புனிதப் பயணம்

Wednesday, December 14, 2016


சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி – என்று சிவபுராணம் சொல்கிறது.
அதற்கேற்ப சிவன் என் சிந்தையுள் வந்து எனக்கு கட்டளையிட்டார். அவர் கட்டளைக்கேற்ப நான் தமிழகத்தில் இருக்கும் பல அற்புதமான கோவில்களை தரிசிக்க பயணப்பட்டேன். என்னுடன் என் நண்பர் ஒருவரும் இணைந்து இப்பேறினை பெற்றார்.
  1. 09.12.2016 அன்று – கோவையிலிருந்து கிளம்பி விருதாச்சலம் வந்து இறங்கினேன். ஆனந்தா லாட்ஜ்-ல் தங்கினேன். 10.12.2016 அதிகாலை விருதாச்சலத்திருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முகாசபரூர் என்னும் ஊருக்கு ஆட்டோவில் சென்றோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எங்கள் புனித பயணத்தை துவங்கினோம். அங்கிருக்கும் லிங்கம், கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட்து. அங்கே கோரக்கர் சித்தரின் சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அவரை தரிசிக்கும் அருள் பெற்றோம். இந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கென ஒரு வாகனம் அமைத்துக்கொண்டு இங்கே வந்தால் அது சிறப்பாக இருக்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும். அன்பர்கள் இங்கே வந்து கோரக்கர் சித்தரின் அருள் பெறலாம்.
  2. முகாசபரூரிலிருந்து விருதாச்சலம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் சென்றோம். சுமார் 1 மணி நேரப்பயணம். கோவில் வாசலிலே பேருந்து நின்றது. இறைவன் அருளால் என் நண்பருக்கு நன்கு தெரிந்த தீட்ஷிதர் அங்கே இருந்தார். அவரை விசாரித்து கண்டுபிடித்தோம். அவர் உதவியுடன் நடராஜரை மிக அருகில் இருந்து தரிசிக்கும் பேறு பெற்றோம். பொதுவாக அனைவரும் சற்று தொலைவில் இருந்து கீழே இருந்துதான் நடராஜரை தரிசிப்பர். எங்களுக்கோ நடராஜர் அருகிலேயே அழைத்து தரிசனம் கொடுத்தார். அன்று அன்பர் ஒருவர் நடராஜருக்கு அன்னப்பாவாடை சாத்தினார். அதாவது, நடராஜரை வந்து வணங்கி வேண்டுதல் நிறைவேறியதும் இங்கே வந்து அரைப்பாவாடை, முழுப்பாவாடை என்று சொல்வர், அன்னப்பாவாடை சாத்தி இறைவனக்கு நன்றி தெரிவித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். இதை செய்ய சுமார் ரூ.75000-80000 ஆகும் என்று அங்கே இருந்த தீட்ஷிதர் தெரிவித்தார். அன்னம் சமைத்து அதை நடராஜருக்கு படையலிட்டு, அதை வேண்டுதல் செய்து அன்னப்பாவாடை சாத்தியவருக்கு தந்துவிட்டு, அன்ன பிரசாத்த்தை நடராஜர் கோவிலில் இருக்கும் 400 தீட்ஷிதர் குடும்பங்களுக்கு கொடுப்பர். 400 பிராமண குடும்பங்களுக்கு அன்னமிடுவது என்பதும் புண்ணியமே. இந்த பிரசாதம் இவர்களன்றி வெளியாட்கள் எவர்க்கும் கிடைக்காது. இறைவன் அருள் எங்களுக்கு கிட்டியதால் எனக்கும் என் நண்பருக்கும் அந்த பிரசாதம் கிடைத்த்து. இறைவன் தரிசனம் மிக அருகில் கிடைத்த்து ஒரு மகிழ்ச்சி, மேலும் இறைவன் திருவருட்பிரசாதம் கிடைத்த்து மேலும் மகிழ்ச்சி.

    இங்கே ஆதிமூலர் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த லிங்கம் தான் இங்கே விசேஷம். அனைத்துவிதமான பூஜைகளும் இங்கேதான் செய்யப்படுகிறது. இந்த லிங்கம்தான் திருமூலர் சித்தர் ஜீவசமாதி எனவும் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தை பதஞ்சலி சித்தரும், வியாக்ர பாதரும்  வழிப்பட்டனர் என்கின்றனர். திருமூலர் ஜீவசமாதி சிதம்பரத்தில் இருக்கிறது என்பர். நீங்கள் சிதம்பரம் சென்று நடராஜர் கோவிலில் திருமூலர் சித்தர் ஜீவசமாதி எங்கே என்று எவரையும் கேட்காதீர்கள். அங்கே அவர் சமாதிக்கு என தனி சன்னதி எதுவும் இல்லை. அங்கே அமைந்திருக்கும் ஆதிமூலர் சன்னதிதான் திருமூலர் சித்தரின் ஜீவசமாதி.


  3. சிதம்பரத்திலிருந்து சீர்காழி புறப்பட்டோம். சீர்காழி பழைய பேருந்து நிறுத்த்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சட்டைநாதர் ஆலயம். இவ்வாலயம் 1000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மிகப்பெரிய கோவில், மிகப்பிரமாண்டமான கொவில். இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு உமாமகேஸ்வர் சுமார் 10-12 அடி உயரம் இருப்பார். அவரை தரிசிக்கும் போது மெய் சிலிர்த்துவிட்ட்து.
  4. அங்கிருந்து கிளம்பி வைத்தீஸ்வரன் கோவில் வந்தடைந்தோம். இங்கே அருள்மிகு வைத்தியநாதர் சுவாமி, அருள்மிகு தையல்நாயகியை தரிசித்தோம். இவ்வாலயத்தில் தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. இவருக்கென தனி சன்னதி கோவிலின் உள்பிரகாரத்தில் அமைந்திருக்கிறது. இருப்பினும் என் உள்மனம் என்ன சொல்கிறதென்றால், அருள்மிகு வைத்தியநாத சுவாமி லிங்கம் தான் தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம் என்று. எப்படியாயினும், நீங்கள் இவ்வாலயத்தின் உள்பிரகாரத்தினுள் சென்றாலே பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணரலாம்.
  5. அங்கிருந்து மயிலாடுதுறை வந்தடைந்தோம். அங்கே புதுப்பேருந்து நிலையம் அருகே தங்கினோம். அங்கே சற்று ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் திருவாவடுதுறை சென்றோம். இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு கோமுக்தீஸ்வர்ர்/மாசிலாமணீஸ்வர்ர் ஆலயம் சென்றோம். இங்கே கோவிலின் வெளிப்பிரகாரத்தில் திருமூலர் சித்தரின் ஜீவ சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் திருமூலர் சித்தர் வாழ்ந்த இடம். மிக பிரம்மாண்டமான ஆலயம் இது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறி திருவலங்காடு நிறுத்த்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து செல்லும் தூரம்தான். தேவையென்றால் ஆட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.
  6. அங்கிருந்து திருவலங்காடு பேருந்து நிறுத்தம் வந்தடைந்து, மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறி குத்தாலம் வந்தடைந்தோம். அங்கிருந்து திருமணஞ்சேரி சென்றோம். குத்தாலத்தில் இருந்து அங்கு செல்ல நிறைய டாக்சி/ஆட்டோக்கள் உண்டு. திருமணஞ்சேரியில் இருக்கும் அருள்மிகு கல்யான சுந்தரேசுவரர் ஆலயம் சென்று அவரை தரிசித்தோம். இது ஒரு பரிகாரத்தலம். இங்கே வந்து பரிகாரம் செய்துகொண்டால், திருமணம் விரைவில் கைகூடும் என்று நம்பிக்கை இருக்கிறது.
  7. அங்கிருந்து கிளம்பி மயிலாடுதுறை வந்து தங்கினோம். 11.12.2016 அன்று அதிகாலை அருள்மிகு மயூரநாதர் ஆலயம் சென்றோம். அங்கே குதம்பை சித்தர் ஜீவசமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அவரை தரிசித்துவிட்டு, அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டோம்.
  8. கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பிரகதீஸ்வரரை தரிசித்தோம். கலைநயம் மிகுந்த ஆலயம். சிவலிங்கம் அத்துனை பிரமாண்டமாய் இருக்கும். கோவிலும் அவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும்.
  9. அங்கிருந்து கிளம்பி கும்பகோணம் வந்து அங்கே ஒரு அறையை எடுத்து சற்று ஓய்வெடுத்துவிட்டு, அங்கிருந்து தாராசுரம் சென்று அருள்மிகு ஐராவதீசுவரரை தரிசித்தோம்.
  10. பின்னர் அங்கிருந்து பட்டீஸ்வரம் சென்று அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயம் சென்று, துர்க்கை அம்மனை தரிசித்தோம். இங்கே ஓர் அதிசயமும் நிகழக்கண்டோம். அங்கே பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கையில், அருகே ஒரு சிவாலயம் இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கே செல்ல்லாம் என்று முடிவெடுத்து நடக்கலானோம். அந்த சிவாலயத்தை நோக்கி நடக்கையில் ஒரு பெரிய அறிவிப்பு பலகையை கண்டோம். அகத்தியர் சித்தரின் தரிசனம் அங்கிருக்கும் ஆலமரத்தில் காணப்படுகிறது என்று. அந்த ஆலயம் சென்றோம். அங்கே அகத்தியர் குடில் ஒன்று உள்ளது. அங்கே சென்று அகத்தியர் சித்தரின் தரிசனத்தை அங்கே அமைந்திருக்கும் ஆலமரத்தில் கண்டு உள்மகிழ்ந்தோம்.
  11. பின்னர் கும்பகோணம் வந்து, ஆதிகும்பேசுவரர் ஆலயம் சென்றோம். அங்கே ஆதிகும்பேசுவர்ரை தரிசித்தோம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில், ஆனந்த விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. அங்கே அகத்தியர் சித்தரின் ஜீவ சமாதி/சன்னதி அமைந்திருக்கிறது. அகத்தியரை கும்ப முனி என்றும் அழைப்பர்.
  12. அங்கிருந்து அடுத்த தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு இராமசுவாமி ஆலயம் வந்தோம். இதனை தென்னக அயோத்தி என்றும் அழைக்கின்றனர். நான் இதுவரை தரிசித்த இராமர் கோவில்களில் இது சற்று வித்தியாசமாக இருந்த்து. இராமர் பட்டாபிஷேக கோலத்தில் அருள்காட்சி புரிந்தார். இராமர், சீதை, இலக்குவனர், பரதன், சட்ருக்கணன், அனுமன் என அனைவரும் அருட்காட்சி புரிந்தனர். இந்த கோவிலில், சிவ்வாக்கியர் சித்தரின் ஜீவசமாதி பற்றி கேட்டறிந்தோம்.
  13. பெரிய வீதியில் கடைசிவரை நடந்து சென்று அங்கே மூர்த்தி தெரு என்று ஒரு தெரு வரும், அதில் திரும்பி சற்று தூரம் நடந்து சென்றால், சாத்தார தெரு வரும். அங்கே அமைந்திருக்கிறது சிவ்வாக்கியர் ஜீவசமாதி. சிவ்வாக்கியர் பிற்காலத்தில், திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்பர். நீங்கள் சிவ்வாக்கியர் என்று இணையத்தில் தேடினாலும், அவர் உருவத்தை உற்று நோக்கினால், அவர் நெற்றியில் நாம்ம் இருப்பதை காணலாம். இவர் சிவ்வாக்கியராக இருந்து, பின்னர் திருமழிசை ஆழ்வாராக தோன்றி இங்கே ஜீவசமாதி அடைந்தார். ஆனால் இக்கோவிலில் உள்ளே சென்று பார்த்தால் ஒரு அறிவிப்பு இருக்கும். இது திருமழிசை ஆழ்வார் சன்னதிதான் சிவ்வாக்கியர் சன்னதி இல்லை என்று. இவர்கள் இப்படி அறிவிப்பு வைக்கும்போதே புரிந்துவிட்ட்து, இதுதான் சிவ்வாக்கியரின் ஜீவ சமாதி/சன்னதி என்று.
  14. அங்கிருந்து வரும் வழியில், அஹோபிலம் மடம் – ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஆலத்தில் ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் கண்டோம்.
  15. 12.12.2016 அதிகாலை கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் பேருந்தில் ஏறினோம். நாகப்பட்டினம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வடக்கு பொய்கைநல்லூர் சென்றோம். இதனை பொய்யூர் எனவும் அழைக்கின்றனர். அங்கே அமையப்பெற்றிருக்கும், கோரக்கர் சித்தரின் ஜீவசமாதியில் அவரின் தரிசனம் கண்டோம். பிரபஞ்ச அலைகளை உம்முள் உணர எந்த ஒரு ஜீவசமாதி/சன்னதிக்கு சென்றாலும் ஒரு நாழிகை அதாவது 24 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
  16. பின்னர் அங்கிருந்து, வேளாங்கன்னி வந்தடைந்தோம். அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி சீராவட்டம் என்னும் ஊரில் இறங்கினோம். அங்கிருந்து எட்டுக்குடி ஊருக்கு ஆட்டோ வசதி உள்ளது. வேளாங்கன்னியில் இருந்தும் எட்டுக்குடிக்கு நேராக பேருந்து வசதி உள்ளது, இருப்பினும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிவரும். எட்டுக்குடி வந்து – அருள்மிகு எட்டுக்குடி முருகனை தரிசித்தோம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில், சித்திவிநாயகர் எழுந்தருளியுள்ளார். இதுவே வான்மீக சித்தரின் ஜீவசமாதி/சன்னதி ஆகும். அங்கே அவரின் தரிசனம் கண்டோம்.
  17. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி வந்து, அங்கிருந்து தஞ்சாவூர் வந்தடைந்தோம். அங்கிருந்து திருவையாறு வந்து, அங்கிருந்து கடுவெளி ஊருக்கு சென்றோம். தஞ்சையில் இருந்தும் கடுவெளி ஊருக்கு பேருந்து வசதி உள்ளது இருப்பினும் பேருந்து வசதி அடிக்கடி இல்லை ஆதலால் திருவையாறு வந்து மாறவேண்டும். கடுவெளி வந்தடைந்து அருள்மிகு ஆகாசபுரீசுவரர் தரிசனம் கண்டோம். இதே ஆலயத்தில் இருக்கும் கடுவெளி சித்தரின் ஜீவசமாதி/சன்னதியில் அவரின் திருவருள் தரிசனம் கண்டோம். இந்த ஊரில்தான் கடுவெளி சித்தர் வசித்தார். அவரின் பெயராலேயே இந்த ஊரும் அழைக்கப்படுகிறது.
  18. பின்னர், அங்கிருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தோம். அன்றைக்கு கார்த்திகை தீபம். தஞ்சை பிரகதீசுவர்ருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்த்து. அதை கண்குளிர காணும் அருட்பேறு பெற்றோம். இத்துடன் எங்கள் புனிதப்பயணம் இனிதே நிறைவுற்றது. அங்கிருந்து இரவு கோவைக்கு இரயிலில் பயணப்பட்டோம்.
ஓம் நம சிவாய...

* தினேஷ்மாயா *

0 Comments: