கோவைவாசி !

Friday, March 31, 2017





கோவை !

அட.. பேர் சொல்லும்போதே சிலிர்க்கும் ஊர்.. 

பத்து வருடங்களாக சென்னைவாசியாக இருந்தேன். ஏனோ தெரியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக சென்னை எனக்கு பிடிக்காமல் போனது. சென்னையை விட்டு வெளியேவர ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கையில், என் புது வேலை எனக்கு உதவியாய் இருந்தது. நான் சிறிதும் எதிர்பார்க்காவண்ணம் எனக்கு கோவையில் பணி கிடைத்தது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், என்னைச்சுற்றி சென்னையில் சேர்ந்த நண்பர்கள் பட்டாளம் அனைவருக்கும் வருத்தம். நான் சென்னையைவிட்டு கிளம்புகிறேனே என்று. மாற்றம் ஒன்றே மாறாதது. அதை உணர்ந்தவன் நான் என்பதால், இதுபோன்ற இடமாற்றங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. ஆனந்தமாய் கோவைக்கு வந்து சேர்ந்தேன். வந்து ஒரு வாரம் மட்டுமே கோவையில் இருந்தேன். பின்னர் மூன்று மாதங்கள் சென்னைக்கு நிர்வாக பயிற்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அட என்னடா மீண்டும் சென்னையா என்று நினைத்து ஒருவழியாக சென்னையில் மூன்று மாதங்களை ஓட்டிவிட்டு கோவை வந்து சேர்ந்தேன். இங்கே வந்து சேர்ந்த கையோடு, என்னை ஊட்டிக்கு ஒருமாதம் பணி நிமித்தமாக அனுப்பிவிட்டார்கள். அட, நம்மள கோவையில் இருக்கவே விடமாட்டாங்க போல என நினைத்துக்கொண்டு ஊட்டி கிளம்பினேன். எப்படியோ ஒரு மாசம் அங்கே வேலையை ஓட்டியாச்சு. மார்ச் மாதம் முழுவதும் அங்கே இருந்தேன். குளிர் பரவாயில்லை. ஒருவழியா சமாளிச்சுட்டேன். ஊட்டியில் இருக்கும் பெரிய ஓட்டல் முதல் கையேந்திபவன் வரை எல்லா கடைகளிலும் சாப்பிட்டு பார்த்தேன். ஒரு சில கடைகளில் மட்டுமே உணவு எனக்கு பிடித்த மாதிரி இருந்துச்சு. ஊட்டி – ஒயிட் சாக்லேட் ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு. இப்போகூட எப்போலாம் எனக்கு ஒயிட் சாக்லேட் சாப்பிடனும்னு தோனுதோ அப்போ வண்டிய எடுப்பேன். குன்னூர் வரைக்கும் போவேன், இல்லனா ஊட்டியே போய் ஒயிட் சாக்லேட் வாங்கிவந்துருவேன். அப்புறம் ஊட்டியில் கிடைக்கும் கேரட் பிடிச்சது. அங்க கிடைக்கும் சாக்லேட் டீ பிடிச்சது. சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. இருந்தாலும் என்னை கவர்ந்தது முதுமலைதான். அதுவும் மசினங்குடி வழியா வண்டியில இறங்குறது செம த்ரிலிங்கா இருக்கும். 

சரி.. நம்ம கோவைக்கு வருவோம். நானும் ஒருவழியா ஊட்டியில் என் அலுவல் வேலையெல்லாம் முடிச்சு கீழே இறங்கிட்டேன். நாம கோவைக்கு புதுசு. ஊரப்பத்தி எதுவும் தெரியாது. OLX-ல் வீடு தேடினேன். முதலில் வந்தது வடவள்ளியில இருக்க வீடு. போன் செஞ்சேன். ஓனர் நல்லா பேசினாரு. வண்டி இருந்தாபோதும் கோவையில் எங்கவேணாலும் சீக்கிரம் போயிரலாம்னு சொன்னார். சரினு நானும் அந்த வீட்டுக்கு ஓ.கே. சொல்லி அதில் புதுமனை புகுவிழா நடத்தியாச்சு. இன்னையோடு நான் ரெகுலர் கோவைவாசி ஆகி ஒரு வருஷம் ஆகிருச்சு. கோவையை விட்டு வெளியே போக தோனல. ஊரும் சரி மக்களும் சரி ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு. நிறைய விஷயம் பிடிச்சுருக்கு இங்க. அதுவும் கோவில்கள்தான். மருதமலைக்கு நினைக்கும்போதெல்லாம் கிளம்பிருவேன். கோவையில் அதிகம்போன கோவில் மருதமலைதா. பேரூர் ஒருமுறை போயிருக்கேன். நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐ.ஓ.பி. காலனி சாய்பாபா கோவில் இங்க அடிக்கடி போயிருக்கேன். அப்புறம் புளியகுளம் ஆனந்தாஸ், கோர்ட் எதிரில் இருக்கும் அன்னபூர்னா, People’s Choice, S.P.-Office எதிரில் இருக்கும் Grand Café, வடவள்ளி ஆனந்தாஸ், அப்புறம் எங்க ஏரியால இருக்க கையேந்திபவன். இங்கதான் நிறையமுறை சாப்பிட்டிருக்கேன். ஆனந்தாஸ்-ல அப்புறம் Grand Café இங்க மதியம் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். கோவை வந்துதான் நான் தயிர், மோர் சாப்பிடவே பழகினேன். அசைவ உணவை அடியோடு விட்டாச்சு. முட்டைக்கும் முழுக்கு போட்டாச்சு. சைவ உணவு இவ்வளவு ருசியா இருக்குமா என என்னை வியக்க வைத்தது கோவை மாநகரம். அப்புறம் கோவையின் தட்பவெப்பம் எனக்கு ரொம்பபே செட் ஆகிருச்சு. சென்னையில இருந்த எனக்கு இது 24x7 ஏ.சி.யில இருக்குற மாதிரியே இருக்கு. மதியம் கொஞ்சம் வெயில் வெளுத்துவாங்கினாலும், மாலை, இரவு நேரங்களில் வீசும் குளிர்காற்றும், பனிக்காற்றும் அப்படியே என்னை கடத்தி செல்லும்.. 
கொங்கு தமிழ் ! மலையாளம் மொழியை அதிகம் ரசிச்சேன். அதன் உச்சரிப்பு அதுவும் பெண்கள் மலையாளம் பேசும்போது அவ்வளவு அழகாகவும் இனிமையாகவும் இருக்கும் கேட்க. ஆனால், நம்ம கோவை பாஷை ! கொங்கு தமிழை யார் பேசினாலும் அவ்ளோ இனிமையா இருக்குங்க. அட நம்பமாட்டீங்களா. என்னங்க நீங்க. நேரா கோவைக்கு வாங்க. வந்து கொஞ்சம் பேசி பாருங்க. அப்புறம் நீங்களே புரிஞ்சுக்குவீங்கங்க. 

LIFT .. சென்னையில் பெரும்பாலும் வண்டியில யாரும் லிப்ட் கேட்டு பாத்ததில்லை. எப்பவாச்சும் யாராச்சும் லிப்ட் கேட்பாங்க. ஆனா, இங்க நிறைய பேர் லிப்ட் கேக்குறாங்க. நிறைய பேர் குடுக்குறாங்க. அதை பார்த்து நானும், நிறைய பேருக்கு லிப்ட் குடுத்திட்டுத்தான் இருக்கேன். லிப்ட் குடுக்குறது ரெண்டு வகையில நல்லது. ஒருவருக்கு உதவினமாதிரியும் ஆச்சு, சுற்றுசூழலுக்கும் உதவின மாதிரியும் ஆச்சு. எப்படினு கேக்குறீங்களா ? கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நமக்கு நிச்சயம் யாராச்சும் லிப்ட் குடுப்பாங்க, அதுல ஏறி போயிக்கலாம்னு நினைக்குற பேர் இங்க நிறைய இருக்காங்க. அதுவே யார்டா நமக்கு இந்த ஊர்ல லிப்ட் குடுப்பா, ஒருத்தனும் லிப்ட் கேட்டா வண்டிய நிறுத்த மாட்டேங்குறான், பேசாம எப்படியாச்சும் நாம ஒரு வண்டி வாங்கிறனும்னு ஒவ்வொவரும் நினைச்சா இயற்கை என்னாகும் சொல்லுங்க. அதனாலேயே, யார் லிப்ட் கேட்டாலும், என்னால் முடிஞ்சவரைக்கும் லிப்ட் குடுக்குறேன். இந்த நல்ல பழக்கத்தை கோவை மக்களிடம் இருந்துதான் கத்துகிட்டேன்.


ஒருமுறை கொடிசியா போயிருக்கேன். புத்தக கண்காட்சிக்கு. ஒருமுறை வ.உ.சி.பார்க் – ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக. பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜ், பாரதியார் யூனிவ், கோவை குற்றாலம், வால்பாறை, ஆழியார், பொள்ளாச்சி, ஓதிமலை, அடிக்கடி மருதமலை , இப்படி கொஞ்ச இடங்கள்தான் கோவையில் சுத்தியிருக்கேன். Brookefields மட்டும் ஒருமுறை போனேன். அதுவும் பத்து நிமிஷத்துல வந்துட்டேன். இன்னும் மத்த மால்ஸ் போகனும். கிருத்திகா அப்புறம் கற்பகம் தியேட்டர்ல மொத்தம் நாழு படம் பாத்தேன். பாகுபலி-2 வந்தாதான் ஒரு பெரிய தியேட்டர்ல போயிட்டு பார்க்கலாம்னு இருக்கேன். 

இன்னும் கோவையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய நிறைய இருக்கு. எல்லாம் பொறுமையா பார்ப்போம். மீதி கதையை அப்புறம் பேசறேன்.

இப்படிக்கு ஒருவருடம் முடித்துவிட்ட கோவைவாசி

* தினேஷ்மாயா *

0 Comments: