என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது...

Tuesday, September 28, 2010




என் மனதில் இருப்பதை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். மிட நீண்ட நாட்களுக்குப்பிறகு... 

எனக்கு தெரிந்து என் வாழ்நாளில் நான் அதிகம் சென்றுவந்த கோயில் மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில். 

எனக்கு மிகவும் பிடித்த கோயில்கள் என்றால், முருகனின் அறுபடைவீடு கோயில்கள், என் ஊரில் இருக்கும் முருகன் மற்றும் சிவன், அம்மன் கோயில். மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அவள் ஊரில் இருக்கும் சிவன் கோயில். என்னவோ தெரியல எனக்கும் மயிலைக்கும் ( மைலாப்பூர் ) ஒரு ஜென்ம தொடர்பு இருப்பது போன்ற உணர்வு எனக்கு. அதனால்தான் என் ஈசன் என்னை வாரத்தில் முறைந்தது ஒருமுறையாவது என்னை தன் ஆலயத்துக்கு அழைத்து விடுகிறான். நான் சென்னையில் இருக்கும்போது நிச்சயம் ஒருநாள் மயிலை கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குவேன். வடபழனி முருகன் கோவிலுக்கும் அடிக்கடி செல்வேன். 

என் நீண்ட நாள் கனவு என்னவென்றால், என் மாயாவை நான் முதல்முறையாக பார்க்க நேர்ந்தால் அது மயிலையில் தான் இருக்க வேண்டும் என்று. அல்லது நானும் அவளும் ஒருமுறையாவது மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு வந்து ஒன்றாக வணங்க வேண்டும் என்பதுதான் என் மிக நீண்ட நாள் கனவாக இருந்துவந்தது. என் கனவு ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிறைவேறியது. நான் கோயிலுக்கு கிளம்பிலாம் என்றிருந்தேன். அவளுக்கு எதேச்சையாக போன் செய்தேன். சும்மா நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அவள் தம்பிக்கு மதுரையில் இருக்கும் ஒரு பெரிய கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது என்றாள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கே ட்ரீட் என்று கேட்டேன். அவள் என்னிடம் கேட்டாள். ( அப்புறம் இது எங்களுக்குள் ஒரு பெரிய சண்டையையே ஏற்படுத்திவிட்டது. அந்த கதையை அப்புறம் என் படத்தில் பார்த்துக்கோங்க.. )
என்னவள், அவள் அம்மா, தம்பி அனைவரும் கோயிலுக்கு செல்வதாக என்னிடம் சொன்னாள். எங்கே எந்த கோயிலுக்கு சொன்னா நானும் வருவேனே என்று அவலிடம் கேட்டேன். மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டு இருக்கோம் என்றாள். 
           என் நீண்ட நாள் கனவு நனவாகப்போவதை எண்ணி என் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி..
           சரி கோயிலில் பார்க்கலாம், ஆனா கோயிலில் உன்னுடன் பேசமாட்டேன் உன்னுடன் தான் உன் அம்மா இருப்பாங்களே என்றேன்.இருந்தாலும் பரவாயில்லை நீ பேசனும், இல்லனா அவ்ளோதான் என்றாள் அவள் வழக்கம்போல் கொஞ்சம் கோவமாய்..
           எனக்குத் தெரியும். அவள் அம்மா சீக்கிரம் கிளம்பினாலும், என்னவள் சீக்கிரம் கிளம்பமாட்டாள். அவள் செய்யும் லேட் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதைவிட அவள் அதற்கு சொல்லும் காரணங்கள் அவளைப் போலவே அழகானவை. ஒருவழியாக அவள் கோயிலுக்கு வரும் முன்னரே நான் கோயிலுக்கு வந்துவிட்டேன்.
          அவள் வரும்வரை காத்திருக்க விருப்பமில்லை. காரணம், நான் அவளை பார்க்க வரவில்லை. கோவிலுக்கு வருவது என் முதல் எண்ணம் அவளும் வருகிறாள் என்று தெரிந்ததும் இன்னும் என் எண்ணம் உறுதியானது. நான் ஒவ்வொரு கடவுளாக வணங்கிக் கொண்டு அம்மன் சன்னதி செல்ல நின்றிருந்தேன். ஒரு பெரிய வரிசை இருந்தது. 
         "Wru" என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். ப்ச்.. எதுவும் பதில் வரவில்லை. சரி அவள் வரும் வரை என்ன செய்யலாம் என்று யோசித்து, நவக்கிரகத்தை சுற்றி முடித்தேன். நான் நவக்கிரகத்தை நான்காவது முறை சுற்றும்போது என்னவள், அவள் அம்மா , தம்பி மூவரும் கோயிலினுள் வந்தனர். எப்படியும் விநாயகர், அண்ணாமலையார், முருகனை வழிப்பட்டுவிட்டு அம்மன் சன்னதிக்கு வர நேரமாகும் என்பதால் நான் கொஞ்சம் மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தேன். 9 சுற்று முடித்துவிட்டு, அம்மன் சன்னதிக்கு சென்றேன். அப்போது வரிசை இருக்கத்தான் செய்தது. ஆனால் என்ன இம்முறை என்னவள் வரிசையின் அருகே வந்துவிட்டாள். அவள் அம்மாவிற்கு என்னை நன்றாக தெரியும். என்னப்பா எப்படி இருக்க. என்ன கோயிலுக்கு திடீர்னு வந்து இருக்கனு கேட்டாங்க. என்னம்மா நல்லா இருக்கீங்களா, நான் கோயிலுக்கு வாராவாரம் வருவேன்னு சொன்னேன். என்ன வீசேஷம் எல்லொரும் வந்துஇருக்கீங்கனு கேட்டேன். அப்பா வரலயா என்றேன். வாசு மதுரை --- காலேஜ்ல ECE சேர்ந்து இருக்கான் அதான் காலேஜ் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிட்டு போகலாம்னு இவங்க அக்காதான் சொன்னானு என்னவளை கைக்காட்டினாங்க. அப்பா கொஞ்சம் வேலையா வெளியே போயிருக்காரு அதான் அவர் வரலைனு சொன்னாங்க.
             நான் வரிசையில் நின்றேன், என் பின்னர் அவன் தம்பி அப்புறம் என்னவள் அப்புறம் அவள் அம்மா நின்னாங்க. என் முன் ஒரு அழகான கைக்குழந்தை இருந்தது. பார்க்கறதுக்கு ரொம்ப Cute-ஆ ரொம்ப அழகா இருந்தது. குழந்தை என்னைப் பார்த்தும் அழகாய் சிரித்தது. என்னவளும் குழந்தையை பார்த்து, ரொம்ப அழகா இருக்கு இல்ல என்று அவள் தம்பியிடம் சொல்லி குழந்தையின் கன்னத்தை கிள்ளினாள். அது என்னைப் பார்த்து சிரித்ததை அவள் தன்னைத்தான் பார்த்டு சிரித்தது என்று அவள் தம்பியிடம் சொல்லி மகிழ்ந்தாள். நான் அவளுக்கு கிண்டலாக SMS செய்தேன். உன்னை பார்த்து குழந்தை பயந்துட்டு இருக்கு இப்பபோய் காமெடி செஞ்சுட்டு இருக்கனு. உடனே அவ கோவிச்சுகிட்டா. அடடா.. இந்த பெண்களுக்கு அப்படி எங்க இருந்துதான் கோவம் வருதே தெரியலப்பா..
               அப்புறம் அம்மனையும் ஈசனையும் வழிப்பாடு செய்துட்டு வந்தோம். என் ஈசனிடம் நான் பெரிதும் வேண்டிக்கல. நான் ஏற்கனவே உன்னிடம் சொன்ன மாதிரி நானும் என்னவளும் ஒன்றாய் வந்து உன்னை வணங்கியிருக்கோம் இங்கே இனைந்ததற்கு நன்றி அப்புறம் ... இன்னும் நிறையே வேண்டிக்கிட்டேன். அதையெல்லாம் வேண்டுதல் நிறைவேறியதும்
எங்கள் விவாகத்திற்குப் பிறகு சொல்கிறேன்.
               அப்புறம் புன்னைவனநாதரை தரிசிக்க எல்லோரும் ஒன்றாய் சென்றோம். எனக்கு எப்போது வேண்டுதல்கள் அதிகம் இல்லை. என்னவளுக்காக முதலில் வேண்டிப்பேன், எனக்காக அடுத்து, அப்புறம் எங்கள் காதலுக்காக, அப்புறம் உலகம் நல்லா இருக்கனும் எல்லாரும் நல்லா இருக்கனும்னு வேண்டிப்பேன். அதிகமா ஒரு நிமிஷம்தான் சொல்லப்போனா அதுக்குள்ளேயே என் வேண்டுதல்கள் முடிஞ்சிடும். இறைவன் என் மனதிலேயே இருப்பதால், அவனிடம் பெரிதும் வேண்டுதல்கள் எதையும் வைப்பதில்லை. அப்படி ஏதாச்சும் பெரிய வேண்டுதல்னா கோயிலுக்கு சென்று அவனை நேரில் பார்த்து ஆசிப்பெற்று வருவேன். 
               சரி மேட்டருக்கு வரேன். புன்னைவனநாதர் சன்னதியில் நான் வணங்கிவிட்டு, பக்கத்தில் கல்வெட்டில் இருந்த அபிராமி அந்தாதியை படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக நான் இதை இங்கே வரும் ஒவ்வொருமுறையும் படிப்பேன்.

“இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்.

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்
பேராத காதல் பிறந்து....  ”


என்று எழுதியிருந்தது. அவள் அம்மா கோயிலை வலம் வர நடந்தார். அப்போது நான் அவளை அழைத்து இதைப் படிக்குமாறு சொன்னேன். அதாவது மேலே இருக்கும் அனைத்துப் பாடல்களும் நல்ல கருத்துள்ளவை. அத்தோடு கடைசிப் பாடலின் கடைசி இரண்டு சொற்களையும் படிக்க சொன்னேன்.
           அவள் மற்றவற்றையெல்லாம் படிக்காமல், கடைசிப் பாடலை மட்டும் படித்துவிட்டு, நல்லா புரிஞ்சுச்சு.. Last Stanze நல்லாவே புரிஞ்சதுனு சொன்னா. இது போதும் முருகா. முதல் முதலில் அவளிடம் சொல்லி இருக்கேன் அதுவும் உன் சன்னிதியில் என்று மனதில் நிம்மதி கொண்டேன்.
          அப்புறம் நானும் அவள் தம்பியும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிவந்து நாங்கள் நால்வரும் சாப்பிட்டோம். கிளம்பும் போது அவள் அம்மாவும் தம்பியும் கை கழுவ சென்றார்கள். அப்போது நான் அவளிடம் முருகன் சன்னிதியில் எனக்கு தந்த மல்லிப்பூவை தந்தேன். எனக்கும் முருகரை பிடிக்கும் அவளுக்கும் முருகரைப் பிடிக்கும். எங்கள் இருவரையும் முருகருக்கு பிடிக்கும். அவர் சன்னிதியில் எனக்கு முருகன் தந்த பூவை அவளிடம் தந்தேன். முருகன் அருளும் என் அன்பும் கலந்த அந்த மல்லிப்பூ கொஞ்ச நேரமாவது அவள் கூந்தலில் இருக்கட்டுமே என்று. 
          என்னவோ தெரியவில்லை நான் அவளுக்கு பூவை தந்ததும், அவள் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டதும் மனதிற்குள் கோடி வண்ணத்துப்பூச்சிகள் பறந்து என்னையும் காற்றில் பறக்க செய்தது.
          பின்னர் அவள் அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவள் தம்பிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அவளிடம் விடைப்பெற்று இறைவனை இன்னொருமுறை வணங்கிவிட்டு அவள் பாதம் வைத்து நடந்து சென்ற இடத்திலேயே நானும் என் பாதங்களை பதித்து நடந்து சென்றேன்... மனதில் இருக்கும் காதலை இறைவன் சன்னிதியில் அவளிடம் தெரியபடுத்திய மகிழ்ச்சியோடும் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்ட பேரானந்தத்தோடும் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்....

நன்றி : இதுவரை என் கற்பனை கதையை படித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி...................................

தினேஷ்மாயா

0 Comments: