இசையும் நானும்..

Friday, June 30, 2017




          எனக்கும் இசைக்குமான ஒரு பந்தம் பல ஜென்ம தொடர்புபோல. இசை என்னுயிர் போல. என்னிடமிருந்து பிரித்தால் நான் ஒன்றுமில்லை. இசை எங்கும் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் நான். அமைதியான ஓர் இடத்தில் வீசும் காற்றும் ஒருவகை சங்கீதம்தான். அமைதியும் கூட இசையே. ஒலியதிர்வுகள்தாம் இசை என்கிறது அறிவியல். அதிர்வுகள் இல்லாமலும் இசையை சிலரால் மட்டுமே உணர முடியும். நான் பொதுவாக தியானம் செய்கையில், மொட்டைமாடியில் காற்று வீசும் திசையை கண்கள் மூடி கவனிப்பேன். காற்று வீசும் திசை மாறிக்கொண்டே இருக்கும். அது எழுப்பும் ஓசையும் அருமையாக இருக்கும். இன்னும் ஆழமாக தியானத்தில் மூழ்கினால் என் இதயத்துடிப்பை கேட்பேன். அதுவும் ஒரு இசை என்பதை உணர்ந்துள்ளேன். 

       எவரும் எனக்கு துணையாய் இல்லாதபோது இசை எனக்கு எல்லாமுமாய் இருந்துள்ளது, இருக்கிறது, இனியும் இருக்கும். பக்தி, மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், காதல், காமம், ஏமாற்றம், தோல்வி, வெற்றி, தியானம், தூக்கம், அமைதி, ஆர்ப்பாட்டம், குதூகலம், திருவிழா, சுப வைபவம், பயணம், ஜனனம், மரணம் இப்படி என் வாழ்வில் ஒவ்வொரு நொடியில் இசை கலந்துள்ளது. 

       என் பலநாள் கனவு - வயலின் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. வீணை, புல்லாங்குழல் இவையும் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நேரம் இல்லையென்றாலும் வாழ்நாளில் நிச்சயம் இவைகளை வாசிக்க நிச்சயம் கற்றுக்கொள்வேன். 

      இசை என்றால் தமிழ் மொழி பாடல்கள் என்றல்ல. அனைத்து மொழிகளிந் பாடல்களும் கேட்பேன். அனைத்து விதமான பாடல்களையும் கேட்பேன். ஆனால், மனதை வருடும் பாடல்களை மட்டுமே திரும்ப திரும்ப கேட்பேன். 

        மொழியில்லா வரிகளில்லா இசையை அதிகம் இரசிப்பேன். பீத்தோவன் தொடங்கி யானி, நம் இசைஞானி என அனைவரின் சின்பனியையும் கேட்டிருக்கிறேன். பழங்கால மக்கள் பயன்படுத்திய இசைகருவிகளின் இசையை கேட்பேன். Bull Roarer, Armenian Duduk, Pan Pipes இப்படி ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய கருவிகளின் இசையை கேட்கவும் பிடிக்கும். 

            ஒரு ஞாயிறன்று, இணையம் வந்தேன். உலகத்தில் இருக்கும் இசைக்கருவிகள் என்னென்ன என்று தேடினேன். அவைகளின் புகைப்படத்தை சேகரித்து வைத்தேன்.சில வித்தியாசமான கருவிகளின் இசையை தேடி பதிவிறக்கம் செய்தேன். குறிப்பாக பழங்குடியின மக்களின் இசைக்கருவிகள் சற்று வித்தியாசமாக இருக்கும் அதன் ஓசையும் இனிமையாகவும் இருக்கும். 

        ராகம், தாளம் இவை மட்டுமே இசை என்னும் ஒரு வட்டத்துள் சிக்காமல் அனைத்து இசையையும் கேட்கிறேன். புதுப்புது இடங்களுக்கு செல்ல நான் அடிக நாட்டம் கொள்வேன், அதுபோல புதுப்புது இசை கேட்கவும் அதேயளவு நாட்டமும் இருக்கிறது.

       இசையில் இறைவனை என்னால் காண முடிகிறது. இசையுணர்வு என்னை இறையுணர்வுக்கு இட்டு செல்கிறது. இந்து மதத்தில் இறைவன் என்பவன் இசைப்பிரியன் தானே.. நானும் அவனைப்போல இசைக்காதலனாக இருந்துவிட்டு போகிறேனெ !

* தினேஷ்மாயா *

0 Comments: