மனிதனின் எதிர்கால வரலாறு

Tuesday, September 18, 2018

   


     நாம் இன்றைக்கு அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கும் குறிப்புகளை வைத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் சமூக கட்டமைப்பை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி அவர்களின் கலை, அரசியல், தெய்வ வழிபாடு, ஆட்சி முறை, அறிவியல் சார்ந்த அறிவு, தொழில்நுட்பம், இலக்கிய அறிவு இவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

   இது நம் முன்னோர்களின் வரலாறு. சரி, அது இருக்கட்டும், நம்மைப் பற்றிய நிகழ்கால குறிப்புகளை எதிர்காலத்தில் நம் சந்ததியினர் ஆராய்ந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? நம்மைப் பற்றிய குறிப்புகள் ஏதாவது கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கல்வெட்டுகளில், பாறைகளில்,  பானைகளில், ஓலைச்சுவடிகளில் இப்படி பல பொருட்களில் தங்கள் குறிப்புகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.

   நம் எதிர்கால வரலாறு என்னவாக இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா ?

   நம்மைப் பற்றி ஆராயும் எதிர்கால அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு நம்மைப் பற்றி குறிப்புகள் என்ன கிடைத்துவிடப் போகிறது? நாம் எழுதும் புத்தகங்கள் அனைத்தும் காகிதத்தில் பிரசுரிக்கப்படுகிறது. காலப்போக்கில் காகிதம் மழுங்கிவிடும். நம்முடைய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இப்போது இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. ஒருவன் இன்னொருவனுடன் எப்படிப் பேசினான், இந்த சமூகத்தில் என்ன மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் இருந்தது, இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன, இந்த சமூகத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது, இக்காலத்தில் அரசியல் எப்படி இருந்தது, இந்த அரசியலில் எது மாதிரியான சூழ்ச்சிகள், சாதனைகள் இருந்தது இது போன்ற எந்த ஒரு குறிப்புகளும் நம் எதிர்கால தலைமுறையினருக்கு விட்டு செல்ல முடியாது.

  ஏனென்றால் நம்மை பற்றிய அனைத்து குறிப்புகளும் தகவல்களும் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத்தவிர வேறு எங்கும் நம்மால் குறிப்புகளை விட்டு செல்ல முடியாது. அதற்கு எவரும் முயன்றதும் இல்லை. நம்மைப் பற்றிய குறிப்புகளை விட்டுச் செல்வதற்கு இங்கே எவருக்கும் விருப்பமில்லை அல்லது நேரமில்லை என்றும் கூறலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் தங்களின் அரிய நேரத்தை பயன்படுத்தி கல்வெட்டுகள் செதுக்கினார்கள் பாறைகளில் செதுக்கினார்கள் பானைகள் செய்து அவர்களின் வாழ்க்கை முறையை அதில் சொல்லி இருந்தார்கள். ஓலைச்சுவடிகள் மூலம் தங்களின் இலக்கியத்தை பறைசாற்றினார்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எதற்கெடுத்தாலும் ஒரு ஸ்மார்ட்போன் அதில் பல்லாயிரக்கணக்கான Apps இன்ஸ்டால் செய்துவிட்டு அதிலேயே நமது வாழ்க்கை முழுவதையும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அதுவும் நாம் பயன்படுத்தும் இந்த கணினி, செல்போன் இது போன்ற உபகரணங்கள் காலப்போக்கில் அழிந்து விடக்கூடியது. நாம் புதிதாக வாங்கிய செல்போன் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாத  நிலைக்கு தள்ளப்படுகிறது. அதாவது எந்த ஒரு மின்னனு சாதனமாக இருந்தாலும் அதிகபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பிழைக்க முடியாது. அப்படி இருக்கையில் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் தலைமுறையினருக்கு நாம் நம்மை பற்றிய குறிப்புகளை எடுத்து செல்வோம்?

   இதைப்பற்றி இப்போது இருக்கும் வரலாற்று ஆய்வாளர்களும் சரி, அகழ்வாரய்ச்சி செய்பவர்களும் சரி, ஏன் நம் மக்களுக்கும் அதைப் பற்றி பெரிதாக கவலை ஒன்றும் இல்லை. வெறும் இணையத்தை மட்டுமே நம்பி நம் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வரலாற்றை ஒப்படைத்து விட முடியுமா? அது நியாயம்தானா ?

* தினேஷ்மாயா *

0 Comments: