே தீர்மானிக்கிறான். அத்திப் பூத்தார்போல ஒருசிலர் மட்டுமே அதிக லாபமடைகிறார்கள். ஆனால், அடுத்தமுறை அவர்களுக்கு அதேபோல் அதிர்ஷ்டம் கிடைக்காது. மனிதனின் உளவியலை நன்கு அறிந்த அவர்கள்தான் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள். அந்த உளவியலை நன்கு உணர்ந்துக்கொண்டு அதில் இருந்து விலகி இருப்பதே சிறப்பு.
சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் காலம் காலமாக இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கோடிகளை வென்றவன் எவனும் இல்லை.

எப்போதும் மறவாதீர்கள் - அன்றும் இன்றும் என்றும் – சூது கவ்வும் !!

* தினேஷ்மாயா *

நேரம்



    அனைவருக்கும் பொதுவாக இருப்பது நேரம். ஆனால், அனைவரும் அதை ஒரேமாதிரி செலவழிப்பதில்லை. நாம் நம்முடைய நேரத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதே நம் நிகழ்காலத்தையும், நம் எதிர்காலத்தையும், நம் வாழ்வின் வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது.

நேரத்தை சேமிக்கவும் முடியாது, ஆனால், வீணடிக்க முடியும். 

எவன் ஒருவன் தன் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுகிறானோ அவனுக்கே இந்த உலகம் தலைவணங்கும், அவனே இங்கே தலைவனாக அறியப்படுகிறான். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மை புலப்படும்.

* தினேஷ்மாயா *

உணவின் இரகசியம்



நாம் எதற்காக உண்கிறோம்? பசி எதற்காக எடுக்கிறது? – இதுபோன்ற கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.

உடலின் இயக்கத்துக்கு சக்தி தேவைப்படுகிறது, அதனால் பசி எடுக்கிறது, அதற்காக உண்கிறோம். சரிதானே !

சரி. எனக்கொரு கேள்வி. பல நேரங்களில், நாம் உணவு உட்கொண்ட பிறகு நமக்கு சோர்வு ஏற்படுகிறதல்லவா? அது ஏன் ?

நமக்கு இதற்கும் விடை தெரியும். அறிவியல் இதையும் நமக்கு கற்பித்திருக்கிறது. அதாவது, நமது உடல் நாம் உட்கொண்ட உணவை செரிமானம் செய்ய அதிக சக்தியை செலவிடுகிறது, அதனால் நமது உடல் சோர்வு கொள்கிறது என்பதுதானே அந்த விடை.

ஆம். இது சரிதான்.

இவையெல்லாம் இருக்கட்டும். நாம், நம்முடைய உணவு பழக்கத்தை எங்கிருந்து கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் நாம் வளரும்போது நம் வீட்டில் என்ன பின்பற்றுகிறார்களோ அதையேதான் நம் உணவுமுறையாக கொண்டிருப்போம். நாம் வளர்ந்தபிறகு, உணவு பழக்கத்தை சிறிது மாற்றிக்கொள்வோம். இது சரி, இது தவறு என்று எவ்வளவோ பேர் சொன்னாலும் எதையும் கேட்காமல், நம் வயிறு என்ன சொல்கிறதோ, நம் நாவிற்கு எந்த சுவை அதிகம் பிடிக்கிறதோ அதையேதான் நாம் அதிகம் விரும்பி சுவைப்போம்.

உணவில் கட்டுப்பாட்டுடன் யார் இருக்கிறாரோ, அவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவர் நீண்டநாள் உயிர் வாழ்வார். உணவே மருந்தாய் இருக்கும் நம் உணவு பழக்கத்தினை அறவே மறந்துவிட்டு, நம் உடலுக்கு ஒவ்வாத உணவை நாம் வலுகட்டாயமாக திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
உணவைப் பற்றி எனக்கு தெரிந்த, நான் பின்பற்றிவரும், இனி பின்பற்ற விரும்பும் சில வழிமுறைகளை இங்கே பதிவிட விரும்புகிறேன். ஏனென்றால், அறிவியல் சொல்கிறது – ஆற்றலை ஆக்கவோ முடியாது அழிக்கவோ முடியாது. ஆனால், ஒருவகை ஆற்றலை மற்றோருவகை ஆற்றலாக மாற்ற முடியும். அதாவது, நம் உயிருக்கு தேவையான ஆற்றல், நம் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. உணவின்றி, நீரின்றி, காற்றின்றி எவராலும் உயிர்வாழ முடியாதல்லவா.

1.      பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.   அடுத்தவேளை பசி எடுக்கம்படி இந்த வேளை உணவை அளவாக சாப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மதிய உணவிற்கு பிரியாணி கிடைக்கிறது என்பதால் நம் வழக்கமான அளவைவிட அதிகமாக உண்ணக்கூடாது, அது பெரும் பிரச்சனையையே தரும்.
3.   வாரத்திற்கு ஒருமுறையாவது வெறும் நீரை மட்டுமே உட்கொண்டு, விரதம் இருத்தல் சிறந்தது. இது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
4.   எப்போதுமே பாதி வயிற்றுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
5.   நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது, அந்த ஒரு நொடியில் நம் மனம் சொல்லும், இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோமே, நம் பிடித்த உணவுதானே, ஒருநாள் அதிகம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதென்று. அந்த நொடியில், நம் உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட வேண்டும்.
6.   கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், பாக்கெட்களில் அடைப்பட்ட உணவுகள், உணவகங்களில் உண்பது, நேரம் தவறி உண்பது, உண்ணும்போதும் உண்டபின்பும் உடனே அதிக தண்ணீர் பருகுவது, சாப்பிடும்போது பேசுவது, அல்லது தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது, அரட்டை அடிப்பது, அல்லது வேறு சிந்தனையில் இருப்பது, இவற்றை தவிர்க்க வேண்டும்.
7.   உணவை உண்கையில் நம் கவனம் அனைத்தும் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். அதை நன்றாக மென்று, எச்சிலோடு சேர்த்து கூழாக்கி விழுங்க வேண்டும். நம் வயிற்றின் மீதான சுமையை நாம் இப்படி செய்வதனால் குறைக்கிறோம்.
8.   பழங்களும் காய்கறிகளும் அதிகம் உண்ணலாம்.
9.   அசைவ உணவுகளில் இருக்கும் சத்து நம் உடலுக்கு தேவைதான், அதுவும் அளவாக எடுத்துக்கொண்டால் நன்று. அளவு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. உணவு தான் நமக்கு உயிர் கொடுக்கிறது. உணவுதான் மனிதனை நோயாளி ஆக்குகிறது. அதே உணவுதான் மனிதனை குணப்படுத்தவும் செய்கிறது. உணவை பொறுப்பாக கையாண்டால், உணவும் நம்மை பொறுப்பாக கையாளும்.


* தினேஷ்மாயா *

யாரிடமும் சொல்லாதே

Wednesday, May 27, 2020


உன் பிரச்சனைகளை ஒருவரிடம் சொல்லும் முன்னர், அந்த பிரச்சனையை அவரிடம் சொல்வதால் உனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பினால் மட்டுமே அதை அவரிடம் பகிர்ந்துக்கொள். இல்லையென்றால், உன் பிரச்சனையை யாரிடமும் சொல்லாதே !

உன் பிரச்சனை உனக்கு மட்டுமே பிரச்சனையாக தெரியும், பிறருக்கு அல்ல..

உன் மகிழ்ச்சியில் மகிழ்பவர்களைவிட, உன் பிரச்சனையால் மகிழ்பவர்களே இவ்வுலகில் அதிகம்...

* தினேஷ்மாயா *

யாரை எங்கே பாராட்டலாம்

Wednesday, May 20, 2020




“நேசனைக் காணா இடத்தில் நெஞ்சு ஆரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே, வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்”

- ஔவையார்

பொருள்: 

   நண்பனை அவன் இல்லாதபோது பாராட்டவேண்டும். ஆசானை எல்லா இடத்திலும் பாராட்டலாம். அவர் இருக்கும் போதும் பாராட்டலாம், இல்லாதபோதும் பாராட்டலாம். மனைவியை படுக்கையறையில் மட்டுமே பாராட்டவேண்டும். மகனை மனதில் மட்டுமே பாராட்டவேண்டும். வேலையாளை அவன் வேலை முடிந்தவுடன் தான் பாராட்டவேண்டும்.


* தினேஷ்மாயா *


வசந்த காலம்

Friday, May 08, 2020




பத்து வருடங்களுக்கு முன் இந்நேரம் நான் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து இருந்தேன். தேர்வுகள் முடிந்தாகிவிட்டது ஆனால் இன்னமும் பட்டம் வாங்கவில்லை.

திரும்பி பார்க்கிறேன் !

இன்று எதேச்சையாக என் Gmail – ஐ திறந்து, கடைசியில் இருந்து படிக்கத்துவங்கினேன். அப்பப்பா… எத்தனை எத்தனை அருமையான நினைவுகள். அன்று பேசிய பெரும்பாலான நண்பர்கள் இன்று தொடர்பில் இல்லையென்றாலும், அவர்களுடன் நான் பேசிய அந்த GTALK உரையாடல்களை திரும்ப படிக்கையில் மனம் புத்துணர்வு அடைகிறது. மீண்டும் கல்லூரியில் படிப்பதாய் ஓர் உணர்வை எனக்கு தருகிறது.

தேவதைப்போல் வந்த அவள், அவளுடன் படிக்கும் அனைவரும் எனக்கும் நண்பர்கள், என் வலைப்பக்க வாசகர்கள், என் பள்ளி நண்பர்கள், என் கல்லூரி நண்பர்கள் இப்படி என் மனதில் இடம்பிடித்த சிலருடனான உரையாடல்கள் என் மனதை வருடி செல்கிறது.

அன்றைய காலகட்டம் பெரும்பாலும், அவளுடைய நினைவுகளாலும் அவளுக்கான கவிதைகள் எழுதுவதிலும், என் வலைப்பக்கத்தை நிரப்புவதிலும், மனதிற்கு நெருக்கமான சில நண்பர்களுடன் பேசுவதிலுமே செலவழித்திருக்கிறேன் எனலாம்.

திரும்பவும் கிடைக்காத அந்த வசந்த காலத்தை இப்போது என் மனதில் அசைப்போட்டு பார்க்கிறேன். உள்ளம் மகிழவும் மனம் நெகிழவும் ஆனந்த கண்ணீர் வழிந்தோடி என் கைகளில் விழுகிறது…….

* தினேஷ்மாயா *