இங்கிதம் கிலோ எவ்வளவு ?

Friday, August 20, 2021

என் பயணத்தில், எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக எதையோ தன் கைப்பேசியில் பார்த்துக்கொண்டு வருகிறார். 

அது அவர் உரிமை.

ஆனால், அவருக்கு அருகில் இருந்து எந்த ஒலி தொந்தரவுமின்றி புத்தகம் படிக்க எனக்கும் அதே சம அளவு உரிமை உண்டு என்பதை அவர் அறிவாரா ?

இப்போதெல்லாம் பயண நேரங்களில் புத்தகம் படிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறேன். முன்பெல்லாம், பயணத்தில் படம் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும் இருந்தது. சில மாதங்களாக புத்தகம் படிக்க துவங்கியிருக்கிறேன். இதற்கு முன்னர் பாடல் கேட்கும்போதோ, படம் பார்க்கும்போதோ நான் பிறர் எழுப்பும் தேவையற்ற சப்தங்கள் என்னை பாதித்ததில்லை. ஏனெனில் நான் என் காதில் தனியாக ஒரு இயந்திரத்தை மாட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஆனால், இப்போது புத்தகம் படிக்க ஆரம்பித்ததுமேதான் தெரிகிறது, பிறர் எப்படி பொதுவெளியில் இங்கிதம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.

நேற்று இரயிலில் ஏறியவுடன், ஒரு இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு அருகில் இருப்பவர் நான் ஏறும் முன்னரே அந்த இருக்கையில் இருந்திருக்கிறார். நான் வரும்போது கூட தன் செல்பேசியில் சப்தமாக Youtube Shorts பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர் சப்தத்தை குறைக்கவில்லை. சரி நான் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை. பிறகு நான் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்தும் அவர் தன் செல்பேசியில் அதே சப்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவர் குறைப்பதாக தெரியவில்லை. நான் சொன்னேன், சார் கொஞ்சம் Sound குறைச்சுக்குறீங்களா please. அவருக்கு அப்போதுதான் உணர்ந்திருக்கிறது போலும். உடனே தன் செல்பேசியை அணைத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.

என்ன செய்ய. என் உரிமையை கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது எங்கேயும் எப்போதும் !

* தினேஷ்மாயா *

0 Comments: