மரணம் என்ற அழகு

Saturday, July 28, 2012




மரணத்தை கண்டு அழுபவனே!
மரணம் உன் அறியாமையைக் கண்டு
சிரிக்கிறது

மரணத்தின் இரக்கமற்ற கை
உனக்கு பிரியமானவற்றைப்
பிடுங்கிக்கொள்கிறது என்று
ஏசுகிறாய்

அந்த பிரியமே
மரணத்தால்தான்
உண்டாகிறது என்பதை
நீ அறிவதில்லை

பறிபோகாதவற்றின் மீது
பிரியம் உண்டாவதில்லை

ஒன்றையே பற்றிக்கொண்டிருக்கும்
உன் பார்வைக்கு
மற்றவற்றை அறிமுகம் செய்வது
மரணம்தான்

பகல் மரணமடையவில்லை என்றால்
அழகான நட்சத்திரங்களை
நீ பார்க்கமாட்டாய்

அழகிய மலர்
அற்ப ஆயுளில்
மடிந்து விடுகிறதே என்று
வருந்துகிறாய்

மலரின் அந்த அற்ப ஆயுள்தான்
அதன் அழகை
நீ அதிகமாக ரசிப்பதற்குக்
காரணமாகிறது

நிரந்தர அழகு
கவர்ச்சியை இழந்துவிடும்

எது அதிக அழகோ
அது விரைவில்
மரணமடைகிறது

மரணம் அவலட்சணம் என்று
அருவருக்கிறாய்
ஆனால் நாள்
அதன் மரணத்தில்
அழகாய் இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

விடியலை அழகு என்கிறாய்
அது இரவின் மரணம் அல்லவா?

புதுமையை வரவேற்பவனே!
பழமையின் மரணம் இல்லையென்றால்
புதுமை ஏது?

மரணம் நஷ்டம் என்கிறாய்
அது லாபமாக இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

வயலில் அறுவடை என்றால்
மகிழ்கிறாயே
மரணமும்
அத்தைத்தானே செய்கிறது

மரணம் என்றால்
முடிவு என்கிறாய்
அது தொடக்கமாகவும் இருப்பதை
நீ கவனித்ததில்லையா?

ஒரு பூவின் மரணத்தில்தான்
காய் பிறக்கிறது

கன்னிமையின் மரணத்தில்தான்
தாய்மை பிறக்கிறது

மரணம் என்றால்
அழிவு என்கிறாய்
அது நிறைவு என்பதை
நீ கவனித்ததில்லையா?

ஒரு ராகம்
நிறைவடையும்போது
நின்று போகிறதல்லவா?


- “ஆலாபனை” நூலில் இருந்து
ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான்


மரணம் பற்றி ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.. மனதை தொட்ட கவிதையாதலால் இங்கே பதிந்தேன்.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: