சூது கவ்வும் !!

Saturday, May 30, 2020





சமீபகாலமாக  இணையத்தில் ரம்மி எனப்படும் விளையாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி அது அவர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பதை காணமுடிகிறது. சூதாட்டம் என்பதை இணையத்தில் விளையாடினாலும் சரி, எங்கு விளையாடினாலும் சரி அது நிச்சயம் ஒருவனின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் என்பதை எவரும் உணர்ந்தபாடில்லை.
சூது கவ்வும் என்பது இன்றளவும் பொருத்தமாக இருக்கும் ஒரு முதுசொல். பாரத கதை அனைவரும் அறிந்ததே. பாண்டவர்கள் நாடிழந்து, கானகத்தில் திரிய இந்த சூதாட்டம்தான் காரணம். நளன் தன் மனைவியை பிரிய, நாட்டை இழக்க இந்த சூதாட்டமே காரணம். இவையெல்லாம் வெறும் கதைகள் என்று நீங்கள் புறந்தள்ளினாலும், அதில் கூறப்பட்டுள்ள அறம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

ரம்மி என்று மட்டுமில்லை, இன்றைய உலகில் பல்வேறு வகையான சூதாட்டங்கள் இருக்கிறது. எவற்றிலும் சிக்காமல் இருப்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஏதாவது ஒரு சூதாட்டத்தில் சிக்கிக்கொள்பவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாதவர்கள் போல் தவிக்கிறார்கள்.
இந்த சூதாட்டங்கள் எல்லாம் கொடுப்பதைப்போன்று கொடுக்கும். ஆனால், அது எடுப்பதோ கொடுத்ததைவிடவும் பன்மடங்கில் இருக்கும். இந்த உளவியல் தெரியாமல் அல்லது தெரிந்தும் அதிலிருந்து வெளியேவர விரும்பாமல் இருப்பவர்கள்தான் அதிகம்.
ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல், ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவன் ஆசையை தூண்டவேண்டும். அதைத்தான் செய்கிறார்கள். Casino, Rummy இதுபொன்ற விளையாட்டுக்களை பொழுதுபொக்கிற்காக விளையாடுபவர்களைவிட பணத்திற்காக விளையாடுபவர்களே அதிகம். இதில் அதிர்ஷ்டம் என்பது 10% மட்டுமே. மீதம் 90% உங்கள் திறமை என்று நம்பினால் அது மிகப்பெரிய தவறு. உங்கள் திறமைக்கான மதிப்பு வெறும் 10% மட்டுமே. மீதம் 80% அந்த விளையாட்டை நடத்துபவர்கள் கையில் இருக்கிறது. ஒருவனுக்கு எப்போது கொடுக்கனும், எப்போது எடுக்கனும், எவ்வளவு கொடுக்கனும், எவ்வளவு எடுக்கனும் என்றெல்லாம் அவனே தீர்மானிக்கிறான். அத்திப் பூத்தார்போல ஒருசிலர் மட்டுமே அதிக லாபமடைகிறார்கள். ஆனால், அடுத்தமுறை அவர்களுக்கு அதேபோல் அதிர்ஷ்டம் கிடைக்காது. மனிதனின் உளவியலை நன்கு அறிந்த அவர்கள்தான் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள். அந்த உளவியலை நன்கு உணர்ந்துக்கொண்டு அதில் இருந்து விலகி இருப்பதே சிறப்பு.
சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் காலம் காலமாக இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கோடிகளை வென்றவன் எவனும் இல்லை.

எப்போதும் மறவாதீர்கள் - அன்றும் இன்றும் என்றும் – சூது கவ்வும் !!

* தினேஷ்மாயா *

0 Comments: