எங்கே செல்வோம்

Monday, October 21, 2013


    நேற்று ஒரு நாளிதழில் சிரியா உள்நாட்டு போர் பற்றிய ஒரு கட்டுரையை படித்துக்கொண்டிருந்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும், பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். இதைப்படித்துக்கொண்டிருந்த அதே வேளையில் என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

   இதுப்போன்ற நிலை நம் இந்தியாவில் ஏற்பட்டால் நாம் எல்லோரும் எங்கே செல்வோம் ? உள்நாட்டு கிளர்ச்சியாக இருக்கட்டும் அல்லது அயல்நாட்டின் படையெடுப்பு போர் என எதுவாகவேனும் இருக்கட்டும். அப்படியொரு நிலை நமக்கு ஏற்பட்டால் நாம் அனைவரும் என்ன செய்வோம் நாம் எல்லோரும் எங்குதான் செல்வோம் ?

   நேபாளம், பூட்டான், வங்காளதேசம், பாக்கிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சீனா, இலங்கை இப்படி நம்மை சுற்றியிருக்கும் எந்த நாட்டிற்கு செல்வோம் ? எங்கே சென்றாலும் அங்கு நாம் அகதிகள்தான். ஊரைவிட்டு உறவைவிட்டு வீடு வாசலைவிட்டு பிறந்த மண்ணைவிட்டு இப்படி எல்லாவற்றையும் விட்டு ஒருவாய் உணவுக்காக அடித்துக்கொண்டும் என்றாவது விடிவுகாலம் வரும் நம் நாட்டிற்கு பழையபடி திரும்பிடலாம் என்ற கனவோடும் நாமும் அங்கு அகதிகளாய் வாழ வேண்டியதுதான். இதுப்போன்ற ஒரு நிலையை மனதளவில் நினைத்துப்பார்க்கும்போதே மனம் துடித்தது. அப்படி இருக்கையில் இன்று நிஜமாகவே அகதிகளாய் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அனைத்து நாட்டு மக்களின் நிலையை எண்ணி கண்கள் கலங்குகின்றன. அண்டை நாடான இலங்கையில் நம் தமிழ் மக்கள் படும் துயரமும் அவர்கள் இங்கே அகதிகளாய் வருவதும் சில நாடுகளுக்கு அகதிகளாய் சென்று வாழ்வதும்தான் பலருக்கு இங்கே தெரியும். ஆனால் அதையும்விட பல மடங்கு அகதிகள் இந்த உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் நிச்சயம் சொல்லமுடியா துயரங்களை அனுபவித்துதான் வருகிறார்கள். 

      அன்பை பாராட்டுவோம். அனைவரிடத்தும் அன்பை கொடுத்து அன்பை பெறுவோம். போர் என்று வரிந்துக்கட்டி சண்டைப்போட்டாலும் சரி, நாம் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் சரி. போர் என்று வந்துவிட்டால் இரு பக்கங்களுமே சேதத்தை அனுபவிக்கும். இயன்றவரை போருக்கு ஆயத்தமாவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டாலே போரை தவிர்க்கலாம். அமைதியான வாழ்க்கையை வாழலாம்.

* தினேஷ்மாயா *


0 Comments: