உண்மையான உலகம்

Tuesday, April 04, 2017



உண்மையான உலகம் சமூக வலைத்தளங்களுக்கு வெளியேதான் இருக்கிறது என்பதை மக்கள் எப்போது உணர்வார்கள் ?

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் WhatsApp பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் Facebook பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன். Twitter மட்டும் பயன்படுத்திவருகிறேன். அதிலிருந்தும் விரைவில் வெளியேற முயல்வேன். இந்த உலகம் எவ்வளவு அருமையானது, ஆச்சரியமானது, இனிமையானது. இந்த உலகை இரசிக்கவே இந்த ஒரு ஆயுள் போதாது. அதை அனுபவிக்காமல் வெறுமனே சமூகவலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்க நான் விரும்பவில்லை. அதிகம் தேவையற்ற விடயங்கள்தான் அதில் உலாவி வருகின்றன. நம் நேரத்தை விரயமாக்கும் விடயங்கள் அதில் அதிகம். ஒருநாள் FB பயன்படுத்தாமல் இருப்போம் என்று முடிவுசெய்து, அதை பின்பற்றினேன். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது, அட.. என் நாளில் இவ்வளவு நேரங்கள் எனக்கு கிடைக்கிறதா ? என்று. அதை வீணடித்து வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் சமூகவலைகளில் இருந்து சிக்கிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டேன். இந்த FB, WhatsApp வந்ததிலிருந்து நம் வாழ்க்கைமுறையில் எத்தனை எத்தனை மாற்றங்கள். நெருக்கமான நண்பர்கள் உறவினர்களிடம் கூட, அழைத்து பேசி அவர்களின் குரல்களை கேட்கும் வழக்கம் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரை அழைத்துப்பேசி வாழ்த்து தெரிவித்த காலம் போய், வெறுமனே குறுஞ்செய்திகளாலும், புகைப்பட பகிர்வுகளாலுமே இன்றைய சூழலில் வாழ்த்தும் பழக்கம் வந்துவிட்டது. இதை எவ்வளவு செய்தாலும், அவரை அழைத்துப்பேசி வாழ்த்து சொல்லுவதற்கு ஈடாகுமா? அவர் உள்ளம் நெகிழ்வதை நீங்களும் உணரலாம். ஆனால், அப்படியெல்லாம் இப்போது வெகுசிலரே பின்பற்றுகின்றனர். இதை எல்லாம்விட, வதந்திகள் அதிகம் பரவ இந்த சமூகவலைகள் அதிகம் பயன்படுகின்றன. எதையும் அறிவார்த்தமாக நம்பாமல், அப்படியே கண்மூடித்தனமாக பகிரும் வழக்கம் இங்கே அதிகம் பெருகிவிட்டது. இதை எப்படி மாற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னை முதலில் மாற்றிக்கொள்ள விரும்பினேன். இந்த சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேவந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள் யாருடனும் பேச வேண்டும் என்று தோன்றினால், உடனே அவரை அழைத்துப் பேசிவிடுகிறேன். இயன்றால், அருகில் இருப்பவரை நேரில் சென்று சந்தித்து வருகிறேன். என்னடா இவன், பின்னோக்கி செல்கிறான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இது பின்னோக்கி செல்வதாக தெரியவில்லை. உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை தரும் செயலாகவே கருதுகிறேன். Privacy என்பது இந்த சமூக வலைகளில் எவருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு என் Privacy முக்கியம், அதுபோல பிறரின் Privacy-க்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அதான் இதிலிருந்து வெளியேறுகிறேன். சில பயனுள்ள தகவல்களும் அதில் பகிரப்படுகின்றன. அது என்னை சேராமல் செல்லலாம். அதற்காக வருந்தவில்லை. எந்தெந்த தகவல்கள் எனக்கு தேவையோ, அது எப்படியாவது என்னைவந்து சேர்ந்துவிடும். ஏனென்றால், நான் மட்டும்தான் இந்த சமூகவலைகளில் இல்லை, என்னை சுற்றியிருக்கும் அனைவரும் அதில் சிக்குண்டு இருப்பதால் !

* தினேஷ்மாயா *

0 Comments: