உணவில் எளிமை:
வாழ்வில் இயன்றவரை எளிமையை கடைப்பிடித்து வருகிறேன். இப்போது உணவிலும் எளிமையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன். முதல்படியாக அசைவ உணவுகளை துறந்துவிட்டேன். முன்னர் மூன்று வேளை உணவு உண்டேன். இப்பொது அதை இரண்டு வேளை என குறைத்துக்கொண்டேன். மீதமுள்ள ஒருவேளை உணவை, சமைக்காத உணவுகளாக எடுத்துக்கொள்கிறேன்.
பெரும்பாலும் இவைதான் என் மதிய உணவு. இவைகளில் சிலவற்றை உண்டு என் மதிய உணவை முடித்துக்கொள்கிறேன்.
1. கேரட்
2. பீட்ரூட்
3. வெள்ளரி
4. வாழைப்பழம்
5. பச்சை வேர்க்கடலை
6. கொத்தமல்லி இலைகள்
7. கருவேப்பிலை இலைகள்
8. ஏதாவது பழம் (கிடைத்தால் மட்டும்)
9. கேழ்வரகு/கம்பங்கூழ்
10. ஊரவைத்த சுண்டல் – பச்சையாக
11. சர்க்கரை/மரவள்ளி கிழங்கு - வேகவைத்தது
12. Dry Fruits
இவற்றில் எது கைவசம் இருக்கிறதோ அதை மதிய உணவாக உட்கொள்வேன். எதுவும் இல்லையா ? இருக்கவே இருக்கிறது தண்ணீர்.
இப்போது இரண்டுவேளை உணவுமுறையை பின்பற்றி வருகிறேன், இன்னும் இதை ஒருவேளை உணவாக மாற்றிக்கொண்டு மீதமுள்ள இரண்டுவேளையும் சமைக்காத பச்சை உணவுகளாக உண்டுவர முயல்கிறேன்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், வெகுசில காலமாக என் சிந்தையில் இருக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்திவிட்டால் அவனுடைய அனைத்தையும் கட்டுப்படுத்திவிடலாம் என்னும் மிகப்பெரிய திட்டத்தை முதலாளித்துவ பெரு நிறுவனங்கள் கையிலெடுத்து மனிதர்களை நோயாளிகள் ஆக்கி வருகின்றன. அந்த வலையில் ஒருபோதும் சிக்காமல் இருக்கவே இந்த திட்டம். எனக்கும் தெரியும் நான் உண்ணும் பச்சை காய்கனிகளிலும் பூச்சுக்கொல்லி இருக்கலாம். ஆனால், இயன்றவரை இயற்கையான உணவுகளை தேடி செல்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி, கோக் போன்ற அந்நிய குளிர்பானங்களை தவிர்த்துவிட்டேன். எப்போதாவது நம் தமிழக தயாரிப்பான போவண்டோ பருகி வந்தேன். இப்போது அதையும் நிறுத்திவிட்டேன். இளநீர், பதநீர், நன்னாரி, மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு போன்ற இயற்கை பானங்களுக்கு மாறிவிட்டேன். பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் எதையும் உண்ணக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். தேநீர், காபி, பிஸ்கட் மற்றும் இதர நொறுக்கு தின்பண்டங்களை தவிர்த்து விட்டேன். தேநீர், காபி பருகுவதை நிறுத்து 17 ஆண்டுகளாகிவிட்டது. 2000-ஆம் ஆண்டு பிறக்கும்போது எதாவது ஒரு பழக்கத்தை விடலாம் என்று முடிவு செய்து தேநீர், காபி பருகுவதை நிறுத்தினேன். தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த நல்ல காரியம் இது. இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்.
Contains Permitted Preservatives, Contains Added Flavors, Contains Permitted Coloring Agents – இந்த வார்த்தைகள் இருக்கும் எந்த பொருட்களையும் வாங்குவதை தவிர்த்திடுவேன். இவை நம் உடலுக்கு நிச்சயம் தீங்கானதே. இயற்கையன்றி செயற்கையாக உருவாக்கப்படும் உணவு அனைத்தும் நம் உடலுக்கு ஏற்றது அல்ல.
இயற்கைதான் என்னை படைத்தது. இயன்றவரை இயற்கையின் கோட்பாட்டிலே என் வாழ்க்கைமுறையை கொண்டு செல்ல விரும்புகிறேன். சிலருக்கு என் செய்கைகள் வேடிக்கையாக தெரியலாம், ஆனால், பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் மருந்து மாத்திரைகள் உண்ணும்போது நான் அதனிடம் இருந்து தள்ளி ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருப்பேன். முடிந்தால் நீங்களும் இந்த வழியில் பயணித்துதான் பாருங்களேன்.
* தினேஷ்மாயா *