என் தேசம் என் மக்கள்

Monday, October 21, 2013


     பரப்பளவில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடு. இதை வாக்கியமாக படிப்பது சுலபம். ஆனால் உண்மையில் எண்ணிப்பாருங்கள். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 விழுக்காடு இந்தியாவில் வாழ்கிறார்கள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த நாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் இருக்கின்றனர் என்கிற கருத்து நம் அனைவரின் மனதிலும் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே நம் அனைவர் மனதிலும் இந்த ஒற்றுமையுணர்வு இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தமிழன், மலையாளி, வடஇந்தியன், பஞ்சாபி இப்படி பலவாறாக பிரிந்து கிடக்கிறோம். 

     மதுரையில் இருப்பவன் பிழைப்புத்தேடி பெரும்பாலும் சென்னைக்கும், திரிச்சூரில் இருப்பவன் திருவனந்தபுரத்துக்கும், குண்டூரில் இருப்பவன் ஐதரபாத்துக்கும் வடஇந்தியர்கள் புதுடில்லிக்கும் படையெடுக்கின்றனர். ஆனால், புதுடில்லியில் இருக்கும் ஒருவன் ஏன் தென்னிந்தியாவிற்கு பிழைப்புத்தேடி வருவதில்லை, நம் தென் தமிழக மக்கள் ஏன் வடகிழக்கு பகுதிக்கு பிழைக்க செல்வதில்லை. என்னதான் இந்தியராக இருந்தாலும் மனதளவில் நம் அனைவருக்குள்ளும் ஒரு வேலி இருக்கத்தான் செய்கிறது. மொழி நம்மை அதிகம் பிளவுபடுத்துகிறது. நம் மக்கள் சுற்றுலாவிற்காக வட இந்தியாவிற்கு செல்லும்போது மொழி தெரியாமல் பல இன்னல்களை சந்திக்கின்றனர். மொழி கலாச்சாரம் இப்படி அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுகிறது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனியாய் ஒரு அடையாளம் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்கான பொதுவான அடையாளமாய் எதை சொல்வோம் நாம் ?

     வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை அந்நியர்களாய் பார்ப்பதும், தென்னிந்தியர்கள் வடஇந்தியர்களை அந்நியர்களாக பார்ப்பதும், வடகிழக்கு இந்தியர்களை மற்ற இந்தியர்கள் அந்நியர்களாய் பார்க்கும் அவலம் இன்றளவும் பெரும்பாலான மக்கள் மத்தியில் இருக்கிறது. இல்லை என்று ஒருவராவது மறுத்து கூற முடியுமா. நீங்கள் வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை சுற்றியிருக்கும் 10 பேரில் 8 பேரிடம் இந்த குணம் இருக்கிறதே. 

       இது என் தேசம். இதில் வசிப்பவர்கள் அனைவரும் என் மக்கள் என்கிற கருத்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே இல்லாமல் மனதளவிலும் இருக்கவேண்டும். நம் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமையுணர்வு இல்லாவிடில் அந்நியன் என்ன நம் மக்களே நம்மை எளிதாக வீழ்த்திடுவார்கள். அதான் இன்றைய அரசியவாதிகள் செய்துவருகிறார்கள். 

     ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..

* தினேஷ்மாயா *

0 Comments: