பரியேறும் பெருமாள்

Wednesday, October 03, 2018




   இன்று இந்த திரைக்காவியத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை, உணர்வுகளை நன்றாக பிரதிபலித்தது. ஆதிக்க சாதியினர் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சிலர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒதுக்கி வைத்து, ஒதுக்கி வைத்து  பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எத்தனையோ தமிழ் சினிமாக்கள் சாதிக் கொடுமையை நமக்கு காட்ட முற்பட்டாலும் இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் இது ஒரு திரைப்படமாக இல்லை. திரைப்படத்திற்கான எந்த ஒரு தேவையில்லாத அம்சங்களையும் இதில் அதிகம் காண முடியவில்லை. அதனாலேயே இது ஒரு சமூகத்தினரின் வாழ்க்கை முறை என்பதை நான் உணர்ந்தேன். திரைப்படத்தின் கதை, திரைக்கதை, குறிப்பாக வசனங்கள் மிகவும் ஆழமாக இருந்தது. இசை.... இப்படத்திற்கு இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி கதையோடு பொருந்தி இருந்தது பாடல் வரிகளும் அருமை. படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை நாம் ஒரு மூன்றாவது ஆளாக இருந்து பார்க்காமல் அந்த வலியை நம்மையே உணர வைத்தது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

   வணக்கம் வணக்கமுங்க ,ரயில் விட போலாமா மற்றும் கருப்பி  இந்த மூன்று பாடல்கள் என்னை அதிகம் கவர்ந்தது. வசனம் இந்த படத்தின் இன்னொரு கதாநாயகன் என்றும் சொல்லலாம். சில இடங்களில் வசனம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக காலேஜ் பிரின்சிபாலிடம் நாயகன் பேசும் காட்சியாகட்டும் அல்லது கதையின் பிற்பாதியில் காலேஜ் ப்ரின்ஸ்பால் நாயகனுக்கு அறிவுரை சொல்லும் காட்சியாகட்டும், நாயகன் படத்தின் முடிவில் நாயகியின் அப்பாவிடம் பேசும் வசனமாகட்டும் அந்த இடங்களிலெல்லாம் வசனங்கள் ஏதோ ஒரு எட்டமுடியாத தூரத்திற்கு சென்று விட்டது. அவை வெறும் வசனம் அல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வலி. அந்த வலியின் பிரதிபலிப்புதான் இந்த மாதிரி ஆழமான வசனங்கள்.

பல நாள் கழித்து போடு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் இது அவர் இதுபோல சமூகத்திற்கு தேவையான இதுபோன்ற பல இப்படங்களை நமக்குக் கொடுக்க வேண்டும் அவருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் மற்றும் இத்திரைப்படத்தின் அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் அதைவிட மேலாக இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை இந்த சமூகத்திற்கு இந்த தேவையான காலகட்டத்தில் கொடுத்தமைக்காக என் மனமார்ந்த நன்றிகளும்கூட...

*  தினேஷ்மாயா *

0 Comments: