ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி ஆலயம்

Saturday, May 13, 2017

இம்மாதம் பத்தாம் தேதி விடுமுறை தினம் என்பதால், அன்றைய நாளை இறைவன் சன்னதியில் இருக்கலாம் என்று நினைத்து கோவில் ஏதாவது செல்லலாம் என்று முடிவு செய்தேன். 

கும்பகோணம் அருகில் இருக்கும் திருநாகேசுவரம், உப்பிலியப்பன் ஆலயம், அய்யாவாடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் சென்றேன். 




அதிகாலை முதல் ஆளாக திருநாகேசுவரம் சென்றேன். கோவில் நடை திறக்கவில்லை. காத்திருந்து, முதல் ஆளாக இறைவன் தரிசனம் காணப்பெற்றேன். அருள்மிகு நாகநாத சுவாமி, பிறையணி அம்மன் தரிசனம் கண்டேன். ராகு பகவான் தரிசனமும் காணப்பேற்றேன். திருநாவுக்கரசர் சொல்லியிருக்கிறார். இக்கோவிலை தரிசிப்பதென்பது ஒருவர் வாழ்வில் கிடைக்கும் பாக்கியம் என்று. அந்த பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.




அங்கிருந்து, அருகில் இருக்கும் உப்பிலியப்பன் சன்னதி சென்றேன். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருத்தலம் இது. சென்ற மாதம் திருப்பதி சென்றேன், இம்மாதம் தென் திருப்பதி அழைத்து வந்து தன் தரிசனம் காட்டுகிறார் பெருமாள். அவர் கருணைக்கு ஏது ஈடு ? 






பின், அங்கிருந்து அருகில் இருக்கும் அய்யாவாடி ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் சென்றேன். இந்த ஆலயம் செல்ல வேண்டும் என்றுதான் முதலில் முடிவு செய்தேன். பின்னரே மேலே சொன்ன இரு ஆலயங்களும் அருகில் இருப்பதால் அதனையும் தரிசித்தேன். ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி - மிகவும் சக்தி வாய்ந்தவள், அதர்வன வேதத்துக்கு தலைவி என்று சொல்வார்கள். இங்கு அமாவாசை அன்று நடக்கும் யாக தீயில் காய்ந்த மிளகாய்களை போடுவார்கள். ஆனால் அதன் நெடி ஒருபோதும் பக்தர்களை வருத்தியதே இல்லை எனவும், அதிலிருந்து நெடியே வெளிப்படாது எனவும் சொல்ல படித்திருக்கிறேன். நான் இங்கு சென்ற தினம் பௌர்ணமி. அமாவாசை அன்று மட்டும் காலை 6 மணிக்கு ஆலயம் திறப்பார்கள். மற்ற நாட்களில் 8 மணிக்குதான் திறப்பார்கள். நான் 7 மணிக்கே சென்று ஒரு மணிநேரம் அவள் சன்னதியில் காத்திருக்கும் பேறு பெற்றேன். தீய சக்திகளில் இருந்து காத்துக்கொள்ளவும், பரிகாரம் செய்யவும் தான் இங்கே பெரும்பாலும் வருவார்கள். சில தினங்களுக்கு முன்னர் ப்ரத்யங்கிரா தேவி என் சிந்தையில் வந்தாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், எந்த புத்தகத்திலோ, கானொளி காட்சியிலோ எங்குமே சமீபத்தில் ப்ரத்யங்கிரா தேவியை பற்றி படிக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. அவள் அருள் எனக்கு இருப்பதால்தான் அவளே என் சிந்தையில் வந்தாள். உடனே இணையத்தில் அவளைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன்.அவளுக்கான ஆலயம் எங்கிருக்கிறது என்று தேடினேன். அங்கே செல்ல சமயம் தேடிக்கொண்டிருந்த சமயம் அவளே என்னை தன் ஆலயம் அழைத்தாள். அவளின் தரிசனம் கண்டு அவள் சன்னதியில் கொஞ்ச நேரம் தியானம் செய்துவிட்டு வந்தேன். அவளின் உருவம் உக்கிரமாக இருக்கும், ஆனால் கருணைக்கடல் அவள். அவளை அனைவராலும் வழிப்பட முடியாது. அவள் நினைத்தால் மட்டுமே நாம் அவளை வணங்கிட முடியும் என்பார்கள். அவள் அருள் எனக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வேண்டியதை அருளும் கருணை கடல் - ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி. அந்த ஆலயத்தின் அருமை பெருமைகளை சொல்லும் இணைய பக்கங்கள் ஏராளம். அவள் உருவத்தை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று அந்த ஆலயத்தில் எழுதி இருந்தார்கள். அடுத்த கணமே முடிவு செய்துவிட்டேன். இனிமேல் ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவியை என் மனதிலேயே வைத்து வழிபடலாம் என்று. என் உள்ளமே கோவில் தானே !
மன ஒழுக்கத்தோடும், உள்ளன்போடும், தூய்மையான பக்தியுடனும் அவளை வணங்கினால், வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கூட வருவாள், அனைத்து செயலிலும் வெற்றியை கொடுப்பாள்..


 - அவள் ஆசியுடன்

* தினேஷ்மாயா *

0 Comments: