தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் என்னும் நாவலில் என்னை பாதித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.
இசக்கிமுத்து நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கையில், ஓவர்சீயரிடம் பேசி தன் வேலையை தன் மகனான சுடலைமுத்துவிற்கு வாங்கிக் கொடுக்கிறார். மறுநாள் வாளியையும், மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்லும் சுடலைமுத்து, தன்மானம் உள்ளவனாக நடந்துக்கொள்கிறான். வேலையையும் விரைவிலேயே நன்கு கற்று தேர்கிறான். ஆனால் அவன் சுயமரியாதை தன் தந்தையை பட்டினியால் கொன்றுவிடுகிறது. இறந்துப்போன இசக்கியை புதைக்கக்கூட தோட்டிகளால் முடியவில்லை. அதற்கும் காசு தேவைப்படுகிறது. காசு இல்லாத காரணத்தினால் ஒரு ஆலமரத்தின் அடியில் குழித்தோண்டி புதைக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரை புதைத்தப்பின்னர் அவரை சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை முடிந்தது. ஆனால் அந்த நிம்மதிக்கூட ஒரு தோட்டிக்கு கிடையாது. தோட்டிகள் இசக்கியை புத்தைத்த இடத்தில் நாய்கள் சண்டையிட்டு இசக்கியின் பிணத்தை தோண்டி வெளியில் கொணர்ந்து போட்டிருக்கிறது. இந்த காட்சியை ஆரிசியர் விவரிக்கும் அந்த தருணம் நடு நடுங்கிப்போனேன். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பும் அதனால் எழுந்த ஏற்றத்தாழ்வும் ஒருவனின் மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சுடலைமுத்துவின் தன்மானம் என்னை அதிகம் ஈர்த்தது. தன் மகன் ஒரு தோட்டியாகக் கூடாது என்பதில் அவன் தீர்க்கமாக இருந்தான். அவனை பள்ளியில் சேர்க்க படாதபாடு பட்டான். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தோட்டியின் மகன் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். ஆனால் என்ன வருத்தமென்றால், அந்த பிள்ளையின் தகப்பனும் தாயும் வேறு ஒருவர் என்று சொல்லியே பள்ளியில் அவனை அனுமதித்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஒரு தோட்டியின் மகன் படிக்க நேர்ந்தாலும் அவன் தன் தாய் தந்தையரின் பெயரை அரசு பதிவேட்டில் ஏற்றாமல், வேறு ஒருவரின் மகனாகவே பள்ளியில் சேர முடியும். ச்சீ. என்னமாதிரியான சமூகம் !! தோட்டியின் மகன் படிக்க வந்துவிட்டால், அந்த வேலையை அவன் செய்ய மாட்டான். அவர்களுக்கு என்றைக்குமே அடிமைகள் தேவைப்படிகிறார்கள்.
எல்லோரும் தோட்டியை அறுவறுப்பாகவே பார்த்தனர். அவன் மீது துர்நாற்றம் வீசுவதாக அவனை எல்லோரும் தள்ளியே வைத்தனர். அப்போது சுடலை நினைக்கிறான், இவ்வளவு நாற்றமும் இந்த மனிதர்களின் உடம்பில்தான் மறைந்துள்ளது, அவர்களே இந்த நாற்றம் அனைத்திற்கும் காரணம் என்பது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? அடடா. இப்படி தோட்டியை விலக்கி வைக்க நினைக்கும் அனைத்து மனிதனையும் செருப்பால் அடிக்கும்படியான கேள்வி இது.
தோட்டிகளுக்காக சங்கம் அமைக்க வேண்டும் என்று சுடலை விரும்புகிறான். அது மிக துணிச்சலான முடிவு. ஒற்றுமையான போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும் என்பதன் வெளிப்பாடாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
சுடலைக்கும் வள்ளிக்குமான காதலை அழகாக விவரித்திருப்பார்.
சுந்தரத்தின் மனைவி அம்முவை வைசூரி நோய்க்காக மருத்துவமனைக்கு வலுகட்டாயமாக அழைத்து (அ) இழுத்துச் செல்லும் அந்த காட்சி கண்களின் கண்ணீரையும் மனதில் இரணத்தையும் கொணரும். அதன் பின்னர் அவன் குழந்தைகளின் நிலையை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் கண்களில் குருதியை அறுவடை செய்யும்.
சங்கம் அமைக்கும் முடிவில் இருந்து பிச்சாண்டியை பின்வாங்க வைக்க அவன் மீது பொய்யான திருட்டுப் பட்டம் கட்டுவதும் அதற்கு சுடலையும் துணை நிற்பதும், பணம் என்கிற வேட்டையில் இருக்கும் மனிதன் எப்படி மனிதாபிமானத்தை இழந்து மிருகமாக பிறப்பெடுக்கிறான் என்பதை சொல்கிறது.
தன் குழந்தைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் அனைத்து சுகங்களையும் துறந்து கடினமாக உழைக்கும் சுடலையின் எண்ணம் என்னை அதிகம் ஈர்த்தது. தாம்தான் தோட்டியாக இருக்கிறோம், தம் குழந்தை நிச்சயமாக தோட்டியாக மாறக்கூடாது என்பதில் விடாப்ப்டியாக இருக்கிறான். கல்வியால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மனிதன் ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.
சுடலை தன் மகனுக்கு மோகன் என்று பெயரிடுகிறான். ஆனால் அந்த பெயர் ஒரு தோட்டியின் மகனுக்கு பொறுந்தவில்லை என்பது ஊரார் நினைப்பு. பாருங்களேன். இன்னாருக்கு இன்னப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தையே போட்டுள்ளது.
வைசூரியும் காலராவும் எப்படி தோட்டிகளை மட்டுமே குறிவைத்துக் கொல்லுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. சரியான உணவும் போதிய ஊட்டசத்தும் இல்லாமல் வாழும் வாழ்க்கை அவர்களுடையது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளுக்குமே பிடித்தமான உணவென்றால் அது பட்டினிதான். இப்படி வாழும் ஒருவனை அதுவும் பிறரின் மலத்தை சுத்தம் செய்யும் ஒருவனை இதுமாதிரியான தொற்று வியாதிகள் திண்பது ஆச்சரியமில்லையே.
முதலில் பணம் பணம் என்று மட்டுமே ஓடிய சுடலை, சுடுகாட்டின் காவலாளியாக பணி மாற்றம் செய்துக்கொண்டப் பிறகு, மயானத்தில் தினம் தினம் குவியும் பிணங்களைப் பார்த்து, வாழ்க்கையின் அருமையை உணர்கிறான். ஆனால், அவன் உணர்ந்திருக்கும் அந்த நேரத்தில் மண்ணுக்குள் சென்றிருந்தான்.
அநியாயமாக வள்ளி இறந்துகிடக்கும் காட்சி மனதை உலுக்குகிறது. சுடலைக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து அவள் செய்த தியாகங்கள் சுடலை செய்த தியாகங்களைவிடவும் பெரியது என்பேன் நான்.
எவருடனும் பழக விடாமல், மோகனை பொத்தி பொத்தி வளர்க்கும் சுடலையின் எண்ணத்தில் தவறில்லை என்றாலும், வெளி உலகமே தெரியாமல் வளரும் மோகம் மீது கொஞ்சம் பரிகாசம் ஏற்படவே செய்கிறது.
முனிசிபல் சேர்மேன் நிச்சயம் ஏமாற்றிவிடுவார் என்றே ஆரம்பத்திலிருந்தே நான் பயந்திருந்தேன். ஆனால், அவர் ஏமாற்றினாரா அல்லது அவரிடம் இருக்கும் பணத்தை சுடலை கேட்கும்போதே வேண்டுமென்றே இல்லையென்றாரா என்று ஆராய்ந்தால், அதற்கான விடை மோகன் அவர் வீட்டை கொழுத்தியபோது எழுந்த தீயின் அனலில் புரிந்தது.
சுடலை எப்படி தோட்டிகளுக்கென்று ஒரு சங்கம் வேண்டுமென்று நினைத்தானோ, பிச்சாண்டியை எந்த சங்கத்தின் காரணத்தால் திருடன் என பட்டம் சூட்டினானோ, அவன் மகனான மோகனும் சங்கத்தின் தலைவனாகி துப்பாக்கியின் தோட்டாக்களை உண்டு அந்த குழியில் செம்மாலையுடன் ஓய்வெடுக்கிறான்.
பூக்களின் வாசனையையும் தோட்டிகளின் மூக்கிற்கு நுகரத் தெரியும், இனிமையான சுவைகளையும் தோட்டியின் நாவிற்கு சுவைக்கத் தெரியும். அவர்களும் மனிதர்கள்தான் என்று சுடலையும் வள்ளியும் பட்டணத்தில் இருக்கும் அந்த பத்து நாட்களில் உணர்கின்றனர். அவர்களும்தாம் மனிதர்கள் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்.
இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1947. அப்போது இதுமாதிரியான நிலைதான் இருந்திருக்கிறது என்று நினைத்தாலே மனம் வருந்துகிறது. மனிதர்கள் எவ்வளவு ஒடுக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நினைத்தாலே மனம் கனக்கிறது.
* தினேஷ்மாயா *