சமூக பொறுப்பு..

Sunday, August 28, 2011



சமூக பொறுப்பு..
     சமூக பொறுப்பு என்பது யாரும் சொல்லி வரக்கூடாது… எதை ஒருவர் நமக்கு செய்தால் அது நமக்கு பிடிக்காதோ அல்லது நமக்கு தீமையோ அதை நாம் மற்றவர்களுக்கு செய்யாமல் இருப்பதே நமது சமூக பொறுப்பை காட்டிவிடும். இருக்கும் இடத்திற்கு ஏற்ப நாம் நடந்துக் கொள்ளவேண்டும். மற்றவர்க்கு எந்த ஒரு இடைஞ்சலும் இன்றி நாம் நமது சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்…
     சில நாட்கள் முன்னர், ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரை காண சில நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அது மாலை நேரம். பனிக்காலம் என்பதால் பனி நன்றாக இறங்கியிருந்தது. மருத்துவரை காண வந்த நோயாளிகள் பெரும்பாலும் குளிர், ஜூரம், சளி என்றுதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கே நோயாளி ஒருவருடன் வந்திருந்த உறவினர் ஒருவருக்கு போன் வந்தது. அவரும் அதை எடுத்து பேசத் தொடங்கினார். சிக்னல் சரியாக இல்லை போல. அவர், தான் இருப்பது மருத்துவமனை என்பதையும் மறந்து கத்த தொடங்கிவிட்டார். அங்கிருந்த அனைவருக்கும் இது கொஞ்சம் எரிச்சலை தந்தது. பொது இடங்களில் மற்றவருக்கு தொல்லை இல்லாதபடி பேசலாமே. நீங்கள் இப்படி பேசுவது, நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அது உங்கள் பெயரை கொஞ்சம் குறைக்கவே செய்யும்.
     இவராவது சரி. கத்தி பேசத்தான் செய்தார். இன்னும் சிலர் இருக்கின்றனர். தங்கள் ரிங்டோனை ஊருக்கே கேட்கும்படி வைத்திருப்பர். அதை கொஞ்சம் சத்தம் கம்மியாக வைத்தால் என்ன. நீங்கள் எப்போதும் பிசியாக இருக்கிறதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள் போல. ஆனால் உங்கள் போன் இப்படி அதிக சத்ததுடன் ஒலிக்கும்போது மற்றவர்கள் உங்களைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை என்ன தெரியுமா ?
“ வெட்டிப்பயன் சார்.. இவனுங்க எப்பவுமே இப்படித்தான்… ”
தேவையா இந்த அவப்பெயர்.
     இன்னும் சிலர் பேருந்துகளில் செல்லும்போது சினிமா பாடல்களை அதிக சத்ததுடன் ஒலிக்கவிட்டு பேருந்துக்கே பணம் வாங்காமல் சவுண்ட் சர்வீஸ் செய்வார்கள். பாடல் கேட்பது உங்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அதற்காக மற்றவரையும் கேட்க வற்புறுத்துவது என்ன நியாயம். உங்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதை செய்கிறீர்களா இல்லை வேறு எதற்காச்சும் செய்கிறீர்களா என்று புரியவில்லை. நீங்கள் எதை செய்தாலும் சரி, மற்றவர்களுக்கு தொல்லை தராமல் செய்தால் உங்களுக்கும் நன்றாக இருக்கும், மற்றவர்களுக்கும் நன்றாக இருக்கும்.. கொஞ்சம் யோசிச்சு சமூக பொறுப்போடு செயல்படுங்கள் நண்பர்களே…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: