பால திரிபுர சுந்தரி

Tuesday, September 16, 2014



கடந்த சனிக்கிழமை நெமிலியில் அருள்பாலிக்கும் பால திரிபுரசுந்தரியை காண சென்றோம். சென்னையில் இருந்து வண்டியிலேயே சென்றுவிட்டோம். ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு சீக்கிரம் தூங்க வேண்டும், சனிக்கிழமை விரைவாக எழுந்து அங்கே சென்று பாலாவை காணவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு எதிர்பாராவிதமாக அதிக காய்ச்சல். என்னடா இது சோதனை, நாளை பாலாவை சென்று காண முடியாதா என்று மிகவும் வருந்தினேன். எப்போதும் மாத்திரை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் நாளை நிச்சயம் நெமிலி சென்றாக வேண்டும் என்பதால் மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கிவந்து மாத்திரை எடுத்துக்கொண்டேன். காலையில் காய்ச்சல் குறைந்திருந்தது ஆனால் எனக்கு உடலில் குளிர் கொஞ்சம் தெரிந்தது. அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்று அதிகாலை முதலே மழை தூரிக்கொண்டிருந்தது. இதென்ன புது சோதனை என்று சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். பின்னர் கடவுளை மனதில் பிரார்த்தனை செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன். என்ன நடந்தாலும் சரி, பாலாவை சந்தித்தே ஆகவேண்டும் கிளம்பினேன். 

  ஒருவழியாக பால பீடம் வந்து சேர்ந்தோம். உள்ளே சென்றதும் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி. அப்படியொரு நிம்மதி. நான் வண்டியில் செல்லும்போதே நினைத்தேன். அடடா பூ வாங்க மறந்துவிட்டோமே என்று. Dairy Milk மிட்டாயாச்சும் வாங்கி சென்றிருக்கலாமோ ? என்றும் என் மனதில் உதித்தது. ஒரு அம்மா ஸ்தானத்தில் பார்க்கும் தெய்வத்துக்குத்தானே பூ வாங்கி செல்லவேண்டும். குழந்தையான பாலாவிற்கு மிட்டாய் வாங்கி செல்லலாமே என்று நினைத்தேன். ஆனால் வாங்கமுடியவில்லை. இருப்பினும் மனதிற்கு ஒரு பெரிய ஆறுதல் காத்திருந்தது. பீடத்தினுள் சென்றதும், அங்கே இருந்தவர் கேட்டார், எதாச்சும் வாங்கி வந்திருக்கீங்களா என்றார். இல்லை சாமி, இருங்க போய் மாலை வாங்கி வருகிறேன் என்று சொன்னதற்கு, அதெல்லாம் வேண்டாம், இங்கே மிட்டாய் (சாக்லேட் பாக்கெட்) இருக்கு அதையே வாங்கி கொடுங்கள் போதும். அதுதான் பாலாவிற்கு பிடிக்கும் என்றார். அப்போதுதான் என் மனதிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது. பாலாவிற்காக நான் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்தேனோ அதுவே அவளுக்காக வாங்க முடிந்தது.

அப்புறம் நீங்கள் மேலே பார்ப்பது பல ஓவியர்கள் வரைந்த பாலாவின் உருவங்களில் ஒன்றே ! ஆனால் அங்கே சென்று பார்த்தால் பாலாவில் விக்ரகம் கட்டைவிரல் அளவிலேயே இருக்கிறது. பாலா உருவான கதையை அங்கே இருப்பவர் சொன்னார். பாலா விரும்பினால் மட்டுமே இங்கே வரமுடியும். நீங்கள் பாலாவை பார்க்க வரவில்லை, அவள்தான் உங்களை பார்க்கவேண்டுமென்று நினைத்து வரவைத்திருக்கிறாள் என்றார். இங்கே எப்படிவேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் நிம்மதியுடனே செல்வீர்கள் என்றார். 100 பேர் வர நினைத்தால் 10 பேருக்கு மட்டுமே இங்கு வர வாய்ப்பு கிடைக்கும் என்றார். அதுவும் பாலாவின் விருப்பம் இருந்தால் மட்டுமே. இங்கே வந்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் தவறில்லை, ஆனால், இது செய்தால் உனக்கு அது செய்கிறேன், இது செய்கிறேன் என்றெல்லாம் வியாபாரம் செய்ய வேண்டாம். பாலா ஒரு குழந்தை. அவள் நீங்கள் கேட்கும் முன்பே கொடுக்கும் குணம் கொண்டவள். மனதார அவளை நம்புங்கள். அவள் உங்கள் உள்ளேதான் இருக்கிறாள். அவள் எப்போதும் உங்களுடனே இருக்கிறாள். 

ஒருமுறை அங்கே சென்று வாருங்கள். பாலா விரும்பினால் நிச்சயம் அவள் உங்களை காண அழைப்பாள். பாலாவின் அடுத்த அழைப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

* தினேஷ்மாயா *


0 Comments: