அன்பின் அத்தனையும் நீயே

Wednesday, April 08, 2020


       அன்பின் அர்த்தம் நீ தான். தாயின் அன்பிற்குப்பிறகு நான் அதிகம் விரும்பிய அன்பு உன்னுடையது. வளர்பிறை போல என்றும் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது உன் அன்பு. காரணமின்றியே சண்டை வரும் நமக்குள். ஆனாலும், நான் சமாதானம் செய்யாமலேயே உன்னை என்னிடம் பேச வைத்துவிடும் உன் அன்பு. நான் உன்னை நேசிப்பதைவிட உன் அன்பை அதிகம் நேசிக்கிறேன். இரண்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. உனக்கு உருவம் உண்டு ஆனால் உன் அன்பிற்கு உருவம் இல்லை. இருப்பினும், உன் அன்பின் வெளிப்பாடாக உன் செயல்கள் இருக்கிறதே. குழந்தையை வளர்ப்பதுபோலவே என்னையும் வளர்த்தெடுக்கிறாய் நீ. உருவத்தில் வளர்ந்து உள்ளத்தில் வளர்ச்சி இல்லாத என் மனநிலையை என்னைவிட நன்கு உணர்ந்தவள் நீயே. நான் உன்னிடம் கோபம் கொண்டதைவிட நீ என்மேல் கோபம் கொண்டதே அதிகம். என்மேல் நீதான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாய் என்பத அடையாளமோ இந்த கோபம் எல்லாம் ? கனவிலும் நினைவிலும் நீதான் என்று பாடல் வரிகளில் கேட்டதுண்டு. அதன் அர்த்தம் என்னவென்பதை என் மனதார உணர்கிறேன். சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி இப்படிப் பாடுவார் ”இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க”. அதுபோலவே நீயும் எனக்கு. நான் இமைக்கும் அந்த நொடிகளிலும்கூட என் மனதைவிட்டு என் நினைவிட்டு நீங்காமல் என்னுள்ளேயே இருக்கிறாய் நீ. காலம் கடந்து, நடை தளர்ந்து, நரை படர்ந்து, பற்களால் எதையும் அசைப்போட முடியாத அந்த கடைசி நாட்களில் நான் உன் அன்பையும் நம் காதலையும் அந்த பேரழகான நினைவுகளையும் ஆனந்த கண்ணீரோடு அசைப்போட்டுக்கொண்டே இருப்பேனடி...

* தினேஷ்மாயா *

0 Comments: