சூப்பரா சொதப்பிட்ட தினேஷ் !

Saturday, April 15, 2017



நேற்று நான் சொன்ன மாதிரி, நிச்சயமாக நேற்று என் வாழ்நாளில் முக்கியமான நாள் தான். மறக்கவும் முடியாத நாளும் கூட. என்னை நினைத்து நான் சிரித்துக்கொள்வதா, இல்லை நொந்துக்கொள்வதா என்றே தெரியவில்லை. அப்படி என்ன ஆச்சு என்றுதானே கேட்க போறீங்க. நானே சொல்றேன் இருங்க.

நேற்று நான், அம்மா, அப்பா, என்னோட தம்பி நாங்கள் நால்வரும் இங்கே கோவையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றோம். புத்தாண்டு என்பதாலும், அப்புறம் வீட்டில் பார்த்த பெண் ஒருவரை நேரில் சென்று பார்க்கலாம் என்றும் சென்றோம். இதுவரை புகைப்படத்தில் மட்டும்தானே இரு குடும்பமும் பார்த்துக்கொண்டது, சரி அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்னர், ஒருமுறை நேரில் சென்று பார்த்துடலாம் என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் வந்தனர். அவர்கள் வீட்டிற்கே வந்து பார்க்கலாம் என்று அவர்கள் அழைத்தார்கள். ஆனால், நான்தான் அப்பாவிடம் அவர்களை கோவிலுக்கு வரசொல்லுங்கள், கோவிலில் பார்ப்போம் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் இறைவன் இருக்கிறான். அவன் சன்னதியிலேயே இந்த நிகழ்வும் நடக்கட்டுமே என்றுதான் அப்படி சொன்னேன். மேலும், எனக்கு வரப்போகும் துணையை முதன்முதலில் கோவிலில்தான் பார்க்க வேண்டும் என்கிற கனவும் ஆசையும் எனக்கு உண்டு. சரி ஒருவழியா இரு குடும்பமும் கோவில் வந்து சேர்ந்தாச்சு.

ம். ஒரு பத்து நிமிஷம் கோவிலில் இருந்திருப்போம். என் அப்பா தான் பெண்ணிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தார். அவர்தான் ஏதேதோ கேள்விகள் எல்லாம் கேட்டுக்கொண்டு எதை எதையோ பேசிக்கொண்டிருந்தார். நான் எதுவும் பேசவில்லை எனக்கு பேசுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. அட அதுக்கூட பரவாயில்லை. அங்கே இருந்த பத்து நிமிஷத்தில் நான் பெண்ணை மொத்தமாக ஒரு 10 நொடிகள் கூட பார்த்திருக்க மாட்டேன். சொல்லப்போனால் பெண்ணின் முகம் என் மனதில் பதியக்கூட இல்லை. அதெப்படி பதியும் சொல்லுங்க, ஒவ்வொரு நொடியாக பத்து முறை பார்த்திருப்பேன் அவ்ளோதான். என் தம்பி என்னருகில்தான் அமர்ந்தான், அவனிடம் சொல்லிட்டேன். டேய் தம்பி, நான் பெண்ணை சரியா பார்க்கலை, மரியாதையா நீ ஒழுங்கா பாத்துக்கோ. நீதான் சொல்லனும்னு. அவன் திட்டினான். போ அண்ணா, அவங்களே தைரியமா உன்னை பார்க்குறாங்க நீ ஏன் பார்க்க பயப்படுறனு. 

ம்.. இது பயமெல்லாம் இல்லை. ஆனா நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க. சுத்தி என் அம்மா அப்பா, அவளுடைய அம்மா அப்பா, அப்புறம் எல்லோரும் சுற்றியிருக்க நான் எப்படி அந்த பெண்ணை பார்க்க முடியும் சொல்லுங்க. ஒரு நொடிக்கு மேல் நான் பெண்ணை பார்க்க வில்லை. இப்படி கிடைத்த பத்து நிமிஷத்தில் ஒவ்வொரு நொடியாக ஒரு பத்துமுறைகூட பார்த்திருக்க மாட்டேன். எனக்கே நல்லா தெரியுது நான் பெண்ணை பார்க்க தயங்குகிறேன் என்று. ஆனாலும் அந்த தயக்கத்தை மீறி என்னால் அவளை பார்க்க முடியவில்லை. ஒரு பத்து அடி தொலைவில் இருக்கும் பெண்ணை சுலபமாக பார்த்துவிடலாம். அதுவே, வெறும் மூன்று அடி தொலைவில் அமர்ந்திருக்கும் அவளை அதுவும் இருவரின் பெற்றோர் சுற்றி அமர்ந்திருக்க எப்படி அவளை நான் பார்ப்பது ? தம்பி சொன்னான், அவங்களே தைரியமா உன்னை பார்த்தாங்க என்று. எது எப்படியோ நான் பார்க்காவிட்டாலும் அவள் என்னை பார்த்திருக்கிறாள். இப்போதைக்கு அதுபோதும். நேற்று கோவிலில் சென்று பார்த்தது ஒரு சம்பிரதாயத்துக்காகவே. 

ஏம்பா... ஒத்துக்கறேன் பா. இந்த காலத்துல பெண்கள் எல்லாம் தைரியமாகத்தான் இருக்காங்க. இந்த பசங்கதான் பாவம் பாருங்க. மத்தவங்க எப்படியோ நான் ரொம்பவே பாவம்தான் போங்க. நேற்று இரவு உறங்கும் முன் கண்ணை மூடி அவள் முகத்தை நினைவுகூற முயன்று முயன்று தோற்றுப்போனேன். ஏன்டா இவ்ளோ அப்பாவியா இருக்கனு உள்மனசு அசிங்கமா என்ன திட்டுனது என் காது வழியே எனக்கு கேட்டுச்சுனா பாத்துக்கோங்க. ஆனால், இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னனா, நான் அவளை சரியாக பார்க்கவில்லை. இது என் கூச்சத்தாலும், தயக்கத்தாலும் என்பது எனக்கும் என் தம்பிக்கு, அம்மாவிற்கும் தெரியும். ஆனால், இதை அவளும் அவள் வீட்டு ஆட்களும் எப்படி புரிந்துக்கொண்டார்களோ என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு விருப்பமில்லை என்கிறமாதிரி நினைத்திருப்பார்களோ என்று என் தம்பி ஒரு கூற்றை கூறினான். சரி இதற்கெல்லாம் எப்படி நான் விளக்கம் தருவது இப்போது?

எல்லாம் என் அப்பன் முருகன் துணையிருப்பான். நடக்கப்போவதை அவன் பார்த்துக்கொள்வான். 

* தினேஷ்மாயா *

0 Comments: